தூண்களின்றி வானங்களை

வானத்துக்கும் பூமிக்கும் இடையே எந்தத் தூண்களும் இல்லை என்பதை நாம் காண்கிறோம். வானத்தைப் பற்றிப் பேசும் போது தூண்களில்லாத வானம் என்று தான் அனைவரும் குறிப்பிட்டு வருகிறோம். ஆனால் திருக்குர்ஆன் வழக்கத்துக்கு மாற்றமான வர்னணையுடன் வானத்தைப் பற்றி பேசுகிறது.
நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான்.
-திருக்குர்ஆன் 13:2

நீங்கள் பார்க்கக் கூடிய தூண் இன்றி வானங்களைப் படைத்தான்.
-திருக்குர்ஆன் 31:10
 
 
நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களைப் படைத்தான் எனக் கூறப்படுகிறது. 'வானங்களுக்கும், பூமிக்கும் தூண்கள் உள்ளன; ஆனால் அவைகளைப் பார்க்க முடியாது' என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.
பார்க்க முடியாத தூண்கள் இருக்கின்றனவா? என்றால் நிச்சயமாக இருக்கின்றன. உலகத்தில் இருக்கின்ற பூமி உள்ளிட்ட எல்லாக் கோள்களும் அவற்றிற்குரிய இடங்களில் நீந்துவதற்கு, அவற்றைக் குறிப்பிட்ட வேகத்துடன் இழுத்துப் பிடித்திருக்கின்ற ஒரு ஈர்ப்பு விசை எல்லாப் பகுதியிலும் பரவியிருப்பது தான் காரணம். இந்த ஈர்ப்பு விசையின் காரணமாகத் தான் ஒவ்வொரு கோளும் அந்தரத்தில் எவ்விதப் பிடிமானமும் இன்றி தொங்குகின்ற காட்சியைப் பார்க்கின்றோம்.
எனவே சில நூற்றாண்டுகளுக்கு முன் மனிதன் கண்டறிந்த ஈர்ப்பு விசை எனும் கண்டுபிடிப்பை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறுகிறது.
வானத்திற்கும், பூமிக்கும் எந்தத் தூண்களும் இல்லை என்று தெளிவாகத் தெரியும் போது, முஹம்மது நபியவர்கள் 'பார்க்கின்ற தூண்களின்றி' என்ற வார்த்தையைத் தேவையில்லாமல் பயன்படுத்தி இருக்க முடியாது.
வானங்களையும், பூமியையும் படைத்தவன் பேசுகின்ற வார்த்தையாக இருப்பதால் தான் 'பார்க்கின்ற தூண்களின்றி' என்ற சொல்லைப் பயன்படுத்தி, பார்க்காத தூண்கள் இருக்கின்றன என்ற உண்மையை மறைமுகமாகக் குறிப்பிடுகிறான்.


திருக்குர்ஆன், முஹம்மது நபியின் கற்பனையல்ல; ஏக இறைவனின் கூற்றுத் தான் என்பதற்கு மற்றுமொரு சான்றாக இது அமைந்துள்ளது.
பூமிக்கும் வானத்துக்கும் இடையே ஈர்ப்பு விசை இயங்குகிறது என்பதை வேறு வார்த்தைகள் மூலம் மற்றொரு வசனத்திலும் இறைவன் தெளிவுபடுத்துகிறான்.
வானங்களும், பூமியும் இடம் பெயராதபடி அவனே தடுத்து வைத்துள்ளான். அவ்விரண்டும் இடம் பெயருமானால் அவனன்றி எவரும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது.அவன் சகிப்புத் தன்மையுடையவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.
-திருக்குர்ஆன் 35:41

வானங்களும், பூமியும் விலகி விடாமல் இருக்குமாறு கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது.
வானங்களும், பூமியும் ஒன்றோடு ஒன்று ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒன்றின் ஈர்ப்பு விசை அதிகரித்தாலோ, குறைந்தாலோ அவை சிதறிச் சின்னா பின்னமாகி விடும் என்ற கருத்து இதனுள் அடங்கியிருப்பதை யாரும் அறியலாம்.
புவி ஈர்ப்பு விசை பற்றி மற்றொரு கோணத்திலும் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.
ஆகாய வெளியில் வசப்படுத்தப்பட்ட நிலையில் பறவையை அவர்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ்வைத் தவிர யாரும் அவற்றை (அந்தரத்தில்) நிறுத்தவில்லை. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
-திருக்குர்ஆன் 16:79


வானங்களிலும், பூமியிலும் உள்ளவையும், அணிவகுத்த நிலையில் பறவைகளும் அல்லாஹ்வைத் துதிப்பதை நீர் அறியவில்லையா? ஒவ்வொன்றும் தனது வணக்கத்தையும், துதித்தலையும் அறிந்துள்ளன. அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன்.
-திருக்குர்ஆன் 24:41

அவர்களுக்கு மேலே பறவைகள் (சிறகுகளை) விரித்தும், மடக்கியும் இருப்பதை அவர்கள் காணவில்லையா? அளவற்ற அருளாளனைத் தவிர வேறு எதுவும் அவற்றைக் கீழே விழாது தடுத்துக் கொண்டிருக்கவில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன்.
திருக்குர்ஆன் 67:19
பறவைகளைப் பற்றிக் குறிப்பிடும் போது 'அவை ஆகாயத்தில் வசப்படுத்தப்பட்டுள்ளன. உமது இறைவன் தான் அதை வசப்படுத்தி இருக்கின்றான்' என்று இறைவன் கூறுகிறான்.
இதில் மிகப் பெரிய அறிவியல் உண்மை உள்ளடங்கி இருக்கிறது. பூமி தன்னைத் தானே சுற்றுவதை நாம் அறிவோம். தன்னைத் தானே சுற்றுவதுடன் சூரியனையும் இந்தப் பூமி ஒரு வருடத்தில் வட்டமடித்து முடிக்கிறது. சூரியனைச் சுற்றுவதற்காக அது செல்கின்ற வேகம் வினாடிக்கு 250 கிலோ மீட்டர் தூரம்.
வினாடிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் பூமி வேகமாக நகரும் போது, பூமி நகர்கின்ற திசையில் இருக்கின்ற அந்தப் பறவைகள் மீது மோத வேண்டும்.
பூமியின் ஈர்ப்பு சக்தி ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை இருப்பதால் பூமி, அந்தப் பறவையைச் சேர்த்து இழுத்துக் கொண்டே போகிறது. முன் பக்கம் இருக்கும் பறவையை தள்ளிக் கொண்டும் பின்பக்கம் இருக்கின்ற பறவையை இழுத்துக் கொண்டும் பூமி நகர்கிறது. முன்பக்கம் பறக்கின்ற பறவையைத் தள்ளாமல் இந்தப் பூமி வேகமாகச் சென்றால் எந்தப் பறவையும் பறக்க முடியாது, பூமியில் மோதி செத்து விடும்.
இந்தப் பேருண்மையைத் திருக்குர்ஆன் அற்புதமான சொற்களால் குறிப்பிடுகிறது. இதுவும் திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்கு மறுக்க முடியாத சான்றாகும்.
ஆசிரியர்:பீ.ஜைனுல் ஆபிதீன்
நூலின் பெயர்: வருமுன் உரைத்த இஸ்லாம்?

Post a Comment

0 Comments