அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


ஒன்று பட என்ன வழி?

(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். (4:65)
இன்று தேசிய, சர்வதேச ரீதியில் உலகின் எத்திசை நோக்கிலும் எம் முஸ்லிம் சமூகம் சிதறிய செங்கற்களாய் தூர்ந்து சுவடிழந்துப் போயிருப்பதைக் காணமுடிகிறது. கட்சி, அரசியல், அமைப்புகள், ஜமாஅத்துகள், மத்ஹபு, தரீக்கா என்று பல் பரிமாணங்களில் எம் உம்மத் பிரிந்து பிளவு பட்டு நிர்க்கதியாய் நிற்கிறது. கருத்து முரண்பாடுகளை 
   


களைவதற்கான கைங்கரியம் அறியாது கைகலப்பிலும், கலாட்டாவிலும் ஈடுபடும் ஈனச் செயல்களால், அன்னியர் அங்களாய்க்கும் அளவுக்கு நாம் அசிங்கப்பட்டு நிற்கிறோம். எங்கும் முரண்பாடு..எதிலும் முரண்பாடு..சமுதாய விழிப்புணர்வு மேடைகளான ஜூம்ஆ அரங்குகள், பணிப்போர் நிகழ்த்தும் சமர்க்களமாக புதுப்பரிமாணம் எடுத்துள்ளன. பாமர மக்கள் பள்ளிவாயல்களே வேண்டாம் என்று விரண்டோடும் அளவுக்கு விரிசல் விஷ்பரூபமாய் வியாபித்துவிட்டது.

புற்று நோயாய்ப் புறையோடி முஸ்லிம் உம்மத்தின் உடம்புக்கு ஊருவிளைவிக்கும் இப்போக்கினை, வஹியின் அடிப்படையில் வழிநடாத்தத் தெரியாத பல அறிஞர்கள், பல ஜமாஅத்துகள் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கருத்துக்களை அள்ளி வீசி, அழுகிய புண்ணை அகலப்படுத்தும் அசிங்கத்தையும் அரங்கேற்றி வருகின்றனர்.

முஸ்லிம் சமூகம் சந்திக்கும் அத்துனை நிர்க்கதி நிலைக்கும் அடிப்படைக்காரணம் எமக்கு மத்தியில் நிலவும் ஒற்றுமையின்மை தான். ஒற்றுமையின்மைக்கான பிரதான காரணம் சத்திய இஸ்லாத்தை சமரசம் இன்றி எடுத்துரைக்கும் தீவிரப் போக்கே. பிரிந்திருக்கும் சமுதாயத்தை மீண்டும் இறுகப் பிணைக்க வேண்டுமானால், நாம் சமுதாயத்தில் நிலவும் சில ஷிர்க்கான காரியங்களைக் கூட கண்டு கொள்ளாது விட்டுவிட வேண்டும். தர்கா வழிபாடும் அவ்லியா பூஜைகளும் நிகழ்வதை எதிர்க்கக் கூடாது. நபி வழிக்கு மாற்றமாக இடம்பெற்று வரும் கூட்டு துஆ, கத்தம் பாதிஹா, மவ்லூது, தராவீஹ் தொழுகை, சுபஹ் குனூத், பெண் வீட்டு விருந்து, சீதனத் திருமணம் உள்ளிட்ட ஊர் வழக்காறுகளை உத்வேகமாய் எதிர்த்து பிரச்சாரம் செய்யக் கூடாது. சமுதாயத்தை ஒன்று படுத்துவதே ‘பர்ளு’(கடமை). ஊர் ஒற்றுமைக்காய் சத்தியத்தை சற்று விட்டுக் கொடுத்துத் தான் போக வேண்டும் போன்ற அல்குர்ஆனுக்கும் அஸ்ஸ_ன்னாவுக்கும் வேட்டு வைக்கும் அபத்தங்களை அறிவுரைகளாக அள்ளி வழங்கும் அறிஞர் (?) பெருந்தகைகளின் எழுத்துக்களும் பேச்சுக்களும் அதிகரித்து வருவதை பரவலாகக் காண முடிகிறது.

மார்க்கத்தை மையமாக வைத்து பல கூறுகளாய் பிரிந்து பிளவுபட்டிருக்கும் மக்களை: நபி வழியில் மட்டும் பயணிக்காது புது வழிகளில் தடம் பதித்து தவறிப்போன மக்களை: இறையச்சமின்றி வட்டி, குடி, கூத்து, கும்மாளம் என்று தரங்கெட்டு நடக்கும் மக்களை நாம் விமர்சிப்பதால், அவர்களின் மார்க்க விரோத செயற்பாடுகளை நாம் எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதால் ஒற்றுமை குழைகிறதாம்! ஐக்கியம் அழிவுறுகிறதாம்! சகோதரத்துவம் சமாதியடைகிறதாம்! தவறிழைப்பவர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். அதைத் தட்டிப் கேட்டால் நாம் ஒற்றுமை விரோதிகள்.அழகாக இருக்கிறது இவர்களின் மார்க்க ஞானம்.

இவர்கள் வாதிடும் இத்தகைய போலி ஒற்றுமையை இஸ்லாம் கடைப்பிடித்து ஒழுகுமாறு ஒருபோதும் ஏவவில்லை. ‘உங்களில் ஒருவர் ஒரு தீமையைக் கண்டால் அதனை தனது கையினால் தடுக்கட்டும்…!’ என்று தீமைகளுக்கு முன் ஓர் உண்மை விசுவாசி மௌனியாக இருக்கக் கூடாது என்று போதித்த நபிகளாரின் வார்த்தையை மறதலித்து, ஒற்றுமைக்காய் தீமைகளோடும் கைகோர்க்கலாம் என்று சொல்வது நபிகளாரை மறுப்பதாகாதா? நபி வழியை நையாண்டி பண்ணுவதாகாதா?

இந்த உம்மத்துக்குள் உருவாகியிருக்கும் பிளவு சீர்செய்யப்பட வேண்டியது என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து கிடையாது. ஆனால், அந்த ஒற்றுமை உருவாக்கத்திற்காக நாம் கையாளும் வழி முறை அல்குர்ஆனுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கை. சுபஹ் குனூத் உண்டா? இல்லையா?, இரவுத் தொழுகை 11? 21?, பராஅத் நோன்பு நபி வழியா? புது வழியா? என்று பிரச்சினை வருகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இதற்காக நாம் அடிதடியில் ஈடுபட வேண்டுமா? ஒற்றுமை அவசியம் என்பதற்காக தவறையும் சரிகாணத் தான் முடியுமா? இது போன்ற சந்தர்ப்பங்களில் பிரச்சினைகளை, முரண்பாடுகளை அணுகும் வழிமுறையை இதோ அல் குர்ஆன் அழகாக விதந்துரைக்கிறது.“நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியிருந்தால், ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள். இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.” (4:59)எமக்கு மத்தியில் தோன்றும் அத்துனை பிரச்சினைகளின் போதும் நாம் தீர்வு தேடி நாட வேண்டிய இடம் அல்குர்ஆனும், நபிமொழியும் மட்டும் தான். மத்ஹபுகளோ, தனிமனித கருத்துக்களோ ஆதாரமாகக் கொள்ளத்தக்கவை கிடையாது என்பதை இவ்வசனம் அழுத்தம் திருத்தமாக எமக்கு அடையாளப்படுத்துகின்றது. அல்லாஹ்வும் அவன் தூதரும் முன்வைக்கும் தீர்வுகள் எம் மனோ இச்சைக்கு எதிராக இருப்பினும் சுயநலனை, தன்மானத்தையெல்லாம் தூக்கி எறிந்த விட்டு வஹியின் பால் மீளுமாறு இத்திருவசனம் எமக்கு வழிகாட்டுவதையும், ஒற்றுமைக்கான உயர் ஆலோசனையை வழங்குவதனையும் காணலாம்.முஸ்லிம் சமுகமும், உலமா பெருமக்களும் ஒற்றுமைக்கான வஹியின் தீர்வை இதன் பிறகாவது சற்று சிந்திப்பார்களா?

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...