இஸ்லாமியப் பார்வையில் தற்கொலை

இஸ்லாமியப் பார்வையில் தற்கொலை


ஆக்கம் : இஸ்மத்

ஒருவர் தன்னைத்தானே கொலை செய்து மாய்த்துக்கொள்வது தற்கொலை எனப்படும். உலகத்தில் சந்தோசமாகவும், ஆரோக்கியமாகவும், புகழோடும் வாழும் மனிதர்கள் அல்லது துன்பமும் இன்பமும் கலந்ததுதான் வாழ்க்கை என புரிந்து கொண்டு நடப்பவர்கள் யாரும் தற்கொலை செய்வதில்லை..

யார் ஒருவன் துன்பத்தின் உச்சத்தில் இனி வாழ்வதற்கு வழியே இல்லை என நினைக்கிறானோ அவனே இவ்வழியை தேடிக் கொள்கிறான். எனவே இவ்வழி சரிதானா? இதற்க்கு இஸ்லலாத்தில் என்ன தீர்வு? என்பதைப் பற்றியும் இது போல் எண்ணங்கள் வந்தால் அதைக் களைய வேண்டிய வழிகள் என்னென்ன என்பதையும் காண்போம்.

தற்கொலை செய்யத் தூண்டும் காரணிகள்

ஒரு மனிதன் தற்கொலை செய்வதற்கு கீழ்க்கண்ட காரணங்கள் உந்துதலாகக் கருதப்படுகின்றன.


நோய், நொடி, முதுமை, குடும்பத்தாரின் அலட்சியம், தனிமைப்படுதல்,  பயம், , குழப்பம், பாதுகாப்பற்ற சூழல்,  மனஅழுத்தம், , மனக்கவலை, குற்றவுணர்வு,  இயலாமை,  வெட்கம், கடுமையான உடல்வலி, பொருளாதாரச் சிக்கல்கள், நம்பிக்கையிழத்தல் ஆழ்ந்த துக்கம், வரதட்சனை கொடுமை, காதல்தோல்வி, கள்ளக்காதல், கடன்தொல்லை, பயம்,  உயிரிழப்புக்கள் மற்றும் சேதங்கள்  பசி, பட்டினி, பஞ்சம்,  , கடவுளுக்கு பலி கொடுப்பது, விவாகரத்து, பிரிவுகள் மற்றும் உறவு முறிதல் இன்னும் பல...

அற்பமான விஷயங்களுக்காக தற்கொலைகள்

தினசரி பத்திரிக்கைகளிலும், செய்திகளிலும் நாம் காணும் அற்பமான தற்கொலைகளில் சில....

  • ஆசிரியை திட்டியதால் அல்லது பரிட்சையில் தோல்வி அடைநத்தால் மாணவ மாணவியர் தற்கொலை 
  • காதலி வேறு ஒருவருடன் பேசியதால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை, 
  • நடிகர், நடிகைகளின்/அரசியல் தலைவர்களின் இறப்பு செய்தியால் தற்கொலை, 
  • குடும்பத் தகராறு அல்லது கணவன் மனைவியை திட்டியதால் 
  • வேலை இழப்பு, பணிபுரியுமிடத்தில் பிரச்சனை

என்று வகைவகையான தற்கொலை செய்திகள் ஏழை-பணக்காரர், ஆண்-பெண், சிறியவர்-பெரியவர் என்ற பேதமின்றி நடந்தேறுவதை காண முடிகிறது.

விதியை நம்ப மறுத்தல் 
விதியை நம்புவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமை. வாழ்க்கையில். தற்கொலை செய்பவர் விதியை மறுத்து விட்டுத்தான் மரணமடைகிறார்.

விதியைப் பொறுத்த வரை கடைசி நேரம் வரை எது நடந்ததோ அதை விதி மேல் போட்டு விட்டு வருங்கால நடவடிக்கைகளுக்கு நமது முயற்சியிணை  கைவிடாமல் தொடர்ந்து செய்ய வேண்டும் என இஸ்லாம் நமக்குக் கற்றுத் தருகிறது....

பாரதூரமான துன்பம் ஏற்பட்டால் அதை தாங்கிக்கொள்ளும் மனவலிமை விதியின் மூலம் ஏற்படுகிறது.

இந்தப் பூமியிலோஉங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது. உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

அல்குர்ஆன் (57 : 22)

மேலே கூறிய படி வருங்கால நடவடிக்கைகளுக்கு விதி மேல் பலி போடாமல் நமது முயற்ச்சிகளை மேற கொள்ள வேண்டும்....

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

விதியை நம்பி (சோம்பேறியாயிருக்காதீர்கள்) செயல்படுங்கள், ஏனெனில் நீங்கள் ஒவ்வொருவருக்கும் அவரவர் எதற்காக படைக்கப்பட்டீர்களோ அதற்கான வழிகள் எளிதாக்கித் தரப்படும்.

நூல்:  புஹாரி 4945, 4946, 4947, 4949, 6217, 6605, 7551, 7552

தற்கொலை செய்பவனுக்கு நிரந்தர நரகம்

நமது உயிருக்கு சொந்தக்காரன் அல்லாஹ் மாத்திரமே. அதனை எடுக்கும் உரிமையும் அவனுக்கு மாத்திரமே உண்டு. தற்கொலை மூலம் உயிரை மாய்த்துக் கொள்வது அல்லாஹ்வின் தனிப்பட்ட அதிகாரத்தில் தலையிடுவதாகும். அதனால்தான் இறைவன் மிகப் பெரும் தண்டனையான நிரந்தர நரகத்தை இதற்கான தண்டனையாக நிர்ணயித்திருக்கின்றான்.

ஒருவருக்கு ஒரு காயம் இருந்தது. (இதைத் தாங்க முடியாமல்) அவர் தற்கொலை செய்துகொண்டார். உடனே அல்லாஹ், என் அடியான் அவனது மரணத்தில் அவசரப்பட்டு என்னை முந்திவிட்டான்.  எனவே அவனுக்குச் சொர்க்கத்தை நான் ஹராமாக்கிவிட்டேன்  எனக் கூறினான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜுன்துப் (ரலி)
நூல்:  புஹாரி-1364

இஸ்லாத்தில் மிக உன்னதமான அமலாக கருதப்படுவது ஜிஹாத் எனப்படும் புனிதப்போர். இதில் கூட தனது உயிரை தானே எடுக்க முடியாது. இதனால் தான் தற்கொலை படை தாக்குதலை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது...

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் கைபர் போரில் கலந்துகொண்டோம். அப்போரின்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடன் இருந்தவர்களில் தம்மை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்ட ஒருவரைப் பற்றி இவர் நரகவாசிகளில் ஒருவர் என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்தபோது அந்த மனிதர் மிகக் கடுமையாகப் போரிட்டார். அப்போது அவருக்கு நிறைய காயங்கள் ஏற்பட்டு அவரை உட்காரவைத்துவிட்டன. அப்போது நபித்தோழர்களி[ல் ஒருவர் வந்து அல்லாஹ்வின் தூதரே* தாங்கள் எவரைக் குறித்து அவர் நரகவாசி என்று சொன்னீர்களோ அவர் இறைவழியில் கடுமையாகப் போரிட்டு அதிகமான காயங்கள் அடைந்துள்ளார் என்று கூறினார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் அவர் நரகவாசிகளில் ஒருவர்தாம் என்றே கூறினார்கள். அப்போது முஸ்லிம்களில் சிலர் (நபி (ஸல்) அவர்களின் இச்சொல் குறித்து) சந்தேகப்படும் அளவுக்கு போய்விட்டார்கள். நிலைமை இவ்வாறு இருக்கும்போது, அந்த மனிதர காயத்தின் வேதனையை உணரலானார். உடனே அவர் தமது கையை அம்புக்கூட்டுக்குள் நுழைத்து அதிலிருந்து ஓர் அம்மை உருவி அதன் மூலம் தற்கொலை செய்துகொண்டார். உடனே முஸ்லிம்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விரைந்து வந்து அல்லாஹ்வின் தூதரே* தங்களின் அறிவிப்பை அல்லாஹ் உண்மையாக்கிவிட்டான். இன்ன மனிதர் தற்கொலை செய்து தம்மை மாய்த்துக் கொண்டார். (அதனால் அவர் நரகவாசிகளில் ஒருவராகிவிட்டார்) என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிலாலே* எழுந்து சென்று இறை நம்பிக்கையாளர் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய முடியாது. மேலும், அல்லாஹ் இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் மூலமாகவும் வலுவூட்டுகின்றான் என்று (மக்களிடையே) அறிவிப்புச் செய்யுங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்:  புஹாரி 6606

ஜனாஸா தொழுகை கிடையாது

நிரந்தர நரகம் என்றாகி விட்ட பிறகு ஜனாஸா தொழுகை தொழுது என்ன பயன் என்பதினால் தான் இதைக்கூட அல்லாஹ் ஹராமாக்கி விட்டான்.

ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அகலமான அம்பால் தற்கொலை செய்து கொண்ட ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்)  அவர்களிடம் கொண்டு வரப்பட்ட போது, அவருக்காக நபி (ஸல்) அவர்கள் தொழ வைக்கவில்லை.

நூல்:  முஸ்லிம் 1779

தற்கொலை செய்தவரின் மறுமை நிலை

கோபத்தால் அது வெடித்து விட முற்படும். ஒவ்வொரு கூட்டத்தினரும் அதில் போடப்படும்  போதெல்லாம் ""எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?’’ என்று அதன் காவலர்கள் அவர்களைக் கேட்பார்கள்.

(அல் குர்ஆன் 6:8)

நாங்கள் செவிமடுத்திருந்தாலோ, விளங்கியிருந்தாலோ நரகவாசிகளில் ஆகியிருக்க மாட்டோம் எனவும் கூறுவார்கள்.

(அல் குர்ஆன் 6:10)

யார் தமது கழுத்தை நெறித்துத் தற்கொலை செய்து கொள்கின்றாரோ, அவர் நரகத்திலும் தமது கழுத்தை நெறித்துக்கொண்டிருப்பார். யார் தம்மைத்தாம் (ஆயுதத்தால்) தாக்கித் தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகத்திலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக்கொண்டிருப்பார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: ஸஹீஹுல் புஹாரி-1365

யார் மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக்கொண்டேயிருப்பார்.

யார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் தமது விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக்கொண்டேயிருப்பார்.

யார் ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவருடைய கூராயுதத்தை அவர் தமது கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: ஸஹீஹுல் புஹாரி-5778)

தற்கொலை எண்ணத்தை களையும் வழிமுறைகள்

இன்பமும், துன்பமும் மனித வாழ்வோடு பிண்ணிப் பிணைந்தது. மாத்திரமன்றி அதுவே இறைவனின் நியதியுமாகும் வாழ்வை புரிந்து கொள்ள வேன்டும்.

தற்கொலையைத் தீர்வாக நினைக்க கூடியவர்கள் முக்கியமாக கருதுவது  தான் மாத்திரமே உலகில் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக கருதுவது.ஒவ்வொரு மனிதனும் வெவ்வேறு வடிவங்களில் தினந்தோறும் சோதனைகளையும், வேதனைகளையும் அனுபவித்துக் கொண்டேயிருக்கின்றான்.

ஏழைக்கு உண்பதற்கு உணவில்லை என்ற பிரச்சினை என்றால் பணக்காரனுக்கு இருக்கின்ற உணவினை உண்ண முடியாத சூழ்நிலை சிலருக்கு பெற்ற மக்களால் பிரச்சினை என்றால் சிலருக்கு மக்களை பெற்றெடுக்க முடியவில்லையே என்ற ஏக்கங்கள். சோகங்களையும், கஷ்டங்களையும், ஏக்கங்களையும், ஆசைகளையும் மனதில் தேக்கி வைத்துக் கொண்டு உதட்டில் புன்னகை சிந்தும் எத்தனையோ மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆக, பிரச்சினை என்பது தற்கொலை செய்பவருக்கு மட்டுமல்ல ஒவ்வொரு மனிதனுக்கும், ஊர், நாடு மற்றும்  உலகம் முழவதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது.


குர்ஆன் ஹதிஸ் வழியில் சில அறிவுரைகள்

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!
(அல் குர்ஆன் 2:155)

""நம்பிக்கை கொண்டோம்’’ என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா?

(அல் குர்ஆன் 29:2)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ அவரை சோதனைக்கு உள்ளாக்குகின்றான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புஹாரி-5645

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒரு முஸ்லிமைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம்., கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவருடைய பாவங்களிலிருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை.

அறிவிப்பவர்: அல்குத்ரி (ரலி), அபூஹுரைரா (ரலி)
நூல்: புஹாரி 5641

இறை நம்பிக்கையுடைய ஆணும்,  இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும்,  தமது பிள்ளைகள் விஷயத்திலும்,  தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ 2323, அஹ்மத் 7521, 9435
ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: திர்மிதீ 2319

எந்த நிலையிலும் மரணத்தை இறைவனிடம் கேட்கவும் கூடாது, மனதால் அதற்கு ஆசைப்படவும் கூடாது என்றும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தடை செய்துள்ளார்கள்

தனக்கு ஏற்பட்ட துன்பத்தின் காரணமாக உங்களில் யாரும் மரணிக்க ஆசைப்படக் கூடாது. அப்படிச் செய்ய வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டால் இறைவா! நான் வாழ்வது எனக்குச் சிறந்ததாக இருக்கும் வரை என்னை வாழ வை! நான் மரணிப்பது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை மரணிக்கச் செய் என்று கூறட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 5671, 6351
 
தற்கொலை பற்றி இஸ்லாம்



கற்பைக் காக்க தற்கொலை செய்யலாமா

Post a Comment

0 Comments