மொட்டுக்கள் மலர…….. தொடர் 03

பிள்ளைகளை அவர்களின் நடத்தைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் அவர்களை பொறுப்புள்ளவர்களாக மாற்றுதல், (Make them Responsible for Their actions and activities).

பிள்ளைகளின் வயதிற்கேற்ப அவர்களின் தேவைகளை அவர்களே செய்து கொள்வதற்கும் அவர்களால் ஆரம்பிக்கப் படுகின்ற வேலைகளை அவர்களாகவே முடிப்பதற்கும் பழக்க வேண்டும்.


சிறு பிள்ளையாக இருந்தால் அந்தப் பிள்ளை விளையாடுகின்ற விளையாட்டுப் பொருட்களை எடுத்த இடத்திலேயே திரும்பவும் வைப்பதற்கு அல்லது அதே பாத்திரத்தில் இடுவதற்கு வழிகாட்ட வேண்டும்.
ஏழு வயது தாண்டியவர்களாக இருந்தால் அவர்களின் அறையை தினத்தில் சுத்தம்பண்ணுதல், கட்டிலை அழகாக வைத்துக் கொள்ளுதல், புத்தகங்களுக்கு உறையிடல், வீட்டுப் பூ மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சல், தனது ஆடைகளை உரிய இடத்தில் தொங்கவிடல் போன்ற செயற்பாடுகளை தானாகவே செய்வதற்கு அவர்களை பழக்க வேண்டும்.

நேரத்திற்கு பள்ளிக்கு செல்லுதல், அமைதியாக இருத்தல் வீட்டிலிருக்கும் போது அல்லது எங்கும் செல்லும் போது சகோதர்களுடன் நண்பர்களுடன் சண்டைபிடித்துக் கொள்ளாமல் நல்ல முறையில் பழகுதல்.

இவை அனைத்தையும் அவர்களே தானாகச் செய்வதற்கு பழக்க வேண்டும்,

அவ்வாறு செய்யும் போது அவர்களின் செயற்பாடுகளுக்காக அவர்களை பாராட்டி அவர்களிடத்தில் தவறுகள், குறைகளை மறைத்துக் கொள்ளவேண்டும்.
 
தாழ்மையும், உதவி மனப்பான்மையுமுள்ள பிள்ளைகளாக வளர்த்தல், (Teach children to be kind and helpful)

பிள்ளைகளுடன் எப்போதும் நிதானமாகவும் அன்பாகவும் நடந்து கொள்ள வேண்டும்,                                                                    
அடிக்கடி அவர்களுடன் புன்னகித்துக் கொள்ள வேண்டும், சில விடயங்களை அல்லது அவர்களுடன் செயற்படுகின்ற போது அவர்களுடன் சேர்ந்து சிரித்துக் கொள்ள வேண்டும்,   எப்போதும் பிறருக்கு உதவ கற்றுக் கொடுக்க வேண்டும், தன்னுடன் படிக்கின்ற,  பழகுகின்ற நண்பர்களுக்கு தேவையான போது உதவ கற்றுக் கொடுப்பதுடன் அவ்வாறு உதவும் போது சிறுவர்கள் மட்டத்தில் தனது நிலை எவ்வாரு இருக்கும் என்பதையும் விளக்கிக் கூற வேண்டும்.

அவர்களின் நண்பர்களுடன் சந்தோஷங்களை பகிர்ந்து கொள்வதற்கும் ஆபத்தின் போது, பிற தேவைகளின் போது உதவுவதற்கு அவர்களை பழக்குவது அவர்களின் சுய நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும்.

இது தொடர்பான சில வரலாற்றுச் சம்பவங்களை அதாவது நபிமார்களின் ஸஹாபாக்களின் வரலாற்றுச் சம்பவங்களை சொல்லிக் காண்பிக்கும் போது சில சந்தர்ப்பங்கள் பிள்ளைகளின் உள்ளங்களின் அது மிகப் பெரும் முன்மாதிரியாக பதியப்பட்டு எதிர்காலத்தில் அதிக பயன் தரக்கூடியதாக இருக்கும்.

தவறுகளை முன்னேற்றத்தின் ஆரம்பமாக மாற்றுதல்,  (Turn Mistakes into Opportunities for improvements)

எமது பிள்ளை ஒரு தவறு அல்லது  பிழை செய்யும் போது அதனை மறைத்து முன்னேற்றத்திற்கான வழிகளை காண்பித்துக்  கொடுக்க வேண்டும்.
 
உதாரணமாக, எமது பிள்ளை பாடசாலையிலிருந்து திரும்பி வரும் போது மிக மோசமான பரீட்சை பெறுபேற்றுடன் வருகின்றானென்றால் உடனே அந்த பிள்ளையைப்பார்த்து எவ்வளவு மோசமான பெறுபேறு, கேவலமாக இருக்கின்றது, என்று கடுமையாக திட்டுவதை விட அந்த பெறுபேற்றை எடுத்து அதில் எந்த எந்த பாடத்தில் குறைவான புள்ளிகளை எடுத்திருக்கின்றான் என்பதை பற்றி சிந்திக்க உதவவேண்டும்,  குறிப்பிட்ட பாடங்களில் குறைவான புள்ளிகளை எடுப்பதற்கான காரணங்களை பற்றி சிந்திக்கத் தூண்டி, அந்த பாடங்களில் நல்ல முன்னேற்றம் காண்பதற்கு அவர்களுக்கு உதவ வேண்டும்.

இவ்வாரு எமது பிள்ளைகள் எந்த விடயத்தில் தவறுவிடுகின்றாரகள் என்பதை கவனித்து அவர்களை தண்டிப்பதைவிட, சத்தமாக திட்டுவதைவிட அந்த தவறிலிருந்து விடுபடுவதற்குரிய நுட்பங்களை அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்,

அந்த நுட்பங்கள் எமக்கு தெரியாவிட்டால் தெறிந்த, வழிகாட்டக் கூடியவர்களை அணுக வேண்டும்.
                                                       
இந்த முயற்சி எமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கும் முன்னேற்றத்திற்கும் மிக முக்கியமானதாகும்.

பிள்ளைகளின் தவருகளை அண்டை வீட்டார்களிடத்தில், உறவினர்களிடத்தில் பகிரங்கப்படுத்தக் கூடாது,
(Don’t Complain to Your Neighbor and Relatives)

எமது பெற்றோர்களிடத்திலுள்ள ஒரு தவறான போக்குத்தான் தங்களது பிள்ளைகளைப் பற்றி அண்டை வீட்டாரிடம் அல்லது சொந்தக்காரர்களிடம் மிக மோசமாக கதைப்பது, குறிப்பாக பிள்ளைகள் அவர்களுடன் இருக்கும் போதுஇவன் அல்லது இவள் வாசிப்பில் மிக மோசம்” “இவனது கொப்பிகளை கண்கொண்டு பார்க்க முடியாது, அவ்வளவு மோசம், கோழி சிறைத்தாற் போல..”                                           
கணிதம் என்றாலே மருந்து மாதிரி இவளுக்கு, பிடிக்காத ஒரு பாடம்
இப்படிச் சொல்லும் போது அவனது, அவளது மனம் எப்படி இருக்கும், அல்லது எவ்வளவு கோபம் வரும், இந்தச் செயல் பிள்ளைகளின் எதிர்காலத்தை மன, மானரீதியாக பாதிக்கும்.

உண்மையில் எமது பிள்ளைகளைப் பற்றி அடுத்தவர்களுடன் பேசவேண்டும் என்றால் அவர்களிடத்திலுள்ள நல்ல பழக்கங்களை, பாராட்டத்தக்க செயல்களை பற்றிச் சொல்ல முடியும், அது ஒருவரை அவருக்கு முன்னால் புகழுவது என்பதர்த்தமல்ல.

எனது மகன் கணிதப் பாடத்தில் குறைவான புள்ளிகளை எடுத்த அதே நேரம் இஸ்லாம் பாடத்தில் அதிக அல்லது நல்ல புள்ளிகளை பெற்றிருந்தால் அதனைப் பற்றி பிறரிடத்தில் சொல்லலாம்,                                                                                       எனது மகன் இஸ்லாம் பாடத்தில் நல்ல மார்க்ஸ் எடுத்திருக்கின்றான்:
அதே போல் எனது பிள்ளை வீட்டில் தொடர்ந்து அல்லது அதிகமாக படிப்பதில்லை, ஆனால் பரீட்சையில் அதிகமான மார்க்ஸ் வாங்குவாள், என்றால் அவலது நல்ல ஞாபக சக்தியைப் பற்றிச் சொல்லலாம்.
அல்லது அதிகம் புத்தகம் வாசிப்பதில்லை ஆனால் அதிகமாக குர்ஆன் ஒதுவான் என்பதைப் பற்றிச் சொல்லலாம்.

இப்படிப்பட்ட நேரான, சாத்திகமான முகக்குறிப்புக்கள் எமது பிள்ளைகளின் தன்னம்பிக்கையையும் சந்தோஷத்தின் தேவையையும் கொண்டு வருகின்றது,

அவர்களின் முகத்தில் சந்தோஷத்தையும் புன்முருவளையும் வளரச் செய்கின்றது.

சந்தோஷமாக இருக்கும் பிள்ளைகள் எப்போதும் எமது அல்லது யாரதும் ஆலோசனைகளை செவிமடுக்கும் நிலையிலும் தங்களது, தங்களுடைய நடத்தைகளில் காணப்படுகின்ற குறைபாடுகளை சரிசெய்கின்ற தன்மையும் உடையவர்களாகவும் இருப்பார்கள். 

பிள்ளைகளின் விருப்பங்களுக்கும் ஆசைகளுக்கும் உதவுதல், (Support Their Interest and Hobbies)

எமது பிள்ளைகளின் ஆசைகளையும் அவர்களின் கனவுகளையும் இணங்கண்டு அவர்களை அதன் பால் ஊக்குவிக்க வேண்டும். சில நேரம் அல் குர்ஆனை மன்னமிடுவதில் எமது பிள்ளை அதிக ஆர்வம் கொள்ளலாம்,                                                        புதிய ஒரு மொழியை கற்றுக் கொள்வதில், சித்திரம் வரைவதில் ஒரு பிள்ளை அதிக ஈடுபாடு கொள்ளமுடியும்,                              

நிறந்தீட்டுவதில் அதிக அக்கறை கொள்ல்லாம், இயற்கையை ரசிப்பதில், வீட்டு தோட்டங்களை வளர்ப்பதில் ஓய்வு நேரங்களை அதிகமாக கடத்தமுடியும்.

இவைகளை இணங்கண்டு அவர்களின் ஆசைகளுக்கும் ஆர்வத்திற்கும் அதிக ஒத்தாசைகளையும் ஊக்குவிப்பையும் கொடுக்க வேண்டும்.

எமது இந்த ஊக்குவிப்பு எமது பிள்ளைகளுக்கு அவர்களின் தன்னம்பிக்கையை மற்றுமின்றி அவர்களின் ஆக்கத்திறமைகளையும் புதிய சிந்தனைகளையும் தோற்றுவிக்கும்.
 
அதே நேரம், உலகில் பிறக்கின்ற ஒவ்வொரு பிள்ளைகளுக்குள்ளும் ஒவ்வொரு திறைமையிருப்பது உண்மையென்றால் அவர்களின் இன்றைய ஆசைகளும் முயற்சிகளும் நாளைய கைத் திறமையாகவும் அவர்களின் வெற்றிக்கான படைப்புத் திறமையாகவும் இருக்கலாம், இன்ஷா அல்லாஹ், 

அல்லாஹ் தனது திருமறையில்:                                         
நீங்கள் பொருமையைக் கொண்டும் தொழுகையைக் கொண்டும் (இரட்சகனிடத்தில்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அதுவோ உள்ளச்சம் கொண்டவர்களுக்கன்றி (ஏனையோருக்கு) மிக பாரமானதா( இருக்) கும்.”                   (அல் குர்ஆன் 2:45)

விசுவாசங்கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையைக் கொண்டு உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் (எப்போதும்) பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்”,  (அல் குர்ஆன் – 2: 153)

இந்த வசனங்களை எமது பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுத்து அவர்களின் முயற்சியை மன உறுதியுடன் தொடர்வதற்கும் அதில் பொறுமையாக இருந்து வெற்றி பெறுவதற்கும் நாம் உதவ வேண்டும்.

மலர்வது தொடர் நான்கு…………
  
எப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.

Post a Comment

0 Comments