நபிமார்கள் வரலாறு 3 (நபிமார்கள் உணவு உட்கொண்டனர்)

நபிமார்கள் மனிதர்கள் தாம் என்பதற்கான ஆதாரங்களை நாம் பார்த்து வருகிறோம் அந்தத் தொடரில் நபிமார்களின் மனித குணங்கள் தொடர்பான செய்திகளைத் தொடர்ந்து பார்ப்போம்.

நபிமார்கள் உணவு உட்கொண்டனர்.

எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் அவன் தனது உணவுத் தேவையை முழுபைப் படுத்துவது கட்டாயமாக இருக்கிறது. உணவு இல்லையேல் உயிர் வாழ முடியாது என்பதுதான் உண்மையும் கூட.நபிமார்களாக இருந்தாலும் அவர்களும் உணவு உட்கொண்டால் தான் உயிருடன் இருக்க முடியும்.


இன்றைக்கு நமக்கு மத்தியில் அவ்லியாக்கள், சாமியார்கள், தெய்வ சக்தி படைத்தவர்கள் என்றெல்லாம் உளரக் கூடியவர்கள் கூட சாப்பாட்டு விஷயத்தில் மாத்திரம் வாய் மூடி அமைதியாக இருந்து விடுவதைப் பார்க்கிறோம் ஏன் எனில் எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் மக்களை ஏமாற்றுவதற்கு வேண்டுமானால் தங்களை கடவுளின் சக்தி படைத்தவர்களாக சித்தரிக்க முடியுமே ஒழிய நிஜ வாழ்க்கையில் நிரூபிக்க முடியாது என்பதற்கு உணவு இன்றி வாழ முடியாது என்ற நிலையே போதுமான சான்றாகும்.

மனிதர்களில் இறைவனுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் நபிமார்கள் தாம் அந்த நபிமார்களே உணவின் தேவையின் பால் ஈர்க்கப்பட்டவர்களாகத் தான் இருந்தார்கள் என்பதை திருமறைக் குா்ஆனும், ஸஹீஹான ஹதீஸ்களும் நமக்கு உணர்த்துகின்றன.

மர்யமின் மகன் மஸீஹ் தூதரைத் தவிர வேறில்லை. அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். இவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக! (அல் குர்ஆன் 5:75)

நபி ஈஸா அவர்களைப் பற்றியும் அவர்களின் தாயார் மர்யமைப் பற்றியும் இறைவன் குறிப்பிடும் போது அவர்களின் செயல்பாடுகளில் மிக முக்கியமானதாக உணவு உட்கொள்வதைப் பற்றிக் குறிப்பிடுகிறான்.

ஈஸா நபியவர்கள் தந்தை இன்றி பிறந்தார்கள் என்பது ஆச்சரியம் மிக்கதாக இருந்தது என்பதினால் அவர்கள் கடவுளாக மாறிவிட முடியுமா என்ன?

ஈஸா நபியவர்களை உலகத்தாருக்கு அத்தாட்சியாக ஆக்க வேண்டும் என்பதற்காக தந்தை இன்றிப் படைத்து இறைவன் தனது வல்லமையைக் காட்டினான். அப்படி தனது வல்லமையைக் காட்டிய அதே இறைவன் தான் ஈஸா நபியவர்கள் பிறப்பின் அடிப்படையில் தான் மற்றவர்களை விட வித்தியாசப்படுகிறார்களே தவிர மனிதன் என்ற அடிப்படையில் எந்த மாற்றமும் அவர்களுக்கு ஏற்படவில்லை ஏன் என்றால் கடவுலாக இருந்தால் அவர் உண்ண மாட்டார் உண்ணவும் கூடாது. மனிதனாக இருந்தால் மாத்திரம் தான் உண்ண முடியும்.

இதன் அடிப்படையில் ஈஸா நபியவர்கள் மனிதன் தான் என்பதற்கான மேலதிக ஆதாரமாகவும் இந்த வசனம் விளங்குகிறது.அதே போல் இன்னொரு வசனத்தில் இறைவன் இப்படிக் குறிப்பிடுகிறான்.

உணவு உட்கொள்ளாத உடலாக அவர்களை நாம் ஆக்கவில்லை. அவர்கள் நிரந்தரமாகவும் இருக்கவில்லை.(அல் குர்ஆன் 21:8)

உலகில் இறைவனால் படைக்கப்பட்ட மனித இனத்தைப் பற்றிக் குறிப்பிடும் இறைவன் உணவு உட்கொள்ளக் கூடிய உடலாகத்தான் மனிதனின் உடலை அமைத்திருப்பதாகக் குறிப்பிடுகிறான்.உணவு உட்கொள்ளாவிட்டால் மனிதனின் உடல் அதனைத் தாங்கிக் கொள்ளாது உயிர் வாழ முடியாது என்பதையும் மேற்கண்ட வசனம் தெளிவாக் குறிப்பிடுகிறது.

தூதர்களே! தூய்மையானவற்றை உண்ணுங்கள்! நல்லறம் செய்யுங்கள்! நீங்கள் செய்வதை நான் அறிந்தவன்.(அல் குர்ஆன் 23:51)

இந்த வசனத்தில் தூதர்களைப் பார்த்தே இறைவன் தூய்மையானவற்றை உண்ணும் படி கட்டளையிடுகிறான். ஏன் என்றால் அவர்களும் மனிதர்கள் தாம் அவர்களாலும் உண்ணாமல் உயிர்வாழ முடியாது என்பதே இதற்கான காரணம்.

நபிமார்களுக்கே உணவு இல்லாவிட்டால் வாழ முடியாது நபிமார்களாக இருந்தாலும் அவர்களும் உணவு உட்கொண்டே ஆக வேண்டும் என்பதே நியதி ஆக நபிமார்கள் மனிதர்கள் என்பது இன்னும் தெளிவாக நாம் அறிந்து கொள்ளும் சான்றுகளாக மேற்கண்ட வசனங்கள் இருக்கின்றன.

இத்தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் உணவு உண்கிறார்; கடை வீதிகளில் நடமாடு கிறார்; இவரோடு ஒரு வானவர் இறக்கப்பட்டு இவருடன் (சேர்ந்து) அவர் எச்சரிப்பவராக இருக்கக் கூடாதா?” என்று கேட்கின்றனர்.(அல் குர்ஆன் 25:7)

இறைத் தூதர்கள் என்றால் உண்ணக் கூடாது, பருகக் கூடாது, கடை வீதிகளில் நடமாடாமல் இருக்க வேண்டும் போன்ற எண்ணங்கள் மனிதர்கள் மனங்களில் குடி கொண்டுள்ளது அதனால் தான் நபியின் காலத்தவரும் கூட இப்படிப்பட்ட கேள்விகளை முன்வைக்கிறார்கள்.

இன்றும் கூட கடவுளின் பெயரால் ஏமாற்றும் சாமிமார்களையும், இஸ்லாமியப் பெயர் தாங்கித் தரீக்கா பக்தர்களையும் நம்பும் மக்களிடம் அவர்களைப் பற்றி விசாரிக்கும் போது அந்த மக்கள் குறிப்பிட்ட நபர்களை நம்பியதற்கான காரணமாக சொல்லுவது அவர் குகையிலேயே இருக்கிறார், அவர் என்ன உண்ணுகிறார் என்ன செய்கிறார் என்பதே தெரியாது என்பதாகும்.

இதனால் தான் நபியின் காலத்தவரும் கூட இது போன்ற கேள்விகளைக் கேட்கிறார்கள்.ஆக நபிமார்களும் மனிதர்கள் தாம் என்பதற்கு இதுவெல்லாம் தெளிவான ஆதாரங்களாகும்.

மேலதிக செய்திகளோடு சந்திப்போம் இன்ஷா அல்லாஹ்
ஆசிரியர் : ரஸ்மின் MISc

Post a Comment

0 Comments