ஷைத்தான் பெயரால் பித்தலாட்டங்கள்

மனிதனுக்கு ஷைத்தானால் சில இடைஞ்சல்கள் ஏற்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறிந்துகொள்ளலாம்.


'ஆதமின் மக்களால் பிறக்கும் குழந்தை எதுவாயினும் அது பிறக்கும் போதே ஷைத்தான் அதைத் தீண்டுகிறான். ஷைத்தானின் தீண்டலால் அக்குழந்தை கூக்குரலெழுப்பும். மர்யமையும் அவருடைய மகனையும் தவிர''' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அறிவிப்பவர்: அபூஹீரைரா (ரலி) நூல்: புகாரி 3431

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகைக்காக (பாங்கு சொல்லி) அழைக்கப்படும் போது ஷைத்தான் பாங்கு சப்தத்தைக் கேட்கக் கூடாது என்பதற்காக சப்தத்துடன் காற்றை விட்டுக் கொண்டு திரும்பி ஓடுகிறான். பாங்கு சொல்லி முடித்ததும் முன்னே வருகின்றான். தொழுகைக்கு இகாமத் சொல்லப் பட்டால் (மீண்டும்) திரும்பி ஓடுகிறான். இகாமத் சொல்லி முடித்ததும் முன்னே வருகின்றான். (தொழுகையில் ஈடுபட்டுள்ள) மனிதருடைய உள்ளத்தில் ஊடுருவி ஊசலாட்டத்தை ஏற்படுத்தி, 'இதை நினைத்துப் பார்; அதை நினைத்துப் பார்'' என்று அவர் அதற்கு முன்நினைத்திராத விஷயங்களை அவருக்கு நினைவூட்டிக் கூறுகின்றான். எந்த அளவிற்கென்றால், அந்த மனிதர் தாம் எத்தனை ரக்அத்கள் தொழுதோம் என்பதை அறியாதவராக மாறிவிடுகிறார். அறிவிப்பவர்: அபூஹீரைரா (ரலி) நூல்: புகாரி 608


கொட்டாவி ஷைத்தானிடம் இருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவி விட்டால் தம்மால் முடிந்த வரை அவர் அதை அடக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், எவரேனும் 'ஹா' என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கின்றான். அறிவிப்பவர்: அபூஹ‚ரைரா (ரலி) நூல்: புகாரி 3289


நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் பொழுது விடியும் வரை (தொழுகைக்கு எழாமல்) உறங்கிக் கொண்டேயிருப்பது பற்றிக் கூறப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், 'அவரது காதில் ஷைத்தான் சிறுநீர் கழித்துவிட்டான்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி) நூல்: புகாரி 1144


ஷைத்தானை விரட்டுவதாகக் கூறி சம்பாதிக்க நினைப்பவர்களும் மக்களை ஏமாற்றுபவர்களும் ஷைத்தானால் மனிதனுக்கு ஏற்படும் இடைஞ்சல்களை விவரிக்கும் இது போன்ற ஹதீஸ்களை மக்களிடம் சொல்கிறார்கள். ஷைத்தானால் மனிதனுக்கு இவ்வளவு தீமைகள் ஏற்படுவதால் மனிதனை விட்டும் ஷைத்தானை நாங்கள் விரட்டுகிறோம். இதில் என்னத் தவறு இருக்கிறது? என்று கேள்வி கேட்டு பாமர மக்களை வழிகெடுக்கிறார்கள்.

இவர்கள் தங்களின் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் ஷைத்தானை விரட்டிய பிறகு இவர்கள் யாரிடமிருந்து ஷைத்தானை விரட்டினார்களோ அவர்களுக்கு மேற்கண்ட இடையூறுகள் ஏற்படாது என்ற உத்தரவாதத்தைத் தர முடியுமா?

தொழுகையில் கவனம் திரும்புவது கொட்டாவி விடுவது சுப்ஹ‚ தொழாமல் உறங்குவது இவையெல்லாம் ஷைத்தானால் ஏற்படுகிறது என்று மேலுள்ள ஹதீஸ்கள் கூறுகிறது. அப்படியென்றால் இவர்கள் யாரிடமிருந்து ஷைத்தானை விரட்டினார்களோ அவர்களுக்கு தொழுகையில் கவனம் திரும்பாதா? அவர்களுக்கு இனி கொட்டாவியே வராதா? அவர்கள் சுப்ஹ‚ தொழுகையை விடாமல் கடைபிடிப்பார்களா? ஷைத்தானை விரட்டிய பிறகு இவர்களுக்குத் தவறான எண்ணங்களே ஏற்படாதா?

இந்த அடிப்படையில் சிந்தித்துப் பார்த்தாலே ஷைத்தானை விரட்டுவதாக இவர்கள் கூறுவது வடிகட்டிய பொய் என்பதை அறியலாம்.

முதலில் ஷைத்தானால் மனிதனுக்கு என்ன செய்ய முடியும்? அவனுடைய தீமைகளிலிருந்து தப்பிப்பதற்கு என்ன வழி? என்பதை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஷைத்தானால் எந்தத் தீங்கை செய்ய இயலும்?


தவறான எண்ணங்களை ஏற்படுத்தி தீய காரியங்களின் பால் அழைப்பதும் நன்மையான காரியங்களைப் புறக்கணிக்குமாறு ஏவுவதும் தான் ஷைத்தானால் செய்ய முடியும். அவன் ஏற்படுத்திய எண்ணத்திற்குக் கட்டுப்படுபவர்கள் தீமையைச் செய்து விடுகிறார்கள். அவனது ஆசை வார்த்தைக்கு மயங்காதவர்கள் நன்மையின் பால் விரைகிறார்கள்.

மனிதன் தான் ஷைத்தானுக்குக் கட்டுப்பட்டு தவறிழைக்கிறானே தவிர ஷைத்தான் யாரையும் வலுக்கட்டாயமாக, அவர்கள் விரும்பாமல் தீமைக்கு அழைத்துச் செல்வதில்லை. அதுபோன்று நல்ல விஷயங்களை வெறுப்பிற்குரியதாக நமக்குக் காட்டுவானே தவிர நன்மையான காரியங்களைச் செய்ய விடாமல் ஷைத்தான் யாரிடத்திலும் சண்டைக்கு வர மாட்டான்.  இதை நாம் நமது வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அனுபவித்து வருகிறோம்.

தீய எண்ணங்களை ஏற்படுத்துவதும் தவறான வழிகளைக் காட்டுவதும் தான் ஷைத்தானுடைய வேலை என்பதைப் பின்வரும் குர்ஆன் வசனங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

'அவர்களை வழி கெடுப்பேன்; அவர்களுக்கு(த் தவறான) ஆசை வார்த்தை கூறுவேன்; அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அவர்கள் கால்நடைகளின் காதுகளை அறுப்பார்கள். (மீண்டும்) அவர்களுக்குக் கட்டளையிடுவேன்; அல்லாஹ் வடிவமைத்ததை அவர்கள் மாற்றுவார்கள்'' (எனவும் கூறினான்). அல்லாஹ்வையன்றி ஷைத்தானைப் பொறுப்பாளனாக்கிக் கொள்பவன் வெளிப்படையான நஷ்டத்தை அடைந்து விட்டான். (அல்குர்ஆன் 4:119)


அவன் தீமையையும், வெட்கக் கேடானதையும், நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுவதையும் உங்களுக்குத் தூண்டுகிறான். (அல்குர்ஆன் 2:169)


அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். (அல்குர்ஆன் 114:5)


ஆதம் (அலை), ஹவ்வா (அலை) ஆகிய இருவருக்கும் தவறான எண்ணங்களை ஏற்படுத்தித் தான் ஷைத்தான் வழிகெடுத்தான்.

அவ்விருவரின் மறைக்கப்பட்ட வெட்கத்தலங்களை வெளிப்படுத்துவதற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். 'இருவரும் வானவர்களாக ஆகி விடுவீர்கள் என்பதற்காகவோ, நிரந்தரமாக இங்கேயே தங்கி விடுவீர்கள் என்பதற்காகவோ தவிர உங்கள் இறைவன் இம்மரத்தைஉங்களுக்குத் தடை செய்யவில்லை'' என்று கூறினான்.(அல்குர்ஆன் 7:20)


நல்லவர்கள், கெட்டவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் ஷைத்தான் தவறான எண்ணங்களை ஏற்படுத்துகிறான். அப்படியென்றால் ஷைத்தானை விரட்டுவதாகக் கூறும் போலி ஆன்மீகவாதிகள் அனைத்து மக்களுக்கும் ஓதிப் பார்த்து அவர்களிடமிருந்து ஷைத்தானை விரட்டுவார்களா?

நபிமார்களுக்கு ஷைத்தான் இடைஞ்சல் தந்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது. இன்றைக்கு இவர்களுக்கு ஷைத்தானை விரட்டத் தெரிந்த யுக்தி நபிமார்களுக்கு ஏன் தெரியவில்லை என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம். (அல்குர்ஆன் 6:112)


(முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய எந்த நபியானாலும், தூதரானாலும் அவர் ஓதும் போது ஷைத்தான் அவரது ஓதுதலில் (தவறான குழப்பத்தைப்) போடாமல் இருந்ததில்லை.(அல்குர்ஆன் 22:52)


வேறெதுவும் செய்ய முடியாது


ஒருவரைப் பைத்தியமாக மாற்றுவது, உடல் உறுப்புக்களை செயலிழக்கச் செய்து முடக்கிப் போடுவது போன்ற பாரதூரமான வேலைகளை ஷைத்தானால் செய்ய இயலாது. ஆனால் இவற்றையெல்லாம் ஷைத்தானால் செய்ய முடியும் என்று கூறித் தான் ஷைத்தானை விரட்டுகிறோம் என்று கூறுபவர்கள் மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஷைத்தானால் மனிதனுக்கு ஏற்படும் தீமை, தவறான வழியை காட்டுவதைத் தவிர வேறெதுவும் இல்லை என்பதைப் பின்வரும் குர்ஆன் வசனங்களிலிருந்து விளங்கிக்கொள்ளலாம். 
'அல்லாஹ் உங்களுக்கு உண்மையான வாக்குறுதி அளித்தான். நானும் உங்களுக்கு வாக்குறுதி அளித்து உங்களிடம் வாக்கு மீறி விட்டேன். உங்களை அழைத்தேன். எனது அழைப்பை ஏற்றீர்கள் என்பதைத் தவிர உங்கள் மீது எனக்கு எந்த அதிகாரமும் இல்லை. எனவே என்னைப் பழிக்காதீர்கள்!உங்களையே பழித்துக் கொள்ளுங்கள்! நான் உங்களைக் காப்பாற்றுபவனும் அல்லன். நீங்கள் என்னைக் காப்பாற்றுவோரும் அல்லர். முன்னர் என்னை (இறைவனுக்கு) இணையாக்கியதை மறுக்கிறேன்'' என்று தீர்ப்புக் கூறப்பட்டவுடன் ஷைத்தான் கூறுவான். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு அல்குர்ஆன் 14:22

'எனது அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை'' (என்றும் இறைவன் ஷைத்தானிடம் கூறினான்.) உமது இறைவன் பொறுப்பேற்கப் போதுமானவன். அல்குர்ஆன் 17:65


அவனுக்கு அவர்கள் மீது எந்த அதிகாரமும் இல்லை. அல்குர்ஆன் 34:21

எவ்வாறு தப்பிப்பது?

தீய எண்ணங்களை ஏற்படுத்துவதைத் தான் ஷைத்தானால் செய்ய முடியும் என்று கூறும் திருக்குர்ஆன் அவனுடைய அந்தத் தீங்கிலிருந்து எவ்வாறு காத்துக் கொள்வது என்ற வழியையும் கற்றுத் தருகிறது. ஷைத்தானுடைய வழியில் சென்று விடாமல் தனக்குப் பாதுகாப்பைத் தருமாறு அல்லாஹ்விடம் துஆ செய்வது தான் அந்த வழியாகும். இந்த துஆ ஷைத்தானின் சூழ்ச்சியை முறியடிக்கும் மாபெரும் கருவியாகும்.

'என் இறைவா! ஷைத்தான்களின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்றும் கூறுவீராக! அல்குர்ஆன் (23 : 97)


(முஹம்மதே!) மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம், மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான்.  ஜின்களிலும், மனிதர்களிலும்  இத்தகையோர் உள்ளனர். அல்குர்ஆன் 114வது அத்தியாயம்


ஷைத்தானின் தாக்கம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன். அல்குர்ஆன் 7:200


குர்ஆனை ஓதும் போது விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொள்! அல்குர்ஆன் 16:98


அவர் (இம்ரானின் மனைவி) ஈன்றெடுத்த போது, 'என் இறைவா! பெண் குழந்தையாக ஈன்றெடுத்து விட்டேனே'' எனக் கூறினார். அவர் எதை ஈன்றெடுத்தார் என்பதை அல்லாஹ் நன்கறிவான். 'ஆண், பெண்ணைப் போன்றவன் அல்ல. நான் இவளுக்கு மர்யம் என்று பெயரிட்டேன். விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் இவருக்கும், இவரது வழித் தோன்றல்களுக்கும் உன் பாதுகாப்பை வேண்டுகிறேன்'' எனவும் அவர் கூறினார். அல்குர்ஆன் 3:36


ஷைத்தானின் தூண்டுதல் ஏற்பட்டால் என்னிடம் வாருங்கள் நான் ஷைத்தானை விரட்டுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களுக்குக் கூறவில்லை. மாறாக தீய எண்ணங்கள் ஏற்பட்டால் அல்லாஹ்விடம் ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடுமாறு தான் கற்றுக் கொடுத்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதை கற்றுக் கொடுத்தார்களோ அதில் தான் நமக்கு வெற்றி இருக்கிறது. எனவே ஷைத்தானை விரட்டுகிறோம் என்று கூறுபவர்களின் மாயவலையில் யாரும் விழுந்து விட வேண்டாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கüல் ஒருவரிடம் (அவர் மனத்திற்குள்) ஷைத்தான் வந்து, 'இதைப் படைத்தவர் யார்? இதைப் படைத்தவர் யார்?'' என்று கேட்டுக் கொண்டே வந்து, இறுதியில், 'உன் இறைவனைப் படைத்தவர் யார்?'' என்று கேட்கின்றான். இந்தக் (கேள்விகேட்கும்) கட்டத்தை அவன் அடையும் போது அவர்  அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும். (இத்தகைய சிந்தனையிலிருந்து) விலகிக் கொள்ளட்டும். அறிவிப்பவர்: அபூஹீரைரா (ரலி) நூல்: புகாரி 3276


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கüல் ஒருவர் தமக்கு விருப்பமான கனவைக் கண்டால், அது அல்லாஹ்விடமிருந்தே வந்தது (என்று தெரிந்து), அதற்காக அவர் அல்லாஹ்வைப் போற்றட்டும். அதை (விருப்பமானவர்கüடம்) தெரிவிக்கட்டும். அதற்கு மாறாகத் தமக்கு விருப்பமில்லாத கனவு கண்டால், அது ஷைத்தானிடம் இருந்தே வந்தது. அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரட்டும். அறிவிப்பவர்: அபூசயீத்      அல்குத்ரீ (ரலி) நூல்: புகாரி 6985


இறைநம்பிக்கை, இறையச்சம், நற்குணங்கள் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டால் ஷைத்தான் நம்மை வழிகெடுக்க முடியாது.

எனது அடியார்களில் உன்னைப் பின்பற்றிய வழிகேடர்களைத் தவிர மற்றவர்கள் மீது உனக்கு எந்த அதிகாரமும் இல்லை. அல்குர்ஆன் 15:42


நம்பிக்கை கொண்டோர் மீதும், தமது இறைவனையே சார்ந்திருப்போர் மீதும் அவனுக்கு (ஷைத்தானுக்கு) அதிகாரம் இல்லை. அல்குர்ஆன் 16:99


(இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது அவர்கள் விழித்துக் கொள்வார்கள்.அல்குர்ஆன் 7:201


ஷைத்தான் வலையில் விழுந்தவர் ஷைத்தானை விரட்டுகிறார்களா?

ஷைத்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங்குகின்றனர். அல்குர்ஆன் 26:221


ஷைத்தானை விரட்டுவதாகக் கூறுபவர்கள், மார்க்கத்தில் இல்லாத ஒரு விஷயத்தை இருப்பதாக இட்டுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகையவர்களிடத்தில் தான் ஷைத்தான் இருக்கிறான். 

ஷைத்தானின் வலையில் சிக்கியவர்கள் மற்றவர்களிடமிருந்து ஷைத்தானை விரட்டுவதாக நினைப்பது எவ்வளவு அறிவீனம் என்பதை பொதுமக்கள் சிந்திக்க வேண்டும். ஏமாற்றுபவர்களின் சதியில் சிக்கி தங்கள் பொருளை இழந்து விட வேண்டாம். நம் அனைவருக்கும் அல்லாஹ் நேர்வழிகாட்டுவானாக!

Post a Comment

0 Comments