மரம் ருக்கூ செய்கிறதா? மலை சஸ்தா செய்கிறதா?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

மரம் ருக்கூ செய்கிறதா? மலை சஸ்தா செய்கிறதா?

ஒரு முஸ்லிமுக்கு உண்டான அழகிய பண்பு என்னவெனில் அவன் அல்லாஹ்வையும், மலக்குமார்களையும், தூதர்களையும், வேதங்களையும், மறுமை நாளையும், சுவர்கம், நரகம் ஆகிய வற்றையும் முழுமையாக நம்ப வேண்டும்.  அதே போன்று அல்லாஹ் அருள்மறையில் தெளிவாக விளக்கிக் கூறும் மறைவான ஞானம் பற்றிய செய்திகளையும் ஆதாரம் இல்லையென்றாலும் அல்லாஹ்வும் அவனது நபிமார்களும்  கூறுவதால் நம்ப வேண்டும்!


ஆனால் நம்மில் பலர் அருள்மறை குர்ஆனை படித்தவுடன் அதில் கூறப்பட்டுள்ள மறைவான ஞானம் பற்றிய தகவல்களை உணர்கிறார்கள் ஆனால் அதை எவ்வாறு அணுக வேண்டுமோ அவ்வாறு அணுகாமல் விழிபிதுங்கி வழிதவறிவிடுகிறார்கள. இதற்கு காரணம் என்ன என்று சிந்தித்துப்பார்த்தால் அவர்கள் அல்குர்ஆனை ஒழுங்காக விளங்காததுதான் என்பது தெளிவாகிறது.


மறைவான ஞானத்தை கூறும் அருள்மறை வசனம்
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றன; ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹு செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது – அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான். (அல்குர்ஆன் 24:41)

மேற்கண்ட இந்த அருள்மறை வசனத்தை படித்தவுடன் மனிதன் இதை உள்ளத்தால் நம்ப வேண்டும் ஆனால் இவ்வாறு செய்வதில்லை மாறாக தாம் காணும் காட்சிகளை இந்த வசனத்திற்கு உதாரணமாக கூற முற்பட்டுவிடுகிறான். இதோ மேலே உள்ள வசனத்திற்கு இவர்கள் முன்வைக்கும் ஆதாரம் கீழே உள்ள படங்கள்தான்.

மேலே உள்ள இரண்டு படங்களை பார்த்தவுடன் மெய் சிலிர்த்துப் போவது உண்மைதான். காரணம் இந்த இரண்டு படங்களும் தொழுகையை நினைவுட்டும் விதமாக அமைந்துள்ளது.

மரம் வளைந்து காணப்படும் முறையை பார்த்தால் தொழுகையில் மனிதன் ருக்கூ செய்வது போன்றும் அதே போன்று மலை முகடு குனிந்து வளைந்து இருப்பதை பார்த்தவுடன் தொழுகையில் மனிதன் சஸ்தாவில் உள்ளது போன்றும் காணப்படுகிறது. பார்ப்பதற்கு வினோதமாகத்தான் உள்ளது எனவேதான் உடல் சிலித்துவிடுகிறது.

ஆனால் முஸ்லிம்களில் பலவீனர்கள் இந்த படங்களை பார்த்தவுடன் மேற்கண்ட அல்குர்ஆன் 24:41 என்ற இறைவசனம் கூறுவது இந்த உண்மையைதான் என்று படத்தை பார்த்துத்தான் நம்புகிறார்களே தவிர உள்ளத்தால் நம்புவதில்லை. (இந்த அரிய படங்கள் இல்லையெனில் இந்த வசனத்தை நிராகரிப்பார்களா?)

பலவீனர்களே கீழே உள்ளவற்றை சற்று சிந்தித்துப்பாருங்கள்
  • சுமார் 100 மரங்களுக்கு நடுவில் உள்ள ஒரே ஒரு மரம் மட்டும் ருக்கூ-வில் இருப்பது போன்று காணப்படுகிறது அப்படியானல் மீதமுள்ள 99 மரங்கள் ருக்கூவில் நின்று தொழவில்லையா?

  • மலைகள் சூழ்ந்த இந்த படத்தில் ஒரே ஒரு மலை முகடு மட்டும் சஸ்தாவில் இருப்பது போன்று உள்ளதே அப்படியானல் அருகருகே உள்ள மலைகள் சஸ்தா செய்ய வில்லையா?

கீழ்கண்ட அல்குர்ஆனுடைய வசனத்தை இவ்வாறு உணருங்கள்
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றன; ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹு செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது – அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான். (அல்குர்ஆன் 24:41)

முதலாவதாக இந்த அருள்மறை வசனம் உண்மையை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கிறது இதை நம்புவது நம் கடமையாகும் அதில் அணுவளவும் சந்தேகமில்லை. (அல்ஹம்துலில்லாஹ்)

முதலாவதாக
(நபியே!) நீர் பார்க்கவில்லையா? என்று மேற்கண்ட இந்த வசனத்தை அல்லாஹ் ஆரம்பிக்கின்றான் ஏனெனில் அல்லாஹ் யாருக்கு ஞானத்தை போதித்தானோ அவர்களுக்குத்தான் அதற்கான உண்மை மிக எளிதாக புரியும்.

உதாரணமாக இதயம் எவ்வாறு செயல்படும் என்ற பாடத்தை 10ம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் நடத்தினால் அவனால் ஓரளவுக்கு பதில் கூற இயலும் ஏனெனில் அவன் அதைப் பற்றிய அறிவை படிப்படியாக அறிந்துவைத்திருப்பான் ஆனால் இதே பாடத்தை 1ம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு நடத்தி்னால் ஏதாவது பயன் உள்ளதா?
எனவே இந்த வசனத்தில் கூறப்பட்டுள்ள மறைவான செய்திகளை அல்லாஹ் தன் இறுதித் தூதருக்கு கற்றுத்தருகிறான் என்பதை முதலில் உணருங்கள் பின்னர் அந்த தூதர் எவ்வாறு எதிர் கேள்வி கேட்காமல் இந்த செய்தியை உண்மை என்று நம்பினாரோ அவ்வாறு நீங்களும் நம்புங்கள்!

இரண்டாவதாக
வானங்களிலும், பூமியிலும் உள்ளவையும் என்று அல்லாஹ் கூறுகிறான் அதாவது வானங்கள் என்று பண்மையாக கூறப்பட்டுள்ளது அல்லாஹ்வின் வல்லமையை குறிக்கிறது அதை முதலில் நாம் உணர வேண்டும் இதோ ஆதாரம்
அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான். (அல்குர்அன் 2:29)

இங்கு அல்லாஹ் கூறும் ஏழு வானங்கள் என்ற உண்மையும் மறைவான ஞானத்தில் உள்ளதாகும் ஏனெனில் இதன் எல்லைகள் யாராலும் அறியமுடியாது (அல்லாஹ் நாடியோரைத் தவிர) இந்த ஏழு வானங்களிலும் அதற்குரிய மலக்குமார்களை அல்லாஹ் நியமித்துள்ளான் எனவே அந்தந்த மலக்குமார்களுக்கு வானங்கள் பற்றிய ஞானத்தை அல்லாஹ் கற்றுத்தந்திருப்பான் எனவே அவர்கள் இந்த பிரம்மாண்டத்தை கண்டு வியந்து அல்லாஹ்வை துதிக்கிறார்கள் என்று நாம் நம்ப வேண்டும்.

ஆனால் மனிதர்களாகளாகிய நாம் இந்த ஏழு வானங்கள் பற்றிய ஆராய்ச்சியில் மூழ்கினால் வழிதவிறிவிடுவோம் ஏனெனில் நமது கண்களுக்கு எட்டக்கூடிய வானத்தின் எல்லையை கூட நாம் அறிய திராணியற்ற பலவீனர்களாக உள்ளோம்! (அல்லாஹு அக்பர்)

மூன்றாவதாக
வானங்களை பண்மையாக வர்ணிக்கும் உங்கள் இறைவன் நாம் வாழத்தகுந்த இடத்தைப் பற்றி வர்ணிக்கும் போது பூமிகள் என்று பன்மையாக கூறாமல் பூமி என்று ஒருமையில் கூறுகிறான் அதாவது மனிதன் வாழத்தகுந்த இடம் இந்த பூமி மட்டும்தான் என்று நாம் நம்பவேண்டும். எனவே இந்த பூமியில் உள்ளவையும் அல்லாஹ்வை துதிக்கின்றன என்று நம்ப வேண்டும். ஆனால் பூமியில் உள்ள எல்லோரும் இறைவனை துதித்துவிடுவார்களா என்றால் இல்லை மாறாக அல்லாஹ் யாருக்கு நேர்வழிகாட்டினானோ அவர்களும் யார் அல்லாஹ்வை உள்ளத்தால் அஞ்சுகிறார்களோ அவர்கள் என்று கருதுங்கள்!

நான்காவதாக
பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றன; என்று அல்லாஹ் கூறுகிறான்.

இங்கு பறவைகளைப் பற்றி இறைவன் கூறுகிறான் அவைகளில் விண்ணில் படபடவென சிறகடித்து பறப்பவையும் உண்டு நிலத்தில் நடப்பையும் உண்டு எனவே மேற்கண்ட வசனத்தை படித்தவுடன் பறக்கும் பறவைகள் மட்டும்தான் பறந்து சென்று தஸ்பீஹ் செய்கின்றன என்று எண்ணிவிடக்கூடாது. மாறாக கீழ்கண்டவாறு சிந்தித்து உணர வேண்டும்.

வானத்தில் பறக்கும் போது பறவைகள் 100% கீழே விழுந்து மடிய வாய்ப்புகள் உள்ளது இருந்தாலும் இந்த பறக்கும் பறவைகள் வானில் எவ்வாறு பறக்க வேண்டும் என்று தங்களுடைய உள்ளுணர்வில் உதிக்கும் ஆற்றலை மையமாக வைத்து பறக்கும் முறைகளை தீர்மாணிக்கின்றன.

எனவே உள்ளத்தில் ஏற்படும் ஒருவகை உள்-உணர்வின் (சிந்தனையின்) திறமையினால் சிறகையடித்து வானில் பயமின்றி இவைகளால் பறக்க இயலுகிறது இப்படிப்பட்ட நிலையில் இவைகள் உள்ளுணர்வின் மூலம் பறக்கும் யுக்திகளை உணரும்போது அல்லாஹ்வின் வல்லமையையும் நிச்சயமாக உணர்ந்திருக்கும் என்று நாம் நம்ப வேண்டும். எனவே இந்த உள்ளுணர்வின் மூலமாக ஏன் இந்த பறவைகள் அல்லாஹ்வை பறந்தபடியே நன்றி செலுத்த தஸ்பீஹ் செய்யாது? என்று நினைக்க வேண்டும் அதை அப்படியே நம்ப வேண்டும்! (அல்லாஹு அக்பர்)


ஐந்தாவதாக
இறுதியாக இந்த வசனத்தில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்
ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹு செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது – அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான்

வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகளும் தொழுகின்றன தஸ்பீஹ் செய்கின்றன என்று அல்லாஹ் கூறுகிறான் எனவே இதை மறுகேள்விக்கு இடமளிக்காமல் இதை இவ்வாறே நாம் நம்ப வேண்டும். மாறாக காக்கை எவ்வாறு தொழும், கழுகு எவ்வாறு தொழும், மலை எவ்வாறு தொழும், மலக்குகள் எவ்வாறு தொழுவார்கள் என்று கேள்வி எழுப்பக்கூடாது.

நம்மை நாமே முஸ்லிம்கள் என்று கூறிக்கொண்டு நபிகளார் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த தொழுகையையே ஒழுங்காக பின்பற்றாமல் தங்கள் நாதாக்களும், குருமார்களும் கற்றுத்தந்த பித்அத் புதுமையான முறையில் ஷாபி, ஹனபி முறை தொழுகை, 20 ரக்ஆத் 40 ரக்ஆத் தொழுகை என 1000 புதுவகை தொழுகை முறைகளை வேதமும் நபிவழியும் இருக்கும் போதே மனிதன் பின்பற்றுகிறான். எனவே மேற்கண்ட கேள்வி எழுப்ப இவனுக்கு அடிப்படை அறிவே கிடையாது!

மேலும் மேற்கண்ட வசனத்தில் வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகளும் தொழும் முறைகளை எவ்வாறு உள்ளுணர்வின் அடிப்படையில் அறிந்துவைத்துள்ளனவோ அதுபோல அவைகளின் செயல்பாடுகளையும் அல்லாஹ்வும் நன்கறிந்துள்ளான் என்ற செய்தியை இந்த அருள்மறை வசனம் உறுதிப்படுத்துகி்ன்றது எனவே எதிர்கேள்விக்கு இடமே இல்லை மேலும் இப்படிப்பட்ட கேள்வியை கேட்க நமக்கு எந்த அதிகாரமும் கிடையாது!

அப்படியானல் குர்ஆனில் மனிதனுக்கு உள்ள அதிகாரம் என்ன இந்த வரைமுறையைக் கூட அல்லாஹ் அழகாக குர்ஆனில் வர்ணிக்கிறான் அவைகளை பற்றி சுருக்கமாக காண்மோம்!

மனிதன் ஆராய்ச்சி செய்ய வேண்டிய அருள்மறை வசனங்கள்
அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் ஆகியவற்றின் தொழுகை, தஸ்பீஹ் பற்றிய மறைவான செய்திகளை தெளிவாக விளக்கிக் கூறிய இறைவன் அந்த வானங்கள், பூமி மற்றும் பறவைகளை பற்றி மனிதன் எவ்வாறு ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்பதையும் கூறுகிறான் இதோ

வானத்தை பற்றி சிந்திக்க வலியுறுத்தும் குர்ஆன் வசனம்
பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின. (அல்குர்ஆன் 41:11)

பூமியை பற்றி சிந்திக்க – குர்ஆன் வசனம்
பூமியை அதன் அருகுகளிலிருந்து நாம் (படிப்படியாகக்) குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா, மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பவன்; அவன் தீர்ப்பை மாற்றுபவன் எவனுமில்லை! மேலும், அவன் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன் (அல்குர்ஆன் 13:41)

வானம், பூமி மற்றும் கப்பல்கள் பற்றி சிந்திக்க – குர்ஆன் வசனம்
(நபியே) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியிலுள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான், தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்து விடாதவாறு அவன் தடுத்தும் கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன். (அல்குர்ஆன் 22:65)
அவர்கள் பூமியைப் பார்க்கவில்லையா? – அதில் மதிப்பு மிக்க எத்தனையோ வகை (மரம், செடி, கொடி) யாவற்றையும் ஜோடி ஜோடியாக நாம் முளைப்பித்திருக்கின்றோம். (அல்குர்ஆன் 26:7)


நிச்சயமாக நாமே இரவை அதில் அவர்கள் ஓய்ந்திருப்பதற்காகவும், பகலை (அவர்களுக்கு) வெளிச்சமாகவும் ஆக்கினோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொண்ட மக்களுக்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் 27:86)

பறவைகளை பற்றி சிந்திக்க – குர்ஆன் வசனம்
இறக்கைகளை விரித்துக் கொண்டும், சேர்த்துக் கொண்டும், இவர்களுக்கு மேல் (வானில் பறக்கும்) பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அர்ரஹ்மானைத் தவிர (வேறு யாரும் கீழே விழாது) அவற்றைத் தடுத்துக் கொண்டிருக்கவில்லை – நிச்சயமாக அவன் ஒவ்வொரு பொருளையும் நோட்டமிடுபவன். (அல்குர்ஆன் 67:19)

வான(மண்டல)த்தின் (காற்று) வெளியில் (இறை கட்டளைக்குக்) கட்டுப்பட்டு பறக்கும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அவற்றை (ஆகாயத்தில்) தாங்கி நிற்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை; நிச்சயமாக இதில் ஈமான் கொண்ட மக்களுக்கு(த் தக்க) அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்ஆன் 16:79)

மறைவான ஞானத்தை யார் நம்புவார்கள்?
அல்லாஹ் ஞானம் மிக்கவன் என்ற சொல் 100க்கு 100 உண்மையாகிவிட்டது ஏனெனில் இன்றைக்கு நாங்களும் முஸ்லிம்கள்தான் என்று தங்களைத்தாங்களே மார்தட்டிக் கொள்ளும் ஒருசிலர் தக்காளியில், சுண்டைக்காயில், பப்பாளியில் அல்லாஹ்வின் பெயர் உள்ளது என்பதை ஆதாரத்துடன் கண்களால் கண்ட பின்புதான் ஆஹா! ஓஹோ என்று அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைக்கிறார்கள் இது முறையான நம்பிக்கையல்ல! மாறாக முஸ்லிம்களில் குர்ஆனையும் நபிவழியையும் முறையாக பேணி அல்லாஹ்வுக்கு அஞ்சும்விதமாக அஞ்சி பயபக்தியுடன் வாழ்பவர்கள் தங்கள் கண்களுக்கும், தங்கள் அறிவுப் புலன்களுக்கும் எட்டாத மறைவான விஷயங்களை ஆதாரம் இல்லையென்றாலும் அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறுகிறார்கள் என்பதற்காகவே நம்புகிறார்கள் என்ற உண்மைச் செய்தியை படைத்த ரப்புல் ஆலமீனே கூறுகிறான்! இந்த ஞானம் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருக்கேனும் வந்துவிடுமா? (சுப்ஹானல்லாஹ்) ஆதாரம் இதோ!

(பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (அல்குர்அன் 2:3)


குறிப்பு
சகோதர சகோதரிகளே இனிமேலாவது மரம் தொழுவுது, காக்கை தொழுவுது, மலை சஸ்தாவில் இருக்குது என்று படங்களை காட்டி புரளியை கிழப்பாதீர்கள் அப்படி நீங்கள் புரளியை கிழப்பினால் அவைகள் தினமும் எத்தனை ரக்ஆத் தொழுகின்றன, எத்தனை முறை தஸ்பீஹ் ஓதுகின்றன என்பதை விளக்குங்கள்! மனிதன் தொழுவதைப் போன்றுதான் மலையும், மரமும் தொழுமா? இந்த அறிவு கூட வேண்டாமா? அள்ள அள்ள குறையாத செல்வத்தை கண்களால் கண்ட பின்பு ஒரு சில அரேபியர்களுக்கு அறிவு மழுங்கி இப்படி வதந்தியை கிழப்புகிறார்கள் தமிழ்நாட்டில் வாழக்கூடிய முஸ்லிம்களாகிய நாங்களுமா அஜமிகளாக மாறி அவர்களின் மூடத்தனத்தை பின்பற்றவேண்டும்! சிந்திப்பீர்! செயல்படுவீர்!

எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே
அல்ஹம்துலில்லாஹ்!

Post a Comment

0 Comments