இஸ்லாத்தை ஏற்ற முதல் முஸ்லீம் வரகா பின் நவ்ஃபல் (ரலி).

(1997 மார்ச் மாத அல்ஜன்னத் பத்திரிக்கையில் பிரபல எழுத்தாளரும், ஆய்வாளருமான சகோதரர் எம்.ஐ. சுலைமான் அவர்களினால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரையை காலத்தின் தேவை கருதி இங்கு வெளியிடுகிறோம். Rasmin M.I.Sc)

ஹிராக் குகையில் திருமறை வசனங்களை ஓதிக்காட்டிய ஜிப்ரீல் (அலை) அவர்களைப் பார்த்துப் பயந்தவர்களாக நபி (ஸல்) அவர்கள் தமது துணைவியார் கதீஜா (ரலி) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறிவிட்டு,

தனக்கு ஏதும் நிகழ்ந்து விடுமோ என தான் உறுதியாக அஞ்சுவதாகக் கூறினார்கள். அப்போது கதீஜா (ரலி) அவர்கள் அவ்வாறு கூறாதீர்கள் உங்களை அல்லாஹ் ஒரு போதும் இழிவுபடுத்த மாட்டான் ஏனெனில் தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள், (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள், வரியவர்களுக்கு உழைக்கிறீர்கள், விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள், உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகின்றீர்கள் என்றார்கள்.
 

பின்னர் நபியவர்களை வரகாவிடம் அழைத்துச் சென்றார்கள் வரகா அறியாமைக் காலத்திலேயே கிருத்தவ மதத்தைத் தழுவியவராக இருந்தார். மேலும் அவர் ஹீப்ரு மொழியில் எழுதத் தெரிந்தவராகவும், இன்ஜீல் வேதத்தை ஹீப்ரு மொழியில் அவர் எழுத வேண்டும் என்று அல்லாஹ் நாடிய அளவிற்கு எழுதுகிறவராகவும், கண் பார்வையற்ற பெரும் வயோதிகராகவும் இருந்தார்.

அவரிடம் கதீஜா (ரலி) அவர்கள் என் தந்தையின் சகோதரர் மகனே! உம் சகோதரர் மகன் கூறுவதைக் கேளுங்கள்! என்றார்கள். அப்போது வரகா நபியவர்களிடம் என் சகோதரர் மகனே! நீர் எதைக் கண்டீர்? எனக் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தாம் பார்த்த செய்திகளை அவரிடம் கூறினார்கள்.

அதைக் கேட்டதும் வரகா நபி (ஸல்) அவர்களிடம், வந்த இவர்தாம் மூஸாவிடம் இறைவன் அனுப்பிய நாமூஸ் (ஜிப்ரீல்) ஆவார் என்று கூறிவிட்டு உமது சமூகத்தினர்கள் உம்மை உமது நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில் நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே! என்று அங்கலாய்த்துக் கொண்டார்.

அப்போது நபியவர்கள் மக்கள் என்னை வெளியேற்றவரா போகிறார்கள்? என்று கேட்டார்கள் அதற்கவர் ஆம் நீர் கொண்டு வந்திருப்பது போன்ற சத்தியத்தைக் கொண்டு வந்த எந்த மனிதரும், (மக்களால்) பகைத்துக் கொள்ளப்படாமல் இருந்ததில்லை. (நீர் வெளியேற்றப் படும்) அந்நாளை நான் அடைந்தால் உமக்கு பலமான உதவி செய்வேன். என்று கூறினார். அதன் பின் வரகா நீண்ட நாள் வாழாமல் மரணித்து விட்டார். இந்த முதற் செய்தியுடன் வஹீ (சிறிது காலம்) நின்று விட்டது.

(புகாரி 3,6982 முஸ்லிம்)

தாம் இறைத் தூதர் என்று வரகா அவர்கள் உறுதிப் படுத்தியதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்களுக்கு இறை செய்தி (சிறிது காலம்) தடைப்பட்டது என்று மேற்கூறிய செய்தி குறிப்பிடுகிறது.

எத்தனை நாட்கள் வஹீ வராமல் இருந்தது என்பதில் அறிஞர்கள் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார்கள். மூன்று வருடங்கள் என்று சிலரும், ஆறு மாதங்கள் என்று சிலரும்,சில நாட்கள் என்று இன்னும் சிலரும் குறிப்பிடுகின்றனர். இவர்கள் குறிப்பிடும் இந்தக் காலக் கணக்கிற்கு எந்தச் சான்றும் ஸஹீஹான ஹதீஸ்களில் இல்லை.

வரகா பின் நவ்ஃபல் இஸ்லாத்தை ஏற்றாரா? 

நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம் என்பதை உறுதிப் படுத்திய வராக அவர்கள் முஸ்லிமா? இல்லையா? என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது. அவர் தொடர்பாக வந்துள்ள நபி மொழிகளை காண்போம்.

1. கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வரகா இப்னு நவ்ஃபல் அவர்களைப் பற்றிக் கேட்ட பொது "அவர் வெள்ளை நிற ஆடை அணிவிக்கப்பட்டவராக கண்டேன். அவர் நரகவாதியாக இருந்திருந்தால் அவர் மீது வெள்ளை ஆடை இருந்திருக்காது" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : அஹ்மத்

2. வரகாவை பற்றி கதீஜா (ரலி) அவர்கள் நபியவர்களிடம் கேட்டார்கள். "உங்களை அவர் உண்மைப் படுத்தினார் ஆனால் (இம்மார்கத்தை நீங்கள்) வெளிப்படுத்துவதற்கு முன் இறந்து விட்டாரே!" அதற்கு "கணவில் எனக்கு அவர் காட்டப்பட்டார். அவர் மீது வெள்ளை நிற ஆடை இருந்தது. அவர் நரகவாதியாக இருந்தால் அவர் மீது வேறு ஆடை இருந்திருக்கும்." என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : திர்மிதி

3. வரகா பின் நவ்ஃபல் அவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது "அவர் மீது வெள்ளை நிற ஆடை இருக்கக் கண்டேன். அவரை சுவர்க்கத்தில் கண்டேன். அவர் மீது பட்டாடை இருந்தது" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)
நூல் : அபு யஃலா

4. வரகா அவர்கள் இறந்த போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (வரகாவிற்கு) ஜன்னத்தில் (சுவர்கத்தில்) ஒரு கோட்டையைக் கண்டேன். அவர் மீது பட்டாடை இருந்தது. (ஏனெனில்) அவர் நான் கொண்டு வந்ததை நம்பினார். உண்மைப்படுத்தினார்.

அறிவிப்பவர் : அம்ர் பின் ஸர்ஹபீல் 
நூற்கள் பைஹகீ ஆபு நுஐம் (தலாயிலுன் நுப்வா)

5. "வரகாவை ஏசாதீர்கள் அவருக்காக ஒன்றோ, இரண்டோ சுவர்கத்தைப் பார்த்தேன்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி)
நூற்கள் : பஸ்ஸார் இப்னு அஸாகீர்

மேற்கண்ட ஹதீஸ்களில் முதல் நான்கு செய்திகள் பலவீனமானவையாகும். ஐந்தாவது ஹதீஸ் இடம் பெரும் நூற்களில் இப்னு அஸாகீர் நூலின் அறிவிப்பாளர் வரிசை பலமானதாகும் என்று இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (அல்பிதாயா)

இப்னு அஸாகீரில் இடம் பெரும் ஹதீஸின் அடிப்படையில் வரகா அவர்களை முஸ்லீம், சுவர்க்கவாதி என்று முடிவு செய்யலாம். மேலும் புகாரியின் (3, 6982) அறிவிப்பில்,

"உமது சமூகத்தார் உம்மை உமது நாட்டிலிருந்து வெளியேற்றும் சமயத்தில நான் உயிருடன் திடகாத்திரமான இளைஞனாக இருந்திருக்க வேண்டுமே!" என்று அங்களாய்த்துக் கொண்டார்.

"(நீர் வெளியேற்றப்படும்) அந்நாளை நான் அடைந்தால் உமக்க பலமான உதவி செய்வேன்." என்று கூறினார்.

இந்த வாசகங்கள் வரகா அவர்கள் நபி (ஸல்) அவரக்ள் கொண்டு வந்த இறைச் செய்தியின் மீது ஆழமாக நம்பிக்கை கொண்டிருக்கிறார் என்பதையே வெளிப்படுத்துகிறது.

ஈமான் என்பது இறைச் செய்தியையும், இறைத் தூதரையும் மனதால் நம்புவதுதான். இதை வரகா அவர்கள் ஏற்றுள்ளதினால் அவரை முஸ்லீம் என்று சொல்வதே சரியானதாகும்.

இதன் அடிப்படையில் இஸ்லாத்தை ஏற்ற முதல் நபர் என்ற பெருமையை வரகா (ரலி) அவர்கள் பெருகிறார்கள்.

தப்ரீ, இப்னு கானிஃ, இப்னு ஸகன் போன்ற அறிஞர்கள் வரகா அவர்களை நபித் தோழர்கள் என்றே கூறுகிறார்கள். (அல் இஸாபா)

Post a Comment

0 Comments