அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


ஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 08) உஸ்மான் (ரலி) அவர்களின் குணநலன்.


(சகோதரர் பி.ஜெ அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாத இதழில் ஜிஹாத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் தொடராக வெளியிட்ட இந்த ஆக்கம் அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி ஜிஹாத் பற்றிய தெளிவான புரிதலையும் கொடுத்தது. காலத்தின் தேவை கருதி அந்தத் தொடர் ஆய்வை நமது தளத்தில் வெளியிடுகிறோம். ஒரு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்தத் தொடர் வெளியிடப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். Rasmin M.I.Sc )

உஸ்மான் (ரலி) அவர்கள் உறவினர்களைப் பதவியிலமர்த்தினார் என்ற குற்றச்சாட்டிற்கு உதாரணமாக, பெரிய பதவியில் அமர்த்தப்பட்டவர்கள் பற்றியும், அவர்களது தகுதிகளைப் பற்றியும் அதுவே மக்களிடம் பெரும் அதிருப்தியைத் தோற்றுவிக்கக் காரணமானது என்பதையும் மேலே ஒரு சில உதாரணங்களின் மூலம் பார்த்தோம்.
பொதுவாக அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரின் குணநலன்களுக்கும், உஸ்மான் (ரலி) அவர்களின் குணநலன்களுக்கும் அடிப்படையிலேயே பெரிய வித்தியாசம் உண்டு. உஸ்மான் (ரலி) அவர்களைப் பொறுத்த வரை மிகவும் இரக்க குணம், வெட்க குணம், எளிதில் யாரையும் நம்பி விடக் கூடிய சுபாவமும் உடையவர்கள்.

அவர்களின் இத்தகைய வெள்ளை உள்ளம் தான் உறவினர்கள் விஷயத்திலும் அக்கறைக் காட்ட வைத்தது. அதுவும் அவர்கள் பதவியில் அமர்த்தியவர்களை தகுதியற்றவர்கள் என்று தெரிந்து பதவியில் அமர்த்தவில்லை. அவர்கள் சிறப்பானவர்கள், தகுதியானவர்கள் என்று நினைத்தே அமர்த்தினார்கள். தகுதியற்றவர்கள் என்று தெரிந்த பின் அவர்களைப் பதவியிலிருந்து நீக்கவும் செய்தார்கள், தண்டிக்கவும் செய்தார்கள் என்பதை "வலீத் பின் உக்பா'வின் சம்பவம் எடுத்துரைக்கிறது.

உஸ்மான் (ரலி) அவர்கள் பதவியில் அமர்த்தியவர்களில் பெரும்பாலோர் மக்கா வெற்றி வரை இஸ்லாத்தை ஏற்காமல், முஸ்லிம்களை எதிர்த்து விட்டு, மக்கா வெற்றியின் போது பெருமானார் (ஸல்) அவர்களால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பத்தினருமே (உதாரணம் : முஆவியா (ரலி), வலீத் பின் உக்பா, மர்வான் பின் ஹகம்) என்பதால் மக்கள் அதிருப்தியடைந்தனர். மூத்த நபித்தோழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாததை பலர் ஏற்றுக் கொள்ளவில்லை.

எகிப்திலிருந்து ரகசியப் படை கிளம்புதல்.

எகிப்தின் ஆளுநர் பதவியிலிருந்து அம்ர் பின் அல் ஆஸ் (ரலி) அவர்களை நீக்கியதை ஏற்றுக் கொள்ளாத சிலர், உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கு எதிராக ஒரு கூட்டத்தைத் திரட்டுகிறார்கள். ஆட்சிக்கு எதிராக திட்டம் வகுத்து ரகசியமாக செயல்பட "பைஅத்' (உறுதிமொழி) செய்த 600 பேர் தயாராகிறார்கள்.

இந்த ரகசிய பைஅத் செய்த 600 பேர் கொண்ட கூட்டம் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கிய - புனித நகரமான - சண்டையிடுவதற்குத் தடை செய்யப்பட்ட இடமான - மதீனாவுக்குள் நுழைந்து தலைநகரையே கைப்பற்றுவதற்கான திட்டத்தில் - அதற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டது.

600 பேரும் மதீனாவுக்குள் ஒட்டுமொத்தமாக நுழைவது கடினம். அது இயலாத காரியம் என்றெண்ணி உம்ராவுக்குச் செல்வதாகக் கூறிக் கொண்டு இஹ்ராம் கட்டிய நிலையில் ஹிஜ்ரி 35-ம் ஆண்டு ரஜப் மாதத்தில் மதீனாவுக்குச் செல்கிறது.

உஸ்மான் (ரலி) அவர்களுக்கு எதிரான இந்த அதிரடி ரகசிய நடவடிக்கைகளை தனது உளவாளிகள் மூலம் அறிந்த எகிப்தின் ஆளுநராகப் பொறுப்பேற்ற அப்துல்லாஹ் பின் ஸஃத் அவர்கள், உடனடியாக உஸ்மான் (ரலி) அவர்களுக்கு தகவல் அனுப்புகிறார்கள். தகவலைப் பெற்ற உஸ்மான் (ரலி) அவர்கள், தலைநகரைக் கைப்பற்ற எகிப்திலிருந்து ரகசியப் படை வரும் தகவலைப் பக்குவமாக எடுத்துச் சொல்லி, அதை நுழைவாயிலேயே தடுத்து நிறுத்தும் பொறுப்பை அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களிடம் ஒப்படைக்கிறார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்களின் வேண்டுகோளை ஏற்ற அலீ (ரலி) அவர்கள், தம்முடன் ஒரு சிறு கூட்டத்தை அழைத்துக் கொண்டு மதீனாவின் நுழைவாயிலுக்குச் சென்று, எகிப்திலிருந்து வந்த ரகசியப் படையினருடன் சமரச முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கெதிராக அவர்கள் படை திரட்டி வந்ததற்கான காரணங்களையும், அவர்களின் கோரிக்கைகளையும் அலீ (ரலி) அவர்களிடம் எடுத்துரைக்கிறார்கள். அலீ (ரலி) அவர்கள்,  அவர்களின் வாதங்களைப் பொறுமையாகக் கேட்டு விட்டு, ஒவ்வொன்றுக்கும் உஸ்மான் (ரலி) அவர்கள் பக்கம் நியாயம் உள்ளது போன்றே பதிலளித்து, அவர்களை ஓரளவு திருப்திப்படுத்தி, திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.

உஸ்மான் (ரலி) மீதான குற்றச்சாட்டுக்கு அலீ (ரலி) விளக்கம்.

உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சி மீது ஏற்பட்ட வெறுப்புக்கும், அவர்களுக்கெதிரான புரட்சிக்கும் மிகமுக்கியக் காரணமான உறவினர்களுக்கு சலுகை அளித்தார்கள் என்ற குற்றச்சாட்டு குறித்த வரலாற்று ஆதாரங்களை மேலே பார்த்தோம்.

அவர்கள் தங்களின் புரட்சிக்கு வலு சேர்க்கும் வகையில் மேலும் பல குற்றச்சாட்டுக்களையும் வைத்தார்கள். எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த புரட்சியாளர்ளை அலீ (ரலி) அவர்கள் மதீனா எல்லையில் தடுத்து நிறுத்திய போது, நாம் மேலே குறிப்பிட்டபடி மூத்த ஸஹாபாக்களையெல்லாம் புறக்கணித்து விட்டு இளைஞர்களையே உஸ்மான் (ரலி) அவர்கள் பதவியில் அமர்த்துகிறார் என்ற பிரதான குற்றச்சாட்டுடன் மேலும் பல குற்றச்சாட்டுகளையும் அலீ (ரலி) அவர்களிடம் முன்வைத்தார்கள். அவற்றுக்கு அலீ (ரலி) அவர்கள் என்ன பதில் சொல்லி அவர்களைத் திருப்திபடுத்தினார்கள் என்பதை பார்ப்போம்.

1. மூத்த ஸஹாபாக்களை விட்டு விட்டு இளைஞர்களுக்குப் பதவி.

உஸ்மான் (ரலி) அவர்கள் இளைஞர்களுக்குப் பதவியளித்தார்கள் என்பதை குற்றமாகக் கருத முடியாது. நபி (ஸல் அவர்களும் கூட மக்கா வெற்றிக்குப் பிறகு இஸ்லாத்தை ஏற்ற இளைஞர்களுக்குத் தகுதி அடிப்படையில் பொறுப்பை வழங்கியிருக்கிறார்கள் என்று கூறி அதற்கு உதாரணமாக சில நிகழ்வுகளையும் குறிப்பிடுகிறார்கள். அவை யாவன :

• அத்தாப் பின் உஸைது என்பவர் மக்கா வெற்றிக்குப் பிறகு இஸ்லாத்தைத் தழுவியவர், அவருக்கு 20 வயதிலேயே பெருமானார் (ஸல்) அவர்கள் மக்காவின் நிர்வாகியாக பதவியளித்தார்கள்.

• உஸாமா பின் ஜைத் அவர்களை ஒரு போருக்குத் தளபதியாக பெருமானார் (ஸல்) அவர்கள் நியமித்தார்கள்.

• தன்னை நபி என்று சொல்லிக் கொண்டு குழப்பம் விளைவித்துக் கொண்டிருந்த முஸைலமா என்பவனுக்கு எதிராக போருக்குப் புறப்பட்ட படையின் தளபதியாக இளைஞர் உஸாமா அவர்களை அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் மீண்டும் அனுப்பினார்கள் என்று விளக்கமளித்தார்கள்.

2. கோத்திரத்தாருக்கு முன்னுரிமை.

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்து குடியேறி அங்கு ஆட்சி அமைத்த பிறகு எல்லாத் துறைகளிலும் மதீனா வாசிகளான அன்சாரிகளை விட மக்காவிலிருந்து வந்த முஹாஜிர்கள் அதிகமாக இடம்பெற்றிருந்தார்கள். அதனால் நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளைப் புறக்கணித்து விட்டார்கள். மக்கா வாசிகள் என்பதற்காக முன்னுரிமையளித்து விட்டார்கள் என்று குற்றமாக எடுத்துக் கொள்ள முடியுமா? எனவே இது ஒரு ஆட்சித் தலைவருக்கு எதிராக படை திரட்டக் கூடிய அளவுக்கு பெரிய குற்றமாகாது என பதிலளித்தார்கள்.

3. குர்ஆனை எரித்தார்.

அடுத்து அவர்கள் வைத்த குற்றச்சாட்டு உஸ்மான் (ரலி) குர்ஆனை எரித்து விட்டார். எனவே குர்ஆனை எரித்தவர்களுக்கு எதிராக போர் செய்யலாம் என்ற வாதத்தை வைத்தார்கள்.

இந்தக் குற்றச்சாட்டு ஏன் உருவானது?

நபி (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் சிறிது சிறிதாக தேவைக்கேற்ப 23 ஆண்டுகள் இறக்கப்பட்டது. அவ்வப்போது அவர்களுக்கு அருளப்படும் வசனங்களை எழுதிக் கொள்வதற்காக "காத்திபுல் வஹீ' - வஹீயை எழுதுபவர்கள் என்று சில நபித்தோழர்கள் இருந்தார்கள்.

திருக்குர்ஆனை எழுதி வைத்திருந்த நபித்தோழர்கள் அனைவரிடத்திலும், முழுக்குர்ஆனும் இருந்திருக்கவில்லை. நபி (ஸல்) அவர்களுக்குப் பின் பல பகுதிகளுக்கும் சென்ற அந்த நபித்தோழர்கள் தங்களிடமிருந்த வசனங்களைக் கொண்டு மட்டுமே மக்களிடம் போதனை செய்து வந்தார்கள். இந்த நிலையை மாற்றுவதற்காக தமது ஆட்சியின் போது எல்லா நபித்தோழர்களிடமும் இருந்த கையெழுத்துப் பிரதியை சேகரித்து, முழுக் குர்ஆனையும் தொகுக்கும் பணியை உஸ்மான் (ரலி) அவர்கள் செய்தார்கள். இதனால் தான் அவர்களுக்கு "ஜாமிஉல் குர்ஆன்' (குர்ஆனை ஒன்று சேர்த்தவர்) என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

அவ்வாறு முழுக் குர்ஆனையும் தொகுத்த பின் துண்டு துண்டாக இருந்த வசனங்களை - அவை மட்டும் தான் குர்ஆன் என்ற நிலை பிற்காலத்தில் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக எரித்து விட்டார்கள். (உஸ்மான் (ரலி) அவர்கள் தொகுத்த குர்ஆனின் கையெழுத்துப் பிரதி இன்று உலகிலேயே இரண்டு தான் உள்ளது. அவற்றில் ஒன்று ரஷ்யாவிலுள்ள தாஷ்கண்ட் மியூசியத்திலும், மற்றொன்று துருக்கியில் இஸ்தான்புல் மியூசியத்திலும் உள்ளது)

அவ்வாறு நல்ல நோக்கத்திற்காக உஸ்மான் (ரலி) அவர்கள் அத்தகைய குர்ஆன் பிரதிகளை எரித்ததை, காரிஜியாக்களும், முனாபிக்குகளும் பெரிதுபடுத்தி, உஸ்மான் குர்ஆனை எரித்து விட்டார். எனவே அவருக்கு எதிராக ஜிஹாத் செய்ய வேண்டும் என்ற கருத்தை முஸ்லிம்களிடம் பரப்பி விட்டார்கள். இந்த விளக்கத்தை அலீ (ரலி) அவர்கள் சொன்ன பிறகு அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

4. ஹஜ்ஜின் போது தொழுகையில் மாறு செய்தார்.

பெருமானார் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜின் போது தொழுகையில் கஸர் (குறைத்துத் தொழுதல்) செய்ய வேண்டும் என்றே வழிகாட்டி இருக்கிறார்கள். ஆனால் உஸ்மான் (ரலி) அவர்கள் கஸர் செய்யாமல் தொழுதார் என்பது அவர்கள் அடுத்து வைத்த குற்றச்சாட்டு.

இதற்குப் பதிலளித்த அலீ (ரலி) அவர்கள், மக்காவை அவர் தனது சொந்த ஊராகக் கருதியதால் சொந்த ஊரில் கஸர் செய்ய வேண்டிய அவசியமில்லை என்ற காரணத்தால் அவர் அப்படி தொழுதார் என்று விளக்கமளித்தார்கள்.

5. விளை நிலங்களை அரசுடமை ஆக்கினார்.

(அக்காலத்தில் உரிமை கொண்டாடப்படாத விளைநிலங்கள் இருந்தன. அவற்றை யாரெல்லாம் தங்களுக்குத் தேவையான அளவு எடுத்துக் கொள்கிறார்களோ அது அவர்களுக்குச் சொந்தம் என்ற நிலை இருந்து வந்தது. அதை மாற்றி அத்தகைய) நிலங்கள் யாவும் அரசாங்கத்திற்குச் சொந்தம் என்று உஸ்மான் (ரலி) அவர்கள் சட்டமியற்றினார்கள். இது மக்கள் விரோதச் செயல் என்று குற்றச்சாட்டை வைத்தார்கள்.

இதற்குப் பதில் அளித்த அலீ (ரலி) அவர்கள், உரிமை கோரப்படாத விளைநிலங்களை அரசாங்கத்திற்குச் சொந்தமாக்கியதற்குக் காரணம், ஜகாத் ஒட்டகங்கள் அரசாங்கத்திடம் உள்ளன. அவற்றைப் பராமரிக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது. அவற்றின் மேய்ச்சலுக்காக நிலங்கள் தேவைப்படுகிறது. எனவே அதைக் கருத்தில் கொண்டு தான் உஸ்மான் (ரலி) இந்தச் சட்டத்தை இயற்றினார். இது ஒரு குற்றமாகாது. மேலும் ஏற்கனவே உமர் (ரலி) அவர்களும் இது போன்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் என்று விளக்கமளித்தார்கள்.

ஆட்சித் தலைவருக்கு அலீ (ரலி)யின் அறிவுரை.

அதன்பிறகு அலீ (ரலி) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களிடம் "உங்களின் ஆட்சி முறையில் மக்களின் அதிருப்தி அதிகமாகிக் கொண்டே செல்கிறது. நீங்கள் அபூபக்கர் (ரலி) மற்றும் உமர் (ரலி) ஆகியோர் நடத்திய ஆட்சி முறையைப் பின்பற்றிச் செல்லுங்கள். அது தான் உங்களுக்கு நல்லது'' என்று அறிவுரை கூறினார்கள்.

அதைத் தொடர்ந்து உஸ்மான் (ரலி) அவர்கள் ஒரு ஜும்ஆ குத்பாவின் போது, தனது ஆட்சியில் ஏற்பட்ட சிறு சிறு தவறுகளுக்காக மனந்திருந்தி மக்களிடம் அழுது மன்னிப்புக் கேட்டார்கள்.

தான் இது நாள் வரை ஏற்றுக் கொண்ட பொறுப்பிலிருந்து சற்று விலகி இருந்து விட்டதாகவும், இனி அது போல இருக்க மாட்டேன், எந்த நேரமும் மக்கள் என்னை வந்து சந்தித்து தங்கள் குறைகளை முறையிடலாம். இனி சிறந்த முறையில் ஆட்சி செய்வேன் என்று உத்தரவாதமளித்தார்கள். அந்த குத்பாவின் போது, உஸ்மான் (ரலி) அவர்கள் தங்களின் நிலையை விளக்கி அழுததைப் பார்த்த மக்களும் அழுதார்கள்.

அதன் பிறகு சிலகாலம் மக்கள் ஜனாதிபதியை எந்நேரமும் சந்திக்கக் கூடிய, குறை நிறைகளைப் பற்றி பேசக் கூடிய, ஆலோசனைகள் வழங்கக்கூடிய நிலை சிறிது காலம் தொடர்ந்தது. 

மர்வானின் அடாவடி.

உஸ்மான் (ரலி) அவர்கள் தங்கள் ஆட்சிப் பொறுப்பின் மீது அதிக கவனம் செலுத்தி, குறைகளைக் களைந்து, நடவடிக்கை எடுத்து வருவதை ஜீரணிக்க முடியாத மர்வான் பின் ஹகம் (தலைமைச் செயலர்), ஜனாதிபதிக்குத் தெரியாமலேயே பல காரியங்களைச் செய்யத் துவங்கினார். அவரது செயல்களுக்கான பழியை உஸ்மான் (ரலி) அவர்களே சுமக்க வேண்டியதாயிற்று. ஏனைய சஹபாக்களுக்கும் உஸ்மான் (ரலி) அவர்களுக்கும் இடையேயான தொடர்புகளைத் துண்டிக்க முற்பட்டார். தன்னை மட்டுமே சார்ந்திருக்கக் கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தினார். 

மஜ்லிஸ் ஷுராவில் சஹாபாக்களைக் கண்டித்துப் பேசவும் ஆரம்பித்தார். இதைப் பெரும்பாலான சஹாபாக்கள் விரும்பவில்லை.

உஸ்மான் (ரலி) அவர்களின் துணைவியார் நாயிலா (ரலி) அவர்களுக்குக் கூட மர்வானின் செயல் பிடிக்கவில்லை. ஒரு முறை தனது கணவரிடம், "நீங்கள் மர்வானின் பேச்சைக் கேட்டு நடந்தால் உங்களைக் கொலை செய்யாமல் விடமாட்டார். அவருக்கு அல்லாஹ்வின் மீது அச்சமோ, அன்போ, மதிப்போ இல்லை'' என்று நேரடியாகவே எச்சரிக்கவும் செய்தார்.

மக்களெல்லாம் உஸ்மான் (ரலி) அவர்களை மர்வான் தன் கையில் போட்டுக் கொண்டு ஆட்டிப் படைக்கிறார் என்று சொல்லுமளவுக்கு மீண்டும் அதிருப்தியும், குழப்பமும் தலைதூக்குகிறது. அலீ (ரலி) அவர்களும் மீண்டும் உஸ்மான் (ரலி) அவர்களைக் கண்டிக்கிறார்கள்.

ஜிஹாத் (கிதால்) பிரகடனம்.

இந்நிலையில் தான் உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் - ஜிஹாத் என்ற பெயரில் செய்யப்படுகிறது. எந்த அளவுக்கு என்றால், "உஸ்மானை எதிர்ப்பது தான் மிகப்பெரிய ஜிஹாத் (அக்பருல் ஜிஹாத்)'' என்ற கருத்து மக்களிடம் உருவாக்கப்படுகிறது.

முன்னர் எகிப்திலிருந்து மட்டுமே ஒரு ரகசியக் கூட்டம் மதீனாவைக் கைப்பற்ற வந்த நிலை மாறி, இப்போது பல பகுதிகளிலிருந்தும் இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோர் அடங்கிய கூட்டம் ஆயுதங்களுடன் மதீனாவை முற்றுகையிட்டுக் கைப்பற்றக் கிளம்பி விட்டது.

அக்கூட்டத்தினரில் குறிப்பிட்டுச் சொல்வதாக இருந்தால் அலீ (ரலி) அவர்களை ஆட்சித் தலைவராக்க வேண்டும் என்று கூறிக் கொண்டு எகிப்திலிருந்து வந்த கூட்டமும், ஜுபைர் (ரலி) அவர்களை ஆட்சித் தலைவராக்க வேண்டும் என்ற முழக்கத்துடன் கூஃபாவிலிருந்து வந்த கூட்டமும், தல்ஹா (ரலி) அவர்களை ஆட்சித் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பஸராவிலிருந்து வந்த கூட்டமும் மதீனாவை முற்றுகையிட்டன. ஆனால் அம்மூவருமே இவர்களின் செயலை அங்கீகரிக்கவுமில்லை. ஆதரவளிக்கவுமில்லை.

மேலும் "ஜிஹாத்' என்று சொல்லிக் கொண்டு படைதிரட்டி வந்தவர்கள் யாரும் தத்தமது பகுதி மக்களின் பிரதிநிதிகளுமல்ல, ஒட்டுமொத்த மக்களின் அங்கீகாரத்துடன் வந்தவர்களுமல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு இஸ்லாமிய ஆட்சித் தலைவருக்கு எதிராக, புனித நகருக்குள் புகுந்து சண்டையிடுவதையும், ஹராமாக்கப்பட்ட ஒரு இடத்தில் ஆயுதமேந்தி வருவதையும், முஸ்லிம்களுக்குள் அதுவும் பெருமானாரின் தோழர்களுக்குள் மோதிக் கொள்ளும் போக்கையும் பெரும்பாலான நபித்தோழர்கள் விரும்பவில்லை. இந்தப் போக்கைக் கண்டிக்கவே செய்தார்கள். ஏராளமான நபித்தோழர்கள் தடுத்தார்கள். எதிர்பாராத விதமாக கிளர்ச்சிக்காரர்கள் ஆயுதங்களுடன் புகுந்ததாலும், நிராயுதபாணிகளாக அவர்கள் இருந்ததாலும், புனித மண்ணில் போரிடக் கூடாது என்ற காரணத்தாலும் அவர்கள் எதிர் நடவடிக்கை மேற்கொள்ள முடியாமல் போனது. இத்தகைய பலவீனம் எதிரிகளுக்குச் சாதகமாக இருந்ததால் இறுதியில் கிளர்ச்சியானர்கள் உஸ்மான் (ரலி)யின் இல்லத்தை முற்றுகையிட்டனர்.

உஸ்மான் (ரலி) அவர்கள் பதவியிலிருந்து விலக வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது. உஸ்மான் (ரலி) அவர்கள், "நீங்கள் சொன்னவுடன் பதவி விலக முடியாது. அதேசமயம் உங்களின் நியாயமான குற்றச்சாட்டுகளுக்கு நான் பதிலளிக்கத் தயாராக இருக்கிறேன்'' என்றார்கள். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை.

உஸ்மான் (ரலி) பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்த போது நபித்தோழர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் உஸ்மான் (ரலி) அவர்கள் இது பற்றிக் கேட்டார்கள். அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "ஒரு சிலர் ஒன்று கூடி பதவி விலகச் சொல்கிறார்கள் என்பதற்காக நீங்கள் பதவி விலகத் தேவையில்லை. அத்தகைய ஒரு நிலையை முஸ்லிம்களிடத்தில் நீங்கள் ஏற்படுத்தி விடாதீர்கள். அதற்கான வாசலைத் திறந்து விட்டு விடாதீர்கள்'' என்று கூறினார்கள். (தபகாத்து இப்னு சஅத்)

உஸ்மான் (ரலி) அவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்கள். இந்நிலையில் முனாஃபிக்குகள் (நயவஞ்சகர்கள்) இந்தச் சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு உஸ்மான் (ரலி) அவர்களைக் கொன்று விடுவார்களோ என்று சில சஹாபாக்கள் அஞ்சினார்கள்.  எனவே அவர்களைப் பாதுகாக்க உஸ்மான் (ரலி) அவர்கள் சிறை வைக்கப்பட்ட வீட்டைச் சுற்றி மதீனாவிலிருந்த சஹாபாக்களில் ஒரு கூட்டம் காவல் காத்து வந்தது. அவ்வாறு பாதுகாப்புக்காக நின்றவர்களில் அலீ (ரலி) அவர்களின் உத்தரவின் பேரில் அவர்களின் மகனார் ஹஸன் (ரலி) அவர்களும் ஒருவர். அந்தப் பாதுகாப்பு வளையத்தைச் சுற்றி உஸ்மான் (ரலி) அவர்களுக்கு எதிராக வந்த ஆயுதந்தாங்கிய கூட்டம் உஸ்மான் (ரலி) அவர்கள் வீட்டை விட்டு வெளியேறாத அளவுக்கு காவல் நிற்கிறது.

இந்நிலையிலும் உஸ்மான் (ரலி) அவர்கள் ஜும்ஆ குத்பா நிகழ்த்துவதற்கு மட்டும் அனுமதிக்கப்பட்டார்கள். அவ்வாறு அவர்கள் நிகழ்த்திய ஜும்ஆ குத்பாக்களில் ஒரு முறை மிம்பரிலிருந்து இழுத்துக் கீழே வீசப்பட்டு உஸ்மான் (ரலி) அவர்கள் தாக்கப்பட்டார்கள். 

உஸ்மான் (ரலி) அவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்ட போது, முற்றுகையிட்டிருந்த கூட்டத்தினரிடம், "ஒருசில குற்றங்களின் அடிப்படையில் ஒருவரைக் கொலை செய்ய மார்க்கம் அனுமதிக்கிறது. ஆனால் அந்த அளவுக்கு எந்தக் குற்றமும் செய்யாத என்னை ஏன் கொல்லத் துடிக்கிறார்கள்'' என்று உஸ்மான் (ரலி) அவர்கள் கேட்டார்கள். தான் செய்த நல்லறங்களையெல்லாம் ஒவ்வொன்றாக நினைவு கூர்ந்தார்கள்.

மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்த போது, "ஒரு குடிநீர் கிணறு உள்ளது. அதை யாராவது விலை கொடுத்து வாங்கி வக்ஃப் செய்யுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லையா? நபியின் பள்ளிவாசலை விஸ்தீரணம் செய்தேனே! என்று ஒவ்வொன்றாகச் சொல்லி தன்னை விடுவிக்கும்படி கோரினார்கள். ஆனாலும் அக்கூட்டம் உஸ்மான் (ரலி) அவர்கள் மீது இரக்கம் காட்டவில்லை.

இதனிடையே உஸ்மான் (ரலி) அவர்களை வீட்டுக்காவலின் போது சந்தித்த ஜைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள், நிலைமை மோசமடைவதைக் கண்டு அன்சாரிகள் அனைவரும் தங்களுக்காக அணிதிரளத் தயாராக உள்ளதாக அறிவித்தார். அபூஹுரைரா (ரலி), அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) ஆகியோரும் இதையே கூறினார்கள். ஆனாலும் உஸ்மான் (ரலி) அவர்கள் நான் அவர்களுடன் இப்புனித மண்ணில் போரிடத் தயாராக இல்லை என்று கூறிவிட்டார்கள்.

ஆனால் உஸ்மான் (ரலி) அவர்கள் தன்னைக் காப்பாற்றிக் கொள்வது என்பது ஒருபுறமிருக்க, ஒரு இஸ்லாமிய ஆட்சியின் தலைவர் என்ற முறையில் ஆட்சிக்கெதிராக அணிதிரண்டு வந்தவர்களை எதிர்த்து ஆட்சியாளர்களுக்கு உள்ள உரிமையை நிலைநாட்டியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. ஒரு கட்டத்தில் தனக்கு பாதுகாப்பாக வீட்டைச் சுற்றி இருந்த சஹபாக்களைக் கூட நீங்கள் எனக்காக கஷ்டப்பட வேண்டாம், போய் விடுங்கள் என்று கூறினார்கள்.

அச்சமயத்தில் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்தார்கள். உச்சக்கட்டமாக உம்முல் முஃமினீன் என்றழைக்கப்படும் பெருமானார் (ரலி) அவர்களின் துணைவியார் உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் (முஆவியா (ரலி)யின் சகோதரி) கூட அவமானப்படுத்தப்பட்டார்கள். "இழிவான இச்சூறாவளியில் சிக்கி நானும் என்னை அவமானப்படுத்திக் கொள்ளவா?'' என்று கேட்டபடி அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மக்காவுக்குச் சென்று விட்டார்கள்.

ஏறத்தாழ ஒரு மாதத்திற்கும் மேலாக உஸ்மான் (ரலி) வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்கள். இறுதியாக ஒருநாள் வீட்டிற்குள் வைத்தே உஸ்மான் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 35ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்கள். (இன்னாலில்லாஹ் வஇன்னா இலைஹி ராஜிஊன்). அவர்களின் வீடும் சூறையாடப்பட்டது. சொத்துக்களும் அபகரிக்கப் பட்டன.

உஸ்மான் (ரலி) அவர்களைக் கொன்றவர்கள் முனாஃபிக்குகள் என்று சொல்லப்பட்டாலும் அச்செயலில் ஈடுபட்டவர்களில் முஹம்மது பின் அபூபக்கர் (ரலி) அவர்களின் பெயரும் இடம் பெற்றுள்ளது. இதிலிருந்து முஸ்லிம்களின் பங்கும் உள்ளது என்பது தெளிவாகிறது.

அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களின் மகனார் முஹம்மது பின் அபூபக்கர் (ரலி)  உஸ்மான் (ரலி) அவர்களின் தாடியைப் பிடித்து இழுத்த போது, உஸ்மான் (ரலி) அவர்கள் மிகவும் மனமுடைந்து போய் அவரிடம், "முஹம்மதே! உனது தந்தை அபூபக்கர் கூட எனது தாடியில் கை வைத்தது கிடையாதே'' என்று அழுதிருக்கிறார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக்கு எதிராகத் திரண்டவர்கள் - அவர்களைக் கொல்லுமளவுக்குச் சென்றவர்கள் அத்தனை பேரும் இறை நிராகரிப்பாளர் (காஃபிர்)கள் அல்ல. ஆனாலும் மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்களிடமும் ஏற்பட்ட குறையின் காரணமாகவே அவர்கள் தவறான முடிவுக்குச் சென்றார்கள்.

உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சியில் சிறு சிறு தவறுகள் ஏற்பட்டாலும் அவை திருத்திக் கொள்ளக் கூடியவை தான். உஸ்மான் (ரலி) அவர்கள் மீது சுமத்தப்பட்ட இத்தகைய சாதாரண குற்றச்சாட்டுகளைத் தவிர அவர்களது ஆட்சி முறை போற்றத்தக்க வகையில் தான் இருந்தது என்பதை யாரும் மறுக்கவியலாது. அவர்கள் மீது சுமத்தப்பட்டக் குற்றச்சாட்டுக்கள் பரிகாரம் காணக் கூடியவையாகத் தான் இருந்தனவே தவிர பழிதீர்க்கக் கூடியதாக இல்லை.

இன்ஷா அல்லாஹ் தொடரும்........

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...