அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


ஒருவருக்காக மற்றவர் நோன்பு நோற்றல்


இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளில் "ஒருவரது சுமையை மற்றவர் சுமக்க மாட்டார்''  என்பதும் முக்கியமான கொள்கையாகும். 

ஒவ்வொருவரும் தத்தமது செய்கைகளுக்கு பொறுப்பாளிகள் என்றாலும் இதிலிருந்து சில வணக்கங்கள் மட்டும் விதி விலக்குப் பெறுகின்றன. நோன்பும் அவ்வாறு விதிவிலக்குப் பெற்ற வணக்கங்களில் ஒன்றாகும்.  
நோன்பு களாவாகவுள்ள நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவருக்காக அவரது பொறுப்பாளர் நோன்பு நோற்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்:  ஆயிஷா (ரலி) நூல்: புகாரி (1952)

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். "அல்லாஹ்வின் தூதரே! என் தாய் மீது ஒரு மாத நோன்பு (கடமையாக ) உள்ள நிலையில் மரணித்து விட்டார். அவரது சார்பில் நான் அதை நிறைவேற்றலாமா?'' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "ஆம்! நிறைவேற்றலாம். அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்பட அதிகம் தகுதியானது'' என்று கூறினார்கள். 
அறிவிப்பவர்:  இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரீ (1953) 

புகாரியின் மற்றொரு ஹதீஸில் ஒரு பெண் வந்து இவ்வாறு கேட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

நோன்பு கடமையாகி களாவாகவுள்ள நிலையில் யாரேனும் மரணித்து விட்டால் அவரது வாரிசுகள் அவருக்காக நோன்பு நோற்கலாம் என்று கூறுவதை விட நோற்பது அவசியம் என்று தான் கூற வேண்டும். ஏனெனில் கடனுடன் நோன்பை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒப்பிட்டுள்ளார்கள். 

மேலும் கடனை விட நிறைவேற்றுவதற்கு அதிகத் தகுதியுடையது எனவும் கூறுகிறார்கள். 

இறந்தவர்களுக்காக மார்க்கத்தில் இருக்கும் கத்தம் பாத்திஹா ஓதுவதை விடுத்து இறந்தவர் மீது நோன்பு களாவாக இருந்தால் அதை நிறைவேற்றலாம். 
இறந்தவரின் சொத்துக்களுக்காக மட்டும் வாரிசாக ஆசைப்படுவோர் மார்க்கம் அவர்கள் மீது சுமத்திய இந்தக் கடமையைச் செய்வதில்லை. நாமறிந்த வரை பெற்றோர்களுக்காக ஹஜ் செய்பவர்களைக் கூட காண்கிறோம். ஆனால் 
நோன்பு நோற்பவர்களைக் காண முடியவில்லை. 

பெற்றோர் மீது கடமையான நோன்புகள் களாவாக இருந்தால் தான் வாரிசுகள் நோற்க வேண்டும். உபரியான சுன்னத்தான நோன்புகளுக்கு ஆதாரம் இல்லை. ஏனெனில் அது குறித்து இறந்தவர்களை அல்லாஹ் விசாரிக்க மாட்டான். மேலும் இந்த ஹதீஸில் கடமையான நோன்பு பற்றியே கூறப்பட்டுள்ளது.

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...