கையேந்திகளின் மாதமா ரமழான்?


அதிகாலையில் எழுந்து இறைவனை வணங்கி உணவு உண்டு சுபஹ் காலையில் இருந்து மாலை வரை இறைவனுக்காக உண்ணாமலும் பருகாமலும் இருந்து இறையச்சத்தை அதிகப் படுத்த வேண்டிய மாதம் இந்த ரமழான் மாதம்.
முஸ்லீம்கள் என்று சொல்லக் கூடிய சிலர் இந்த மாதத்தை கையேந்திகளின் மாதமாக மாற்றியிருப்பதுதான் மிகவும் கவலைக்குறிய விஷயமாகும்.


மகளுக்கு திருமணம் வரதற்சனை (சீதனம்)கொடுக்க வேண்டும்
மகனுக்கு நோய்
தந்தைக்கு முடியவில்லை
தாய் படுத்த படுக்கையில் உள்ளார்
சகோதரனுக்கு பேச முடியாது
சகோதரிக்கு நடக்க முடியாது
இப்படி பல வாக்கியங்களை சொல்லிக் கொண்டு பிச்சைக்காரர்கள் வீடுகள் கடைகள் பள்ளிகள் மத்ரஸாக்கள் பாதையோரங்கள் சந்தைகள் என்று மக்கள் கூடுமிடங்களிலெல்லாம் இவர்கள் கையேந்துகிறார்கள்.
பிச்சையே தொழிலாக…….
சிலர் கஷ்டத்தினால் மேற்சொன்ன சில காரணங்களின் மூலம் தங்கள் கவுரவத்தைக் கூட இழந்து மக்களிடம் கையேந்தி தங்கள் தேவையை நிவர்த்தி செய்து கொள்கிறார்கள்.
ஆனால் பெரும்பாலும் பிச்சை எடுக்கக் கூடிய பலர் இதையே தங்கள் தொழிலாகவே செய்கிறார்கள்.
ஆண்களாக இருந்தால் கிழிந்த ஆடையும் குழிக்காத தோற்றமும் வாடிய முகமுமாக காட்சி தருவார்.
பெண்ணாக இருந்தால் கிழிசல் சாரியும் குழிக்காத தோற்றமும் தலைவிரி கோலமும் கையில் குழந்தையுமாக காட்சி தருவார்.
இவர்களில் அதிகமானவர்கள் முஸ்லீம்கள் தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.அதாவது எந்தச் சமுதாயத்திலும் இல்லாத அளவிற்கு அதிலும் ரஹ்மத் நிறைந்த ரமழான் மாதத்தையே கொச்சைப் படுத்தும் அளவுக்கு இந்த கையேந்தும் பழக்கம் பெற்ற மக்கள் நடந்து கொள்வதும் மிகவும் வருந்தத் தக்க செயல் படாகும்.
இதில் அதிகமானவர்கள் தங்களை நோன்பாளி போல் காட்டிக் கொண்டாலும் உண்மையில் இவர்கள் நோன்பாளிகள் இல்லை.நோன்பு பிடித்திருப்பதை போல ஜாடை செய்பவர்கள்.
ஊரையே பங்கு போடும் அதிசயக் கொடுமை.
பிச்சை எடுப்பதற்காக ரமழான் மாதத்தில் படையெடுக்கும் இந்தக் கூட்டம் ஒரு பகுதியில் இருந்து ஒரு குழுவாக கிழம்பி இன்னொரு பகுதிக்கு வந்துவிடுவார்கள்.
கிழக்கில் இருப்பவர் தெற்கிற்கும்
தெற்கில் இருப்பவர் வடக்கிற்கும்
வடக்கில் இருப்பவர் மேற்கிற்கும்
மேற்கில் இருப்பவர் கிழக்கிற்கும்
இப்படி ஒரு திசையில் இருப்பவர் இன்னோர் திசையில் தான் பிச்சை எடுப்பார்கள்.
தாம் செய்யும் தொழிலை தனக்குத் தெரிந்தவர்களுக்கு முன் செய்தால் இது தொழில் என்று புரிந்து விடுவார்கள் என்பதற்காக இவர்கள் கையாலும் ஓர் யுக்தி.
இவர்களில் கூட்டமாக வருபவர்கள் ஊரை சரி பகுதியாகப் பிரித்துக் கொள்வார்கள்.ஊரின் வடக்கு கிழக்கு தெற்கு மேற்கு என்று உள்ள பகுதிகளைப் பிரித்து நான் இந்தப் பக்கம் நீ அந்தப் பக்கம் என்று பிரித்து பிச்சை எடுப்பார்கள்.
மிரட்டும் பிச்சைக்காரர்களும் மிரலும் பணக்காரர்களும்.
கையேந்தி பிச்சை எடுப்பதற்காக செல்லும் இவர்கள் சில வீடுகளுக்கு பிச்சை எடுக்கச் செல்லும் போது அங்குள்ளவர்கள் எதையும் கொடுக்காமல் திருப்பி அனுப்பிவிட்டால்; திருப்பி அனுப்புபவர்கள் பெண்களாக இருந்து அங்கு ஆண்கள் யாரும் இல்லா விட்டால் அவர்களை மிரட்டி பணம் பரிப்பவர்களும் அதிகம் பேர் இருக்கிறார்கள்.
தனது சொந்தப் பணத்தை மிரட்டி வாங்கும் பிச்சைக் காரனுக்குப் பயந்து மிரண்டு போகும் சொத்துக் காரர்கள் பலர் உள்ளார்கள்.
இந்தச் செயற்பாடுகளுக்கு அன்றாட செய்தித்தாள்களே போதிய ஆதாரமாகும்.
பணத்திற்கு விலை போகும் பச்சிளம் குழந்தைகள்.
பல நாடுகளில் பிச்சைக்காரர்களுக்கு சங்கங்களும் இயக்கங்களும் இருக்கின்றன.இவை தங்கள் பிழைப்பிற்காக சில சுயநலவாத சிந்தனையும் பணத்தின் மோகமும் கொண்ட தாய்மார்களிடம் அவர்களின் குழந்தையை வாடகைக்குப் பேசி எடுத்துக் கொள்கிறார்கள்.(சில வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் குழந்தைகள் அவர்களுக்குத் தெரியாமலேயே வாடகைக்கு விடப்படுகிறார்கள்)
இப்படி வாடகைக்கு எடுக்கப் படும் குழந்தைகளை வைத்து தாம் தான் அந்த குறிப்பிட்ட குழந்தையின் தாய் போல காட்டி மக்களிடம் பிச்சை கேட்பார்கள்.குழந்தை மேல் பரிதாபப்படும் மக்கள் அதிகமாக பிச்சை போடுவார்கள்.
இப்படி வாடகைக்கு வாங்கப் படும் குழந்தைகளில் அதிகமானவர்கள் நேரத்திற்கு உணவு கொடுக்கப் படாமல் பல நோய்களுக்கும் ஆளாக இருதியில் மரணத்தை தழுவும் ஒர் அபாயகரமான சூழல் உருவாகிவிடுகிறது.இதுதான் அவர்களின் தொழில் ரகசியம்.
சிறுவர் நல அமைப்புகளும் சீர்திருத்தப்பட வேண்டிய கொள்கைகளும்.
சிறுவர்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப் பட்ட அமைப்புகள் என்று இன்று நம்மத்தியில் உலா வரும் சில அமைப்புகள் சிறுவர்களை இப்படிப் பட்ட கொடுமையில் இருந்து பாதுகாப்பதாக கூறிக் கொண்டு பல வகையான சட்டங்களையும் உருவாக்கியுள்ளார்கள்.
ஆனால் இந்த சட்டங்களால் சிறுவர்களுக்கோ அவர்களை பெற்றவர்களுக்கோ எந்த நன்மையும் பெரிதாக ஏற்படுவதில்லை.
பிச்சை எடுக்க வாடகைக்கு குழந்தைகளை பயண்படுத்துபவர்களையோ அல்லது குழந்தைகளை வாடகைக்கு விடுபவர்களையோ இவர்களின் இந்தச் சட்டங்கள் மூலம் எதையும் செய்ய முடியாது என்பதே உண்மை.
ஐ.நா வின் சிறுவர் நல மையம் கூட இந்த விஷயத்தில் திருப்திகரமாக இயங்குவதில்லை என்பதே நாடறிந்த உண்மை.
கஷ்டத்திற்காக ஒருசிலர் இந்த பிச்சை எடுத்தாலும் அதிகமானவர்கள் தங்கள் தொழிலாகத் தான் இதனை செய்கிறார்கள் என்பது உள்ளங் கையில் நெல்லிக் கண்p போல் தெளிவாக இருக்கிறது.
சுயமரியாதையே தனி மனித கவுரவத்தின் முதற்படி.
எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் அவன் எச்சந்தர்பத்திலும் தன்னுடைய சுய கவுரவத்தை இழந்துவிடக் கூடாது என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு.
எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் அவர் தனது சுய கவுரவத்தை இழந்து விடக்கூடாது.
ஆனால் பிச்சை எடுப்பதை தொழிலாக செய்யும் சிலர் அவர்களுடைய மானம் மரியாதைகளைப் பற்றி சிறிதும் கவலைப் படாமல் அடுத்தவர்களிடம் கையேந்துகிறார்கள்.இஸ்லாம் இவர்களுடைய இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறது.
இதே நேரம் அடுத்தவர்களுக்கு தர்மம் செய்பவர்களை தாராளமாக வழங்கும்படியும் சொல்கிறது.
நபி(ஸல்)அவர்கள் என்னிடம் நீ (தர்மம் செய்யாமல்) முடிந்து வைத்துக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் (இறைவனின் கொடை) உனக்கு (வழங்கப்படாமல்) முடிந்து வைத்துக் கொள்ளப்படும்! எனக் கூறினார்கள். அப்தாவின் அறிவிப்பில்இ நீ (இவ்வளவுதான் என்று) வரையறுத்து (தர்மம்) செய்யாதே! அல்லாஹ் (உன் மீது பொழியும் அருளை) வரையறுத்து விடுவான் எனக் கூறியதாக அஸ்மா(ரலி) அறிவித்தார்கள் . (நூல் புகாரி 1433)
நீ தர்மம் செய்யாமல் முடிந்து வைத்துக் கொள்ளாதே அவ்வாரு செய்தால் இறைவனின் கொடை உனக்கு வழங்கப் படாமல் முடிந்து வைத்துக் கொள்ளப் படும்.என்ற நபியவர்களின் வார்த்தை அடுத்தவர்களுக்கு கொடுக்கும் விஷயத்தில் நாம் கஞ்சத்தனம் படக்கூடாது என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது.
அதே போல் அடுத்தவர்களுக்கு கொடுக்காமல் முடிந்து வைத்தால் ஏற்படும் பாவத்தையும் நபியவர்கள் எடுத்துரைத்தார்கள்.
கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது மார்பிலிருந்து கழுத்துவரை இரும்பாலான அங்கிகளணிந்த இரண்டு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர் தர்மம் செய்யும் பொழுதெல்லாம் அவரின் அங்கி விரிந்து விரல்களை மறைத்துக் கால்களை மூடித் தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக்கூடாது என்று எண்ணும்போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும். அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது.  என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் புகாரி1444)
ஆக கொடுப்பவர்கள் தாங்கள் அடுத்தவர்களுக்கு கொடுக்கும் விஷயத்தில் ஒருபோதும் கஞ்சத்தனம் காட்டக் கூடாது.
அதே போல் அதனை வாங்குபவர்களும் அதற்கு தகுதியுள்ளவர்களாக இருக்க வேண்டும் உழைப்பிற்காக கையேந்துபவர்களாக இருக்கக் கூடாது.
இறைவன் ஸக்காத் பெற தகுதியுள்ள கூட்டத்தாரைப் பற்றி தனது திருமறையில் குறிப்பிடுகிறான்.
யாசிப்போருக்கும் ஏழைகளுக்கும் அதை வசூலிப்பவர்களுக்கும் உள்ளங்கள் ஈர்க்கப்படவேண்டியவர்களுக்கும் அடிமை(களை விடுதலை செய்வதற்)கும் கடன் பட்டோருக்கும் அல்லாஹ்வின் பாதையிலும் நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும்.இது அல்லாஹ்வின் கடமை அல்லாஹ் அறிந்தவன் ஞானமிக்கவன்.(அல்குர்ஆன் 9:60)
மேற்கண்ட வசனத்தில் யாசிப்போரும் ஸக்காத் பெற தகுதியுள்ளவர்கள் என இறைவன் குறிப்பிடுகிறான்.
யாசிப்போர் என்று மொழியாக்கம் செய்யப் பட்ட இடத்தில் இறைவன் பயன் படுத்தியுள்ள வார்த்தை புகரா என்பதாகும் புகரா என்றால் எந்த வசதியும் இல்லாத ஆயினும் பிரரிடம் வாய் திறந்து கேட்ட வெட்கப் படும் ஏழைகள் என்பது பொருளாகும்.
இதே நேரம் மிஸ்கீன்கள் என்றால் வெட்கத்தை விட்டு தனது தேவைக்காக மற்றவர்களிடம் கேட்கும் ஏழைகள் என்பது பொருளாகும்.
இந்த இரண்டு கூட்டத்திலும் உள்ளவர்கள் யார் என்பதை நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.
அதாவது இன்றைய ரமழான் நாட்களில் நம்மிடத்தில் கையேந்தி வருபவர்கள் மற்ற நாட்களில் குறைவாகத்தான் இருக்கிறார்கள்.இன்றைய நாட்களில் தான் அதிகமாக இருக்கிறார்கள்.
இவர்கள் மற்றவர்களிடம் கையேந்துவது தங்களுக்கு லாபகரமாக இருக்கிறது என்பதற்காகத்தான் இப்படி வருகிறார்களே தவிர உண்மையில் இவர்கள் உடல் வலிமை மிக்கவர்களாகவும் இருக்கிறார்கள்.
இப்படிப் பட்டவர்களுக்கு உதவுவதாக நினைத்துக் கொண்டு நாம் நம்மையே ஏமாற்றிவிடக் கூடாது.
அதே போல் இவர்களால் வாழ்க்கைச் செலவுக்கு பணமில்லாமல் கஷ்டப் படும் ஏழைகளும் பாதிக்கப் படுகிறார்கள்.
இப்படிப் பட்டவர்களை நாம் அனைவரும் அடையாளம் கண்டு கொள்வோமாக!

Post a Comment

0 Comments