தவ்ஹீத்வாதிகளை குறிவைத்து ஏமாற்றும் பலே கில்லாடி சிக்குவானா?


இந்தச் செய்திக்குள் போகும்முன், பின் வரும் இந்த தொலைபேசி உரையாடலைக் கேளுங்கள்.

ஹலோ, அப்துல்காதர் பாயா?

 ஆமாங்க, நீங்க யாரு?
அஸ்ஸலாமு அலைக்கும் பாய்.. நான்தான் ஷாஹுல்ஹமீத் பேசரேன், என்னைத் தெரியுதா?
வ அலைக்கும்ஸலாம், சரியா ஞாபகம் இல்லையே யாருன்னு சொல்லுங்களேன்?
நாம பல சமயம் சந்தித்து இருக்கிறோம். நீங்கள் மறந்திருக்கலாம். நான் பழைய தவ்ஹீத்வாதி. எனக்கு தவ்ஹீத் ஜமாஅத்ல எல்லா முக்கிய தலைவர்களையும் அன்றைய காலத்திலேயே நல்லப்பழக்கம். வெளிநாடு வேலை என்று வந்த பிறகு அந்த தொடர்பெல்லாம் முன்புபோல் இல்லை; குறைந்துவிட்டது. அதைவிடுங்க, நீங்க எப்படி இருக்கீங்க, உங்க குடும்பத்தில் உள்ளவர்கள் எப்படி இருக்கிறாங்க, உங்களின் ஜமாஅத் பணிகளெல்லாம் எப்படி செல்கிறது. நான் தற்போது தொடர்பு கொண்டதற்கு காரணம் ஒரு நல்லவிஷயமாகத்தான்.
என்ன நல்ல விஷயம், சொல்லுங்க பாய்..
நான் தற்போது வெளிநாடுகளுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பும் ஏஜென்சியை நடத்திக் கொண்டுஇருக்கிறேன். என்னுடைய ஏஜென்சி பற்றி அறிந்து வேலைக்காக பலரும் என்னிடம் வேலை கேட்டு வந்தாலும், நாம் நம் தவ்ஹீத் சகோதரர்களை அனுப்புவதற்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். காரணம், நான் அனுப்பும் வேலை முழுவதும் குறைந்த நேர வேலை, அதிக சம்பளம் உள்ளதாக இருப்பதால், நம் தவ்ஹீத் மக்கள் அதன் மூலம் பயன் பெறட்டும் என்கிற ஒரு நல்ல எண்ணத்தில் நம் மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். தற்போது சவூதிக்கு மின்சார ரீடிங் எடுக்கும் பணிக்கு ஒரு 10 பேர் தேவை. நீங்களும் இங்கு சரியான வேலை இல்லாமல் போதிய வருமானம் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுவதாக போன வாரம் அபுதாபியில் சலீம் காக்காவை பார்த்தபோது தெரிவித்தார், மனதிற்கு ரொம்ப கவலையாக இருந்தது, அதான் உங்க நம்பரை கஷ்டப்பட்டு எடுத்து இந்த வேலை வாய்ப்பு தகவலை உங்களுக்கு சொல்லுகிறேன். பத்து பேர் தேவைப்படுவதால் உங்களுக்கு தெரிந்த சகோதரர்கள் இருந்தாலும் தெரிவியுங்கள், ஆனால் ஒரு நிபந்தனை, அவர் நம்ம தவ்ஹீத் சகோதரராக இருக்க வேண்டும். உடனடி விசா என்பதால் இரண்டு நாட்களுக்குள் பதில் சொல்லுங்கள்.
அதற்கு எவ்வளவு தேவைப்படும்?
ஒரு 50 ஆயிரம் தோது பண்ணினால் ஈசியா அனுப்பி வைத்துவிடலாம். அதிலும் ஒரு நிபந்தனை வட்டிக்குப் பணம் வாங்கித்தான் தர வேண்டும் என்று இருந்தால் அந்தப்பணம் எனக்குத் தேவையில்லை. அப்படிப்பட்டவர்கள் தங்களால் இயன்றதைத் தரட்டும். பிறகு அவர் சம்பளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.
அப்படியா, இப்போது 50 ஆயிரம் தோது பண்ணும் நிலையில் இல்லையே. தேவைப்பட்டால் நான் பிறகு தொடர்பு கொள்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும்.
மேற்கண்டவாறு அமைந்த தொலைபேசிஉரையாடலில் அப்துல்காதரிடம் ஷாஹுல் என்ற பெயரில் உரையாடியவன் ஒரு பக்கா ஏமாற்றுப் பேர்வழியாவான். அவன் பேச்சைக் கேட்கும்போது நமக்கு எந்த ஷாஹுல் என்றும் தோன்றாது, நம்மைப் பற்றி எந்த சலீம் காக்கா இவனிடம் அபுதாபியில் தெரிவித்திருப்பார் என்றும் தோன்றாது. நம்முடைய கஷ்ட நிலையை அறிந்து தொலைபேசியில் இவன் தொடர்பு கொள்ளும்போது, நாம் பட்ட கஷ்டத்திற்கெல்லாம் நல்ல விடிவு காலம் வந்துவிட்டது என்று இவன் விரித்த வலையில் விழுந்தவர்கள் ஏராளம்.
அப்துல்காதரைப்போல் எச்சரிக்கையாக நீங்கள் இணைப்பைத் துண்டித்து இருந்தால், தப்பித்தீர்கள்.ஆனால் நம் சமுதாயத்தில் எத்தனை பேர் இவ்வாறு இருக்கப்போகிறார்கள்? இந்த பலவீனத்தைப் பயன்படுத்தித்தான் பலபேரிடம் வேலைக்காகவும், விசாவுக்காகவும் தனது வங்கிக் கணக்கில் பணம் போடச் சொல்லி பணம் போட்டபின் வேறு செல்பேசி எண், வேறு பெயர் மற்றும் வேறு (போலி) முகவரி என்று தனது ஏமாற்று லீலைகளைத் தொடர்ந்துகொண்டிருக்கிறான் இவன்.
படத்தில் காணப்படும் இவனுக்கு ஊருக்கு ஒரு பெயரும், நேரத்திற்கு ஒரு செல்பேசி நம்பரும், நாளுக்கு ஒரு முகவரியும் உண்டு. அதுமட்டுமல்ல பல்வேறு ஊர்களில் பல்வேறு பெயர்களில் வங்கிக்கணக்குகளும் உண்டு. இவனது நோக்கமெல்லாம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் முன்னாள் நிர்வாகிளைக் குறிவைப்பது, அவர்களிடம் சில தொடர்பு எண்களைப் பெற்று இன்ன நபர்தான் உங்கள் நம்பரைக் கொடுத்தார் என்று அழகாய் தொடர்பை ஏற்படுத்தி, வெளிநாட்டு வேலை என்று ஆசைகாட்டி பணம் பறிப்பதுதான். தொலைபேசியில் சிக்குவோரிடம் ஏகத்துவம் மற்றும் இஸ்லாமியக் கொள்கைகளை அக்குவேறு ஆணிவேறாக அலசி அவர்களை தன் வலைக்குள் விழவைப்பதில் இவன் கைதேர்ந்தவன்.
பணம் புரட்டுவதற்காக வட்டி என்ற கொடிய நெருப்பிலெல்லாம் வீழ்ந்து விடாதீர்கள் என்று இவன் கூறும்போது மெய்சிலிர்துப் போனவர்கள் ஏராளம். அந்த அளவுக்கு தீவிர ஏகத்துவவாதியாகக் காட்டிக்கொண்டு, அதைவிடத் தீவிர ஏமாற்றுப் பேர்வழியாக வலம் வந்துகொண்டிருக்கிறான் இந்த மோசடிப் பேர்வழி.
இவனது மோசடிப் பேச்சை நம்பி தஞ்சை, கோவை, விருநகர் ஆகிய மாவட்டங்களில் இவனுடைய வங்கிக் கணக்கிற்கு பணம் செலுத்தியவர்கள் இவனைத் தேடிக் கொண்டிருக் கிறார்கள். இவனது உண்மையான பெயர் ஜமால் என்பதும், இவன் தற்போது தஞ்சை மாவட்டம் பாபநாசம் என்ற ஊரில் இருப்பதாகவும் நமது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இவனது முகவரிக்குச் சென்று நாம் பார்த்தபோது இவன் வீட்டில்இல்லை. இவனது குடும்பத்தினரிடம் விசாரித்தபோது அவன் வெளியூர் சென்றிருக்கிறான் என்ற ஒற்றைத்தகவலை மட்டுமே நாம் பெற முடிந்தது.
சென்னை திருவல்லிக்கேணி, எண் 53,குப்புமுத்து தெரு என்ற போலி முகவரி கொடுத்து சென்னை அண்ணாசாலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சாகுல்ஹமீது என்ற பெயரில் ஆரம்பித்த கணக்கில் மட்டும் பலபேர் பணம் கட்டி ஏமார்ந்து இருப்பதை நாம் கண்டறிந்தோம். இதுபோல் பல்வேறு வங்கிக்கணக்குகள் வைத்து பல்வேறு பெயர்களில் ஏமாற்றி சுற்றித் திரியும் இந்த மோசடிப் பேர்வழி பற்றி தகவல் தெரிந்தால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத்தலைமைக்கு தெரிவிக்கும்படியும், அந்தந்த மாவட்ட காவல்துறை உயர் அதிகாரியிடம் புகார் தரும்படியும் வாசகர்களை கேட்டுக் கொள்கிறோம். இதுபோல் வெளிநாட்டு வேலை என்று ஆசைவார்த்தை கூறி ஏமாற்றும் இவனிடமும் இவன் போன்ற மற்றவர்களிடமும் எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுருத்துகிறோம்.
இவனை நேரடியாகப் பார்ப்பவர்கள் பிடித்துவைத்துக் கொண்டு தலைமைக்கு தகவல் கொடுத்தால் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க தலைமை தயாராக உள்ளது.
பழைய காலண்டரும் பகற் கொள்ளைக்கு உதவும்.
சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பார்கள். ஜமாலைப் பொறுத்தவரை இவனுக்குத் துருப்புச் சீட்டாக இருப்பது பழைய காலண்டர்கள்தான். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வருடா வருடம் மாதக் காலண்டர்களை வெளியிட்டு வருவது தெரிந்ததே. இப்படியான காலண்டர்களில் இருக்கும் முன்னாள் நிர்வாகிகளை குறிவைத்துத்தான் இவன் தனது மோசடி வலையை வீசி வருகிறான். இதுபோன்ற இந்த வலைவீச்சில் இவனது தொலைபேசியில் உரையாடிய நம் சகோதரர்கள் வேறு யாரும் இருப்பீர்களானால் நமது மாநிலத் தலைமையத் தொடர்பு கொண்டு தகவல் தந்தால் அது இந்த அயோக்கியனைப் பிடிப்பதற்கு உதவியாக இருக்கும்.பாதிக்கப் பட்டவர்களிடமிருந்து நம் தலைமைக்கு புகார் வந்தப்பிறகு காவல்துறையின் மூலமாக இவன்மீது கடும் நடவடிக்கை எடுக்கும் பணிகளும் நடந்துகொண்டு இருக்கிறது

Post a Comment

0 Comments