அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


பெண் கல்வியும், பெற்றோரின் நிலையும்.எனது பிள்ளை டாக்டராக வரவேண்டும். என் பிள்ளை தற்போது பொறியியல் துறையில் படித்துக் கொண்டிருக்கின்றான். எனது தம்பி இன்னும் ஓரிரு மாதத்தில் ஆசிரியராக பட்டம் பெற்றுவிடுவான். நான் பட்ட கஷ்டத்திற்கு எனது மகளை எப்படியாவது ஒரு பட்டதாரியாக ஆக்கிவிட வேண்டும். இது போன்ற வார்த்தைகளை பெற்றோர்கள் அடிக்கடி சொல்வதை நாம் தினமும் கேட்டு வருகின்றோம்.
காரணம் தங்கள் பிள்ளைகளை சமுதாயத்தில் படித்தவர்களாக, பட்டம் பெற்றவர்களாக மாற்ற வேண்டும் என்ற அவாதான் இவர்களை இப்படி பேசவும், அதற்காக பாடுபடவும் தூண்டுகின்றது. இதே நேரம் கல்விக்காக எதையும் செய்யத் துணியும் பெற்றோர் தனது பிள்ளை ஒழுக்கத்துடன் கூடிய சிறப்பான கல்வியைத் தான் பெற்றுக் கொள்கின்றானா என்பதை கவணிக்க தவறிவிடுவதுதான் கவலைக்குறிய விஷயமாகும்.

பாடசாலைத் தேர்வே முதன்மைத் தேர்வு.
நாம் வாழும் இந்த 21ம் நூற்றாண்டில் பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் தமிழில் பேசுகின்றார்களோ இல்லையோ ஆங்கிலத்தில் கட்டாயம் பேசியாக வேண்டும் என்றும் ஆங்கிலம் பேசாத கல்வி ஆரோக்கியமற்றது போன்றும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் காரணமாகத் தான் பலரும் சர்வதேச பாடசாலைகளை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதே போல் இன்னும் சிலருக்கோ தலை நகரத்தில் பேர் போன பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகள் படிக்க வேண்டும் என்ற பேரவா இருக்கிறது. இதற்காக வேண்டியே தங்கள் உழைப்பை முழுமையாக தாரைவார்ப்பவர்களும் நம்மவர்கள் தாம்.
சர்வதேச பாடசாலை, பேர் போன பாடசாலை என்ற போர்வையில் மார்க்கத்திற்கே வேட்டு வைக்கும், இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்க்கும் கல்விக் கூடங்களில் கூட தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதில் பெற்றோர் பின்நிற்பதில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப் போலஎல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கி விடுகின்றனர்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி 1358, 1359, 1385, முஸ்லிம் 4803
நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் இந்தப் பெரும் பாவத்தை எந்த ஒரு சலனமும் இல்லாமல் நமது இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் செய்கின்றனர்.
தும்மல் வந்தால்கூட “இயேசுவே” என்று குழந்தைகள் சொல்கின்ற அளவுக்கு, உலகக் கல்வி கற்றுக் கொடுப்பதற்காக பெற்றோர்களே தங்கள் குழந்தைகளைக் கிறித்தவ மதத்திற்குப் பாதை மாற்றம் செய்வதற்குத் துணை நிற்கின்றனர்.
உலகக் கல்வியில் தங்கள் பிள்ளை உயரத்திற்கு வரவேண்டும் என்பதற்காக தூய இஸ்லாத்தின் அடிப்படை மறந்து கிருத்தவ, பௌத்த நெறிமுறைகளின் படி வார்க்கப்படும் பாடசாலைகளுக்கு தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதின் மூலம் பெற்றோரே பிள்ளைகளின் மறுமை வாழ்வை வீனாக்கும் கொடுமை நாள் தோறும் நடைபெற்று வருகின்றது.
கல்வி முக்கியமா? கற்பு முக்கியமா?
தங்கள் பெண் பிள்ளைகள் உயர் கல்வி கற்க வேண்டும், பல்கலைக் கழகம் செல்ல வேண்டும், BA, MA, MBBS என்று என் பிள்ளை கல்வித் துறையில் உயர் நிலையை அடைய வேண்டும் என்ற ஆசையின் காரணமாக தங்கள் பிள்ளைகளின் கற்பு நிலை என்னாகும் என்பதைக்கூட பெற்றோர்கள் சிந்திக்க மறந்து விடுகின்றார்கள். (உயர் கல்வி வேண்டாம் அல்லது கூடாது என்று நாம் கூறவில்லை. ஆனால் அதனால் நடக்கும் விபரீதங்களைத் தான் பட்டியலிடுகின்றோம்).
பிள்ளையின் உயர் கல்வி வேண்டுமா? உயரிய கற்பு முக்கியமா? என்று பெற்றோர்களிடம் கேட்டால் கண்டிப்பாக கற்புதான் முக்கியம் என்று பதில் தருவார்கள். ஆனால் கல்வி விஷயத்தில் மாத்திரம் அதை புரிந்துகொள்ள மறுக்கின்றார்கள்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண்களின் கல்லூரி வாழ்க்கை அபாயகரமானதாகவும் ஆபத்தானதாகவுமே பார்க்கப்படுகின்றது. ஆனால் இன்றைய காலத்தில் அது மிக மிக அபாயகரமானதாக ஆகி விட்டது. சக மாணவர்களுடன்  சர்வ சாதாரணமாக பழகுவது, விளையாடுவது, கொஞ்சிக் குலாவுவது, காதல் காவிய நாயகர்களாக வலம் வருவது, திரையரங்கம் சென்று படம் பார்ப்பது, ஹோட்டல், பார்க், பீச் என்று சுற்றுவது போன்ற அத்துமீறல்கள், ஆபாசங்கள் எல்லாம் இப்போது சாதாரண ஒன்றாகி விட்டது. இப்படிச் சுற்றித் திரியும் பெண் பிள்ளைகளின் கற்பை பற்றி யாராவது தூய்மை வாதம் பேச முடியுமா என்ன? இந்த விஷயத்தில் பெற்றோர் மிகவும் கவணமாக இருக்க வேண்டும்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 66:6)
நம் பிள்ளைகளை நரகை விட்டும் காக்கும் பொறுப்பை நாம் சரியான முறையில் நிறை வேற்ற வேண்டும். ஆனால் நம்மில் பலர் இந்த உலக ஆசையையும், அதன் மோகத்தையும் தான் பெரிதாக நினைத்து அதற்காகவே நம் வாழ்வை முற்படுத்துகின்றோம்.
ஆனால் நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே தேர்வு செய்கிறீர்கள். மறுமையே சிறந்ததும்,நிலையானதுமாகும். (அல்குர்ஆன் 87:16,17)
ஆட்டோ பயணங்களினால் ஆட்டமிழக்கும் வாழ்கைப் பயணம்.
நமது பெற்றோர்களில் பலர் தங்களது பருவமடைந்த வயதுப் பெண்களை கல்லூரிக்கு அவர்கள் செல்லும் போது தன்னந்தனியாக, வேனில் அல்லது ஆட்டோவில் அனுப்பி வைக்கின்றனர். சிலர் ஆட்டோவில் நான்கைந்து சக வயதுப் பெண்களுடன் அனுப்பி வைக்கின்றனர். வாகன ஓட்டுனர்களும் இளம் வயது வாளிபர்கள் தான் என்பதை நம் பெற்றோர் கவணிக்க தவறுகின்றார்கள்.
பிள்ளைகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தின் வேகத்தைவிட அதில் ஒலிக்கும் பாடல்களின் வேகமும், சப்தமும் பிள்ளைகளை மெய் மறந்து ரசிக்கவும், ருசிக்கவும் வைக்கின்றது. ஆபாச வார்தைகளை ஆசுவாசமாக அள்ளித் தெளிக்கும் விரச வரிகளை நம் பிள்ளைகள் நாளும் ரசிக்கும் சந்தர்பத்தை நாமே ஏற்படுத்திக் கொடுக்கின்றோம்.
விரசப் பாடலில் அழிவது யார்? நம் பிள்ளைகளும் அவர்களின் எதிர்காலமும் தான் இப்படிப் பட்ட பயணம் தேவைதானா? இப்போது சிந்தியுங்கள். இப்படிப்பட்ட படிப்பு தேவையா என்று! 
இன்னும் ஒரு சாரார் தங்கள் பிள்ளைகளை பஸ்களில் படிப்புக்காக அனுப்பி விடுகின்றார்கள். அதிலும் பலவிதமான பிரச்சினைகளும் சிக்கள்களும் தலை விரித்தாடுவதை நாம் காணமுடிகின்றது. படிப்புக்காக வெளியூர்களுக்குச் செல்லும் போது, குழுவாகச் செல்லும் இப்பெண்களின் ஆட்டம் கொடிகட்டிப் பறக்கின்றது. ஆர்ப்பரித்துச் சப்தமிடுவது, பாடல்களைப் பாடி ஆடுவது, கும்மாளமிடுவது என கல்லூரிப் பெண்கள் நடத்தும் அத்துமீறல்களுக்கு அளவே இல்லை.
ல்விப் பயணமும்காதல் பயணமும்.
கல்லூரிக்குச் செல்லும் வயதுப் பெண்களின் அவலம் இத்துடன் நிற்கவில்லை. வெளி ஊர்களுக்கு டியுஷன் வகுப்பு என்ற பெயரில் காதல் பயணம் செய்யும் பிள்ளைகள் நம்மில் பலர் இருப்பதை நம் பிள்ளைகளின் உள்ளங்கள் கண்டிப்பாக மறுக்காது என்பது உண்மையே! காதல் பயணம் என்ற பெயரில் கற்பைப் பகிர்கின்ற, உள்ளத்தை உறையச் செய்யும் படுபாதகச் செயலும் பகிரங்கமாகவே இச்சந்தர்பங்களில் நடைபெறுகின்றது.
இவ்வளவு பெரிய கொடிய செயலுக்கு வித்திடுபவர்கள் யார்? நாம் தான் நமது கண்காணிப்பின்மை தான் என்பதே உண்மை.
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும்கற்களுமாகும். அதன் மேல் கடுமையும்கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள். (அல்குர்ஆன் 66:6)
இன்றைய நாட்களில் நம்மில் பலர் மேற்கண்ட குர்ஆன் வசனம் சொல்லும் செய்தியை மறந்துவிட்டோம். நாம் விரும்பும் உயர் கல்விக்காக நமது பிள்ளைகளை நரகத்தின் விரகுக் கட்டைகளாக நாமே மாற்றிவிடுகின்றோம்.
இருபது வருடங்கள் வளர்த்து ஆளாக்கிவிட்ட பெற்றோரை தூக்கியெறிந்து விட்டு கை கொண்ட காதலனுடன் காமப் பயணம் மேற்கொள்ளும் அவலம் தினமும் நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
இலங்கையின் வடக்குக், கிழக்கு, தெற்கு, மேற்கு என்று எத்திசையில் வாழும் முஸ்லீம்களாக இருந்தாலும் இந்நிலை தொடர்ந்து கொண்டிருப்பதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன் கொழும்பு தெகிவளையில் நட்சத்திர விடுதியில் வைத்து கைது செய்யப்பட்ட 80க்கும் மேற்பட்ட விபச்சார யுவதிகளில் 30க்கும் அதிகமானவர்கள் முஸ்லிம்கள் அதிலும் குறிப்பாக ஹிஜாப் என்ற பெயரில் முகத்தை மூடி தங்கள் உருவத்தை மறைத்துக் கொண்டவர்கள். கல்லூரி மாணவியர் என்பதுதான் ஆச்சரியம்.
எனவே இத்தகைய விளைவுகளைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் ஒரு பெண்ணுக்கு அவசியத் தேவை உயரிய கற்பா? அல்லது உயர் கல்வியா என்று சிந்திக்க வேண்டும்.
நம் பிள்ளை கற்பிழந்தால் அல்லது மதம் மாறினால் அவள் செய்த பாவத்தில் நமக்குப் பங்கில்லை என்று நாம் தப்ப முடியாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே. தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்கüன் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி)தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள்தன் எஜமானின் உடைமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான். (நூல்: புகாரி 2409)
இந்த ஹதீஸின்படி பெற்றோர்களும் அந்தப் பாவத்தின் சுமையை மறுமையில் சுமந்தே ஆக வேண்டும்.
ஒரு பெண்ணை உயர் கல்வி படிக்க வைக்கும் போது சாதகங்களை விட, பாதகங்களைத் தான் பார்க்க வேண்டும். அப்படியே ஒருவர் தமது மகளைப் படிக்க வைக்க வேண்டுமானால்…
# நமது கண்காணிப்பிற்காக பாடசாலை அல்லது பல்கலைக் கழகங்கள் ஊருக்குள்ளேயே அமைந்திருக் வேண்டும்.
# உள்ளூராக இருந்தாலும், வெளியூராக இருந்தாலும் முடிந்தவரை பெண்கள் மட்டும் படிக்கும் பாடசாலையாக இருக்க வேண்டும். (அதிலும் ஆண் நிர்வாகிகள் ஆட்டம் போடுகின்ற, வயதுப் பெண்களிடம் சில்மிஷம் செய்கின்ற பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்)
# தூரத்தில் இருந்தால் ஆட்டோ, அல்லது வேன் போன்றவற்றில் தனியாக பாடசாலைக்கு அனுப்புவதைத் தவிர்க்க வேண்டும்.
# இந்தப் பெண்கள் ஆட்டோ அல்லது வேனில் பயணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் ஓட்டுனர் திருமணம் முடித்த, அல்லது வயதானவர்களாக, ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டும்.
இது போன்ற நிபந்தனைகளுக்கு ஒத்து வரவில்லையென்றால் பத்தாம் வகுப்புடன் அல்லது சாதாரண தரத்துடன் பெண்கள் கல்வியை நிறுத்திக் கொண்டு மார்க்கக் கல்வியைப் பயிற்றுவிப்பது அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையைப் பயக்கும்.
ஒரு சில கட்டங்களில் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பது சிரமமாக உள்ளது. பட்ட மேல்படிப்பு படித்த பெண்களுக்கு அதைவிடச் சிரமமாக உள்ளது. அப்படியே மாப்பிள்ளை அமைந்தாலும் ஒரு குழந்தை, இரு குழந்தைகளுடன் விவாக ரத்தில் போய் முடிகின்றது.
எனவே இப்படிப்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும் பெண்களின் கல்லூரிப் படிப்பின் சாதக பாதகங்களைப் பெற்றோர்கள் தூக்கிப் பார்க்க வேண்டும். அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும்.
இங்கு நாம் எழுதியுள்ள விஷயங்களை வைத்து மேற்படிப்பு படித்தவர்கள் அனைவரும் தப்பானவர்கள், தவறியவர்கள் என்று புரிந்து கொள்ளக் கூடாது. நாட்டு நடப்பை எடுத்துக் காட்டுவதற்காகத் தான் இவ்வாக்கம் எழுதப்பட்டுள்ளது.
இங்கு எழுதப்பட்டவை அனைத்தும் நடப்பவை, நடந்து கொண்டிருப்பவை. கசப்பாக இருந்தாலும் உண்மையை நாம் ஒத்துக் கொண்டே ஆக வேண்டும்.

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...