அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


ஜிஹாத் - ஓர் ஆய்வு.(தொடர் - 10) தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஜிஹாத்.


(சகோதரர் பி.ஜெ அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஒரு மாத இதழில் ஜிஹாத் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் தொடராக வெளியிட்ட இந்த ஆக்கம் அனைவரையும் கவர்ந்தது மட்டுமன்றி ஜிஹாத் பற்றிய தெளிவான புரிதலையும் கொடுத்தது. காலத்தின் தேவை கருதி அந்தத் தொடர் ஆய்வை நமது தளத்தில் வெளியிடுகிறோம். ஒரு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இந்தத் தொடர் வெளியிடப் படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். Rasmin M.I.Sc )

உஸ்மான் (ரலி) அவர்களுக்கு எதிராக ஜிஹாத் பிரகடனம் செய்தவர்கள் வேண்டுமென்றே உஸ்மானைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்திலோ, சொந்தப் பகையின் காரணமாகவோ இவ்வாறு செயல்படவில்லை.


உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிமுறை அநீதி, அக்கிரமம் நிறைந்ததாக இல்லை. ஆனாலும் அவரை எதிர்த்தவர்கள் பார்வையில் சிறு சிறு தவறுகள் அநீதியாக - அக்கிரமமாகத் தெரிந்தது. அதன் காரணமாகவே "அக்கிரமக்கார ஆட்சியை எதிர்த்து ஜிஹாத்'' என்ற அஸ்திரத்தை எடுத்தார்கள். ஆனால் அதன் மறுபக்கமான - ஒரு ஆட்சித் தலைவரின் கீழ் குடிமக்கள் எப்படி நடக்க வேண்டும், ஆட்சியாளருக்கு எதிராக அணி திரள்வதற்கு உரிய காலகட்டம் என்ன? ஒரு ஆட்சியாளருக்கு எது வரை கட்டுப்பட்டு நடக்க வேண்டும் - என்று பெருமானார் (ஸல்) அவர்கள் விதித்துள்ள நெறிமுறைகளை அவர்கள் கவனிக்கத் தவறி விட்டார்கள்.

சுருக்கமாகச் சொல்தென்றால், நல்ல எண்ணத்தில் செய்யப்பட்ட தவறு என்பது தான் உஸ்மான் (ரலி) அவர்கள் செய்ததும், அவர்களை எதிர்த்தவர்கள் நடந்து கொண்ட முறையும்.

(இந்த சமுதாயத்தில்) தலைவர்கள் தோன்றுவார்கள்.  (அவர்களை) அறிந்து (அடையாளங் கண்டு) வெறுப்பீர்கள்.  (அவர்களை) அறிந்து கொள்பவர் (பாவத்தை விட்டு) தப்பித்துக் கொள்வார்.  வெறுப்பவர் விமோசனம் அடைந்து விடுவார்.  எனினும் அவர்களை திருப்தி கொண்டு பின்பற்றுபவர்கள் தான் (விமோசனம் அடைய மாட்டார்கள்.) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அப்போது நபித் தோழர்கள், அவர்களை எதிர்த்து நாங்கள் போராடவா? என்று கேட்டனர்.  அதற்கு நபி (ஸல்) அவர்கள், தொழுது கொண்டிருக்கும் வரை (அவர்களுடன் போராட) வேண்டாம் என்று பதிலளித்தார்கள். 

அறிவிப்பவர் : உம்மு ஸலமா (ரலி),  நூல் : முஸ்லிம் 3445,3446

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், "எனக்குப் பிறகு (ஆட்சியதிகாரத்தில் உங்களை விடப் பிறருக்கு) முன்னுரிமை வழங்கப் படுவதையும் நீங்கள் வெறுக்கின்ற சில விஷயங்களையும் பார்ப்பீர்கள்'' என்று சொன்னார்கள்.  "அப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் கட்டளையிடுகின்றீர்கள். அல்லாஹ்வின் தூதரே?'' என்று மக்கள் கேட்க, நபி (ஸல்) அவர்கள், "(ஆட்சியாளர்களான) அவர்களுக்கு அவர்களது உரிமையை வழங்கி விடுங்கள்.  உங்கள் உரிமையை அல்லாஹ்விடம் கேளுங்கள்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),  நூல்: புகாரி 7052

மேற்கண்ட ஹதீஸ்கள் உஸ்மான் (ரலி) அவர்கள் ஆட்சியில் நடைபெற்ற நிகழ்வுகளைப் பிரதிபலிக்கின்ற வகையிலும், அதற்கான தீர்வுகளைத் தத்ரூபமாக தருகின்ற வகையிலும் அமைந்துள்ளதைப் பார்க்க முடிகிறது.

நன்மையையும், தீமையையும் (ஆட்சியில்) காணும் போது, தீமையைக் காண்பவர் அதைக் கண்டிக்க வேண்டும்; அவ்வாறு கண்டித்தால் தான் மறுமையில் தப்பித்துக் கொள்ள முடியும்; அந்தத் தீமையில் திருப்தியடைந்தால் தண்டனை தான் கிடைக்கும் என்பதை நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். அதற்கேற்பத்தான் அலீ (ரலி) போன்ற முக்கிய சஹாபாக்கள் எல்லாம் உஸ்மான் (ரலி) அவர்களைக் கண்டித்திருக்கிறார்கள். தீமை என்று தெரிந்ததை அவர்கள் திருப்திப்பட்டுக் கொள்ளவில்லை. அதே போல அதிபருக்கு எதிராகப் படைதிரட்டி வந்தவர்களையும் தடுத்திருக்கிறார்கள். அவர்களின் செயலையும் சரி காணவில்லை. போர் (ஜிஹாத்) தொடுக்கும் அளவிற்கு உஸ்மான் (ரலி) அவர்களின் நடவடிக்கை வரம்பு மீறி விடவில்லை என்பதையும் எடுத்துரைக்கிறார்கள்.

ஆனால் உஸ்மான் (ரலி) அவர்களை எதிர்த்து ஜிஹாத் செய்ய வந்தவர்கள், அவர்களைக் கொல்லுமளவிற்குச் சென்றவர்கள், "தொழுகையை நிலைநாட்டும் வரை போர் செய்யக் கூடாது'' என்ற விதிமுறையை கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல, முஸ்லிமில் இடம்பெற்றுள்ள மற்றொரு ஹதீஸில் பெருமானார் (ஸல்) அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.

"அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் தீமையில் இருந்தோம்.  நாங்கள் எந்த நன்மையில் இருக்கின்றோமோ அந்த நன்மையை (இஸ்லாத்தை) அல்லாஹ் கொண்டு வந்தான்.  இந்த நன்மைக்குப் பிறகு தீமை உண்டா?'' என்று நான் கேட்டேன்.  அதற்கு அவர்கள் ஆம் என்றார்கள்.  "அந்தத் தீமைக்குப் பிறகு நன்மை உண்டா?'' என்று கேட்டேன்.  அதற்கு அவர்கள் ஆம் என்றார்கள்.  "அது எப்படி இருக்கும்?'' என்று நான் வினவினேன்.  அதற்கு அவர்கள், "எனது நேர்வழியைக் கொண்டு திருந்தாத எனது நடைமுறையைப் பின்பற்றாத தலைவர்கள் தோன்றுவார்கள்.  அவர்களில் மனித உடல்களையும், ஷைத்தானின் உள்ளங்களையும் கொண்ட மனிதர்கள் ஆட்சி செலுத்துவார்கள்.'' என்று பதிலளித்தார்கள்.  "அல்லாஹ்வின் தூதரே! அந்த நிலையை அடைந்து விட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டேன்.  அதற்கு அவர்கள், "அந்த ஆட்சியாளர் உன்னுடைய முதுகில் அடித்துத் தாக்கி, உன் பொருளைப் பறித்துக் கொண்டாலும் நீ அவருக்கு செவி சாய்த்துக் கட்டுப்படு!'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைஃபத் அல் யமான் (ரலி),  நூல்: முஸ்லிம் 3435

இந்த நபிமொழி ஆட்சியாளருக்குக் கட்டுப்படுவது எந்தளவுக்கு முக்கியம் வாய்ந்தது, எது வரை கட்டுப்படுவது என்பதைத் துல்லியமாக விளக்குகிறது.

முஸ்லிமில் இடம் பெற்றுள்ள மற்றொரு ஹதீஸ் எச்சரிக்கை செய்வதைப் பாருங்கள்.

"யார் ஓர் ஆட்சியாளரிடத்தில் பைஅத் செய்து, அவரிடத்தில் கைப்பிடித்து உளமாற உறுதிமொழி வழங்கி விடுகின்றாரோ அவர் இயன்ற வரை அந்த ஆட்சியாளருக்குக் கட்டுப் படுவாராக! அவருக்குப் போட்டியாக இன்னொருவர் கிளம்பி விட்டால் அந்தப் போட்டியாளரின் கழுத்தைத் துண்டித்து விடுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்:  அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி), நூல்:  முஸ்லிம் 3431

"நாங்கள் உற்சாகமாக இருக்கும் போதும், சிரமத்திலிருக்கும் போதும் எங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை வழங்கப் படும் போதும் கூட (ஆட்சியாளரின் கட்டளைக்கு) செவியேற்று, கட்டுப்பட்டு நடப்போம்; ஆட்சியதிகாரத்தில் இருப்பவர்களுடன் நாங்கள் சண்டையிட மாட்டோம்;எந்த விஷயம் பகிரங்கமான இறை மறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை நாங்கள் ஆட்சியாளரிடம் கண்டாலே தவிர'' என்று எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கியதும் அவர்கள் எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும்.

அறிவிப்பவர்: உப்பாதா பின் அஸ்ஸாமித் (ரலி),  நூல்: புகாரி 7056

ஒரு இஸ்லாமிய ஆட்சித் தலைவருக்குக் கட்டுப்படுவதின் ஒழுங்குகளையும், ஜிஹாத் என்ற பெயரில் ஆட்சிக்கெதிராக கலகம், குழப்பத்தை ஏற்படுத்துவதின் ஆபத்தையும் மேற்கண்ட நபிமொழி தெளிவாக எடுத்தியம்புகின்றது.

எனவே ஜிஹாத் (கிதால்) சம்பந்தமான இஸ்லாத்தின் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்து விட்டு மறுபக்கத்தை கவனிக்கத் தவறியதன் விளைவு தான் சத்திய சஹாபாக்களில் ஒரு பிரிவினர் கூட உஸ்மான் (ரலி) அவர்களுக்கு எதிராக களமிறங்கியதும், கொலைப் பழியை சுமந்ததும்.

பெருமானார் (ஸல்) அவர்களின் ஹஜ்ஜத்துல் விதா எச்சரிக்கை எந்தளவுக்கு முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் இந்த இடத்தில் கவனிக்க வேண்டும்.

முஸ்லிம்கள் படிப்பினை பெறுவதற்கு உஸ்மான் (ரலி) அவர்களின் கொலை ஒன்றே போதும். முஸ்லிம் அரசாங்கத்திற்கு எதிராக அதன் அதிபர் என்ன தான் அக்கிரமம் செய்தாலும் ஆயுதம் தாங்குவதற்கு அனுமதியில்லை. ஜிஹாதை வலியுறுத்தும் எத்தனை ஆதாரங்களை அவர்கள் எடுத்துக் காட்டினாலும் அவை இதற்குப் பொருந்தாது.

ஒரு அதிபர் என்ன தான் அநியாயம் செய்தாலும் அவர் தொழுகையை நிலைநாட்டும் வரை ஆயுதம் தூக்கக் கூடாது என்ற நபிகள் நாயகத்தின் எச்சரிக்கையை இவர்கள் விளங்கியிருந்தால் ஜிஹாதின் பெயரால் நடந்த முதல் படுகொலை தவிர்க்கப்பட்டிருக்கும்.

ஓரிறைக் கொள்கையை விட்டு விலகாத வரை எவருக்கு எதிராகவும் ஆயுதம் தூக்கக் கூடாது என்பதை விளங்கியிருந்தால் உஸ்மான் (ரலி) படுகொலை தவிர்க்கப்பட்டிருக்கும். தவறாகப் புரிந்து கொண்ட ஜிஹாத் வெறி உஸ்மான் (ரலி), பத்து சொர்க்கவாசிகளில் ஒருவர் என்பதையும், நபிகள் நாயகத்தின் மருமகன் என்பதையும், நபிகள் நாயகம் அவர்களின் திருவாயால் அவர் பெற்ற எண்ணற்ற நற்சான்றுகளையும் அலட்சியப்படுத்தும் அளவுக்கு அவர்களைக் கொண்டு சென்று விட்டது.

சட்டதிட்டங்களிலும் உட்பிரிவுகளிலும் முஸ்லிம்களுக்கிடையே அன்று கருத்து மோதல்கள் இருந்தன. இன்றும் இருக்கின்றன. இதன் காரணமாக ஒருவர் தலையை ஒருவர் வெட்டிச் சாய்க்கும் நிலை ஏற்படவில்லை. ஆனால் ஜிஹாத் என்பதைத் தவறாகப் புரிந்து கொண்டதால் தான் ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்க்கும் நிலை ஏற்பட்டது என்பதற்கு உஸ்மான் (ரலி) கொலை மட்டுமின்றி ரத்தக் கறை படிந்த வரலாறுகளின் பட்டியல் நீள்கின்றது.

ஜிஹாதைத் தவறாகப் புரிந்து கொண்டதால் இஸ்லாமிய வரலாறு சந்தித்த மேலும் பல அதிர்ச்சிகளைத் தொடர்ந்து பார்ப்போம் இன்ஷாஅல்லாஹ்.

(குறிப்பு: இந்தத் தொடரில் இடம்பெற்றுள்ள வரலாற்றுக் குறிப்புகள், இமாம் இப்னு கஸீர் (ரஹ்) அவர்கள் எழுதிய இஸ்லாமிய வரலாற்று நூலான அல் பிதாயா வன் நிஹாயா மற்றும் அத்தபரீ, அல் இஸ்திஆப், அல் இஸாபா, தஹ்தீபுத் தஹ்தீப், தபக்காத்து இப்னு சஅத், தப்ஸீர் இப்னு கஸீர் ஆகிய நூற்களில் இடம்பெற்றவைகளாகும்)

இன்ஷா அல்லாஹ் தொடரும்.........

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...