ஹலாலான இறைச்சி கிடைக்காவிட்டால்?

ஐரோப்பாவில் ஹலால் இறைச்சி கிடைப்பது கடினம். எனவே இறைச்சியை வாங்கி பிஸ்மில்லாஹ் கூறினால் அது ஹலால் ஆகிவிடுமா?




அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தவற்றையே ஒரு முஸ்லிம் உண்ண வேண்டும். இதற்கு மாற்றமான முறையில் அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்று குர்ஆனும் நபிமொழியும் கூறுகின்ற.


அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்! அது குற்றம்.
அல்குர்ஆன் (6 : 121)

ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! எங்களிடம் (கூரான) கத்திகள் இல்லையே'' ன்று கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "இரத்தத்தைச் சிந்தக்கூடிய எதுவானாலும் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு (அதனால் அறுக்கப்பட்டு) விட்டால் அதை நீங்கள் உண்ணலாம் என்று கூறினார்கள்.
நூல் : புகாரி (5503)
இந்த ஒழுங்கு முறை பேணப்படாமல் அறுக்கப்பட்டவற்றை உண்பவர் பிஸ்மில்லாஹ் என்று கூறிவிட்டால் அது ஹலாலாகி விடும் என்ற வாதம் தவறானது.
உண்ணக்கூடியவர் பிஸ்மில்லாஹ் கூறிவிட்டால் அது ஹலாலாகிவிடும் என்றால் அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்! என்ற தடையை இறைவன் இடவேண்டிய அவசியம்இல்லை.

அல்லாஹ்வின் பெயர் கூறப்படாமல் அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை உண்ணக் கூடாது என்ற இறைவனுடைய கட்டளையைச்செயல்படுத்த முடியாது. ஏனென்றால் இது சட்டமாக இருந்தால் ஹராமான முறையில் அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை எல்லோரும் பிஸ்மில்லாஹ் கூறி உண்பார்கள். இதைத் தவிர்க்க வேண்டும் என இறைவன் கூறியதற்குப் பொருள் இல்லாமல் போகின்றது. எனவே இது தவறான வாதம்.
இந்த வாதத்திற்கு ஆதாரமாக சிலர் பின்வரும் செய்தியை காட்டுகின்றனர்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
ஒரு கூட்டத்தார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், "(கிராமத்திலிருந்து) சிலர் எங்களிடம் இறைச்சி கொண்டு வருகிறார்கள். (அதை அறுக்கும் போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதா,இல்லையா என்று எங்களுக்குத் தெரியாது. (இந்நிலையில் நாங்கள் அதை உண்ணலாமா?)'' என்று கேட்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "நீங்கள் அதன் மீது அல்லாஹ்வின் பெயர் சொல்லி அதை உண்ணுங்கள்'' என்று பதில் சொன்னார்கள். கேள்வி கேட்ட கூட்டத்தார் இறை மறுப்பை அப்போதுதான் கைவிட்டுப் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்தார்கள்.
நூல் : புகாரி (5507)
இந்தச் செய்தியில் "நீங்கள் அதன் மீது அல்லாஹ்வின் பெயர் சொல்லி அதை உண்ணுங்கள்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். சமீபத்தில் இஸ்லாத்தில் வந்த முஸ்லிம்கள் வழங்கும் இறைச்சிகளுக்கு இச்சட்டத்தை நபியவர்கள் கூறியுள்ளார்கள். 

முஸ்லிமாக இருப்பவர் பிஸ்மில்லாஹ் கூறித் தான் அறுத்திருப்பார் என்று நல்லெண்ணம் வைக்க வேண்டும். அவர் இஸ்லாத்திற்கு வந்த பிறகும் அவருடைய உணவில் சந்தேகம் கொள்ளுதல் கூடாது. இதை நபியவர்கள் அவர்கள் அளித்த இறைச்சியை உண்ண அனுமதியளித்து உணர்த்துகிறார்கள். 

இந்தச் செய்தியில் உண்பவர் பிஸ்மில்லாஹ் கூற வேண்டும் என்று நபியவர்கள் கூறுகிறார்கள். இது இறைச்சியை ஹலாலாக்குவதற்காக கூறப்படும் பிஸ்மில்லாஹ் அல்ல. உணவு உண்பவர் எந்த உணவை உண்டாலும் உண்பதற்கு முன்பு பிஸ்மில்லாஹ் கூற வேண்டும். அதைத் தான் நபியவர்கள் இங்கே குறிப்பிடுகிறார்கள்.
உண்ணுவதற்கு இந்த இறைச்சியைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றால் நிர்பந்தம் என்ற அடிப்படையில் இந்த இறைச்சியை சாப்பிடுவது மன்னிக்கப்படும். வேறு எந்த உணவும் கிடைக்காத நேரத்தில் இது மட்டுமின்றி பன்றி இறைச்சி இரத்தம் போன்றவை கூட மன்னிக்கப்படும்.
ஆனால் தற்போது ஐரோப்பாவில் இந்த இறைச்சியைத் தவிர்த்து வேறு எந்த உணவும் கிடைக்காது என்ற நிலை இல்லை. கண்டிப்பாக சைவ உணவுகள் கிடைக்கும். மீன் போன்ற கடல்வாழ் உயிரினங்களும் கிடைக்கத்தான் செய்கின்றது. எனவே அங்கு ஹராமான முறையில் அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை உண்ண மார்க்கத்தில் அனுமதியில்லை.

Post a Comment

0 Comments