மாநபி கண்ட மகத்தான மக்கா வெற்றி

 குரங்கு கையில் பூமாலையைப் போல் குறைஷிகள் கையில் புனித ஆலயம் கஅபா மாட்டிக் கொண்டிருந்தது. முஹம்மத் (ஸல்) அவர்கள் ஏகத்துவத்தை எடுத்துரைக்க ஆரம்பித்ததும் நபியவர்களும் அவர்களது கொள்கையை ஏற்றுக் கொண்டவர்களும் புனித கஅபாவில் நுழைவதற்கும் அங்கு தொழுவதற்கும் தடை விதிக்கப்பட்டனர். மீறிச் சென்றால் தாக்கப்பட்டனர்.
 
குறைஷிகளின் இந்த அட்டூழியம் ஹிஜிரி ஆறாம் ஆண்டு வரை தொடர்ந்து அதன் உச்சக்கட்டமாக உம்ரா செய்ய வந்த மக்கா மண்ணின் மைந்தரான நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதன் விளைவாக ஏற்பட்டது தான் ஹுதைபிய்யா உடன்படிக்கை! மரத்தின் கீழ் உதயமான இந்த உடன்படிக்கை தந்த சுவையான கனி தான் மக்கா வெற்றியாகும்.

அந்த வெற்றி வரலாற்றை இப்போது பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்கள் மக்கா மீது படையெடுப்பது என்று ரகசியமாக முடிவு செய்கின்றார்கள். ஆனால் அந்த ரகசியச் செய்தி மக்காவிற்கு ஒரு கடிதத்தின் வாயிலாகக் கடத்தப்படுகின்றது என்ற இறை அறிவிப்பு நபி (ஸல்) அவர்களுக்கு வருகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் ஸுபைர் பின் அவ்வாம் அவர்களையும் மிக்தாத் பின் அஸ்வத் அவர்களையும் "நீங்கள் "ரவ்ளத்து காக்' எனும் இடம் வரை செல்லுங்கள். ஏனெனில் அங்கு ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கும். அதை அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று கூறி அனுப்பினார்கள். (அவ்வாறே) நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்து கொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தோடின. 

இறுதியில் நாங்கள் "ரவ்ளா''எனும் அந்த இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு (சிவிகைப்) பெண்ணைக் கண்டோம். நாங்கள் (அவளிடம்) "கடிதத்தை வெளியே எடு'' என்று கூறினோம். அவள் "என்னிடம் கடிதம் எதுவுமில்லை'' என்று சொன்னாள். நாங்கள் "ஒன்று நீயாகக் கடிதத்தை எடுத்து (கொடுத்து)  விடு இல்லையேல் (உன்) ஆடையை நாங்கள் கழற்றி (சோதனையிட்டு) விடுவோம்'' என்று சொன்னோம். 

உடனே அவள் (இடுப்பு வரை நீண்டிருந்த) தனது சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றோம். அதில் ஹாத்திப் பின் அபீ பல்தஆ அவர்கள் மக்கா வாசிகளான இணை வைப்போரில் (பிரமுகர்கள்) சிலருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (ரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்ததைக் கண்டோம். 

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஹாத்திபே! என்ன இது?'''என்று கேட்டார்கள். ஹாத்திப் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! என் விஷயத்தில் அவசரப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள். நான் குறைஷிகளில் ஒருவனாக இருக்கவில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவனாகவே இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களுடைய வீட்டாரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கின்றார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால் (இணை வைப்பவர்களான) மக்காவாசிகளுக்கு நான் உபகாரம் எதையாவது செய்து அதற்குப் பிரதியுபகாரமாக அவர்கள் அங்குள்ள என் (பலவீனமான) உறவினர்களைக் காப்பாற்றட்டும் என்று விரும்பினேன்.  நான் என் மார்க்க(மான இஸ்லா)த்தை விட்டு வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ இஸ்லாத்தைத் தழுவிய பின் இறை மறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை'' என்று கூறினார்கள். 

(இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இவர் உங்களிடம் உண்மை பேசினார்'' என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள். இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டி விடுகிறேன்!'' என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும் உங்களுக்கென்ன தெரியும்? ஒரு வேளை அல்லாஹ் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களிடம் "நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்து விட்டேன்' என்று கூறி விட்டிருக்கலாம்'' என்று சொன்னார்கள்.

அப்போது அல்லாஹ் பின்வரும் (60-வது) அத்தியாயத்தை அருளினான்: நம்பிக்கை கொண்டோரே! எனது பாதையிலும் எனது திருப்தியை நாடியும் அறப்போருக்குப் புறப்படுவோராக நீங்கள் இருந்தால் எனது பகைவரையும் உங்கள் பகைவரையும் நீங்கள் அன்பு செலுத்தும் உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்! அவர்கள் உங்களிடம் வந்துள்ள உண்மையை மறுக்கின்றனர்.......(60:1)

அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்: புகாரி 4274

இதன் பிறகு நபி (ஸல்) ஹிஜிரி 8ம் ஆண்டு பத்தாயிரம் பேர் கொண்ட படையுடன் புறப்படுகின்றார்கள். ரமளான் மாதம் என்பதால் நோன்பு நோற்றவர்களாகச் செல்கிறார்கள். ஆனால் இடையில் நோன்பைத் துறந்து விடுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தம்முடன் முஸ்லிம்கள் பத்தாயிரம் பேரை அழைத்துக் கொண்டு (மக்கா வெற்றிப் போருக்காக) மதீனாவிலிருந்து மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள். 

இது நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வருகை தந்ததிலிருந்து எட்டரை ஆண்டின் தொடக்கத்தில் நடை பெற்றது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)  நூல்: புகாரி 4276

நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து மக்காவிற்குப்) பயணம் மேற்கொண்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். உஸ்ஃபான் எனும் இடத்தை அடைந்ததும் தண்ணீர் உள்ள பாத்திரம் கொண்டு வரச் செய்து (ரமளானின்) பகற்பொழுதில் மக்கள் காண வேண்டுமென்பதற்காக அதை அருந்தி நோன்பை முறித்துக் கொண்டார்கள். மக்காவை அடையும் வரை நோன்பு நோற்கவில்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 4279

உளவு பார்க்கும் குறைஷியர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணம் மேற்கொண்ட போது அவர்கள் வருகிற செய்தி (மக்கா) குறைஷிகளுக்கு எட்டியது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பற்றிய செய்தியை (உளவு) அறிவதற்காக அபூசுஃப்யான் பின் ஹர்ப் ஹகீம் பின் ஹிஸாம் புதைல் பின் வர்கா ஆகியோர் (மக்காவிலிருந்து) புறப்பட்டனர். அவர்கள் பயணம் மேற்கொண்டு "மர்ருழ் ழஹ்ரான்' என்னும் இடத்திற்கு வந்து சேர்ந்த போது (அங்கே பல இடங்களில் மூட்டப்பட்டிருந்த) நெருப்புகளைக் கண்டனர். அவை அரஃபா(வில் ஹாஜிகள் மூட்டும்) நெருப்புகள் போன்றிருந்தன.

கைது செய்யப்படும் தலைவர்கள்.

அப்போது அபூசுஃப்யான் இது என்ன நெருப்பு? இது அரஃபா நெருப்பைப் போன்றே இருக்கிறதே'' என்று கேட்டார். அதற்கு புதைல் பின் வர்கா "இது ("குபா'வில் குடியிருக்கும் "குஸாஆ' எனப்படும்) பனூஅம்ர் குலத்தாரின் நெருப்புகள்'' என்று கூறினார். உடனே அபூ சுஃப்யான் "(பனூ)அம்ர் குலத்தவரின் எண்ணிக்கை இதை விட மிகக் குறைவாகும். (எனவே அவர்களின் நெருப்புகளாக இருக்க வாய்ப்பில்லை)'' என்று கூறினார். 

அப்போது அவர்கள் மூவரையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காவலர்களில் சிலர் பார்த்து விட்டனர். உடனேஇ அவர்களை அடைந்து அவர்களைப் பிடித்து (கைது செய்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தனர். பின்பு அபூ சுஃப்யான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.

அணியணியாய் முஸ்லிம்கள் அதிர்ச்சியில் அபூசுஃப்யான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவை நோக்கி முன்னேறிச்) சென்ற போது அப்பாஸ் (ரலி) அவர்களிடம் "குதிரைப் படை செல்லும் போது நெரிசல் ஏற்படக் கூடிய (குறுகலான) இடத்தில் அபூசுஃப்யானை நிறுத்தி வையுங்கள். 

அவர் முஸ்லிம்களைப் பார்க்கட்டும் (அவர்களது படை பலத்தைப் புரிந்து கொள்ளட்டும்)'' என்று கூறினார்கள். (அவ்வாறே) அப்பாஸ் (ரலி) அவர்கள் அவரை (அந்த இடத்தில்) நிறுத்தி வைத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுடன் அனைத்துக் குலத்தாரின் படைகளும் ஒவ்வொன்றாக அபூசுஃப்யானைக் கடந்து செல்லத் தொடங்கின. 

அவரை ஒரு படை கடந்து சென்றவுடன் அப்பாஸே! இவர்கள் யார்? என்று அபூசுஃப்யான் கேட்டார். அதற்கு அப்பாஸ் (ரலி) அவர்கள் இவர்கள் கிஃபாரீ குலத்தினர் என்று பதிலளித்தார்கள். (உடனே) எனக்கும் கிஃபார் குலத்தாருக்கும் என்ன சம்பந்தம்? (எங்களுக்கிடையில் பூசலோ மோதலோ இல்லையே!) என்று அபூசுஃப்யான் கூறினார்.

பிறகு ஜுஹைனா குலத்தார் அவரைக் கடந்து சென்றனர். அப்போது அபூசுஃப்யான் முன் போலவே கேட்டார். பிறகு (அவரைக் கடந்து) சஅத் பின் ஹுதைம் குலத்தினர் சென்றனர். அப்போதும் அதே போல அபூசுஃப்யான் கேட்டார்.

(பிறகு) சுலைம் குலத்தினர் சென்றனர். முன்பு போலவே அபூசுஃப்யான் கேட்டார். (அப்பாஸ் -ரலி- அவர்களும் முன்பு போலவே பதிலளித்தார்கள்.)

ஸஅதின் சாடல்.

கடைசியில் ஒரு (பெரிய) படை முன்னோக்கி வந்தது. அதைப் போன்ற (பெரும்) படையை அபூசுஃப்யான் பார்த்திருக்கவில்லை. "இவர்கள் யார்? என்று அபூசுஃப்யான் கேட்க இவர்கள் தாம் அன்சாரிகள். சஅத் பின் உபாதா இவர்களின் தலைவர். அவருடன் தான் (அன்சாரிகளின்) கொடியிருக்கிறது என்று அப்பாஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

அப்போது சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் அபூசுஃப்யானே! இன்று (தப்பிக்க முடியாத மாபெரும்) யுத்த நாளாகும். இன்று கஅபாவி(ன் புனித எல்லையி)னுள்ளே கூட யுத்தம் அனுமதிக்கப்படும்'' என்று (உணர்ச்சி வசப்பட்டுக்) கூறினார்கள். அதற்கு அபூ சுஃப்யான் "அப்பாஸே! அழிவு நாளில் இது மிக நல்ல நாள் (குறைஷிகளுக்கு ஆபத்தே; என்றாலும் நீங்கள் கருணை காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு)'' என்று கூறினார்.

புகார் செய்யும் அபூசுஃப்யான்.

பிறகு ஒரு படை வந்தது. அது (இது வரை வந்த) படைகளிலேயே மிகவும் சிறியதாக இருந்தது. அவர்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்குரிய கொடி ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்களிடம் இருந்தது.

அபூ சுஃப்யானைக் கடந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்ற போது அவர் சஅத் பின் உபாதா என்ன சொன்னார் என்பது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவர் என்ன சொன்னார்? என்று கேட்டார்கள். இப்படி... இப்படி... எல்லாம் கூறினார் என்று அபூசுஃப்யான் (விவரித்துச்) சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள் "உண்மைக்குப் புறம்பானதை சஅத் கூறி விட்டார்'' என்று சொல்லிவிட்டு "மாறாக இந்த நாள் இறையில்லம் கஅபாவை அல்லாஹ் கண்ணியப்படுத்தும் நாள். கஅபாவிற்குத் திரை போர்த்தப்படும் (முக்கியமான) நாள்'' என்று கூறினார்கள்.

வெற்றிக் கொடி நாட்டிய வீரர் ஜுபைர்.

(ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது எதிரணியில் இருந்த காலித் பின் வலீத் இப்போது நபி (ஸல்) அவர்களின் படையில் ஒரு தளபதியாய் இருந்தார்கள்.)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தக் கொடியினை (மக்காவின் பொது அடக்கத்தலத்திற்கு அருகிலுள்ள) "ஹஜூன்' என்னும் இடத்தில் நட்டு வைக்கும்படி உத்தரவிட்டார்கள்.

(மக்கா வெற்றிக்குப் பின்) அப்பாஸ் (ரலி) அவர்கள் ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்களிடம் அபூ அப்தில்லாஹ்வே! இங்கு தான் அந்தக் கொடியினை நட்டு வைக்கும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்கு உத்தரவிட்டார்கள் என்றார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் அன்றைய தினம் காலித் பின் வலீத் (ரலி) அவர்களை மக்காவின் மேற்பகுதியான "கதா' என்னும் கணவாய் வழியாக (மக்காவிற்குள்) நுழையுமாறு உத்தரவிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் "குதா' வழியாக நுழைந்தார்கள். 

அன்றைய தினம் காலித் பின் வலீத் (ரலி) அவர்களின் குதிரைப் படையினரில் இருவரான ஹுபைஷ் பின் அல் அஷ்அர் (ரலி) அவர்களும் குர்ஸ் பின் ஜாபிர் அல்ஃபிஹ்ரீ (ரலி) அவர்களும் (உயிர்த் தியாகிகளாகக்) கொல்லப்பட்டனர்.

(புகாரி 4280)

வெற்றி அத்தியாயத்தை ஓதியவாறே...

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி "அல்ஃபதஹ்' என்னும் (48வது) அத்தியாயத்தை "தர்ஜீஉ' என்னும் ஓசை நயத்துடன் ஓதிக் கொண்டிருந்தததை நான் கண்டேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)  நூல்: புகாரி 4281

மலரும் நினைவுகள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவில் ஏகத்துவப் பிரச்சாரத்தைச் செய்யும் போது குறைஷிகள் முஹஸ்ஸப் என்ற பள்ளத்தாக்கில் ஒன்று கூடி "முஹம்மதுடன் கொடுக்கல் வாங்கல் கூடாது திருமண சம்பந்தம் செய்யக் கூடாது'' என்று இறை மறுப்பு சபதம் செய்தனர்.

அதை இங்கு நபி (ஸல்) அவர்கள் நினைவு கூர்ந்து "வெற்றி கிடைத்து அந்த இடத்தில் தங்குவோம்' என்று கூறி வாழ்வு சத்திய வாதிகளுக்கு! அழிவு அசத்திய வாதிகளுக்கு என்பதை குறைஷிகளுக்கும் உலகுக்கும் உணர்த்தும் வகையில் பறை சாற்றுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் (மக்கா மீது நமக்கு) வெற்றியளித்தால் இன்ஷா அல்லாஹ்- அல்லாஹ் நாடினால் நாம் தங்கப் போகும் இடம் (பனூ கினானா குலத்தாரின் "முஹஸ்ஸப்' என்னும்) பள்ளத்தாக்கு ஆகும். அந்த இடத்தில் தான் (குறைஷிகள்) இறை மறுப்பின் மீதே (நிலைத்து) இருக்கப் போவதாகச் சூளுரைத்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4284

உள்ளே நுழைந்ததும் உத்தரவு.

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் தலையில் இரும்புத் தொப்பியுடன் (மக்காவினுள்) நுழைந்தார்கள். அதை அவர்கள் கழற்றிய போது ஒரு மனிதர் வந்து "இப்னு கத்தல் என்பவன் கஅபாவின் திரைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கின்றான்'' எனக் கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் "அவனைக் கொன்று விடுங்கள்'' என்று உத்தரவிட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: புகாரி 4286

இவன் போர்க் குற்றவாளி என்பதால் கஅபாவின் திரைச் சீலையைப் பிடித்துத் தொங்கினாலும் மன்னிப்பு இல்லை என்று ஆட்சித் தலைவரான மக்காவின் அதிபரான முஹம்மத் (ஸல்) அவர்கள் இந்த உத்தரவைப் பிறப்பிக்கின்றார்கள்.

அன்சாரிகளுக்கு அதிக மரியாதை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து புறப்பட்டு மக்காவுக்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது ஸுபைர் பின் அல்அவ்வாம் (ரலி) அவர்களை (தமது படையின்) இரு பக்கவாட்டுப் படைகளில் ஒன்றுக்குத் தளபதியாக நியமித்தார்கள்.

காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்களை மற்றொரு பக்கவாட்டுப் படைக்குத் தளபதியாக நியமித்தார்கள். அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை நிராயுதபாணி(களான காலாட்படை)யினருக்குத் தளபதியாக நியமித்தார்கள்.

அவர்கள் அனைவரும் பள்ளத்தாக்கின் மையப் பகுதிக்கு வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் படையின் முக்கியப் பகுதியில் இருந்தார்கள். அப்போது அவர்களது பார்வையில் நான் பட்டபோது.

அபூஹுரைரா நீயா? என்று கேட்டார்கள். நான் "(ஆம்) இதோ வந்தேன் அல்லாஹ்வின் தூதரே!'' என்றேன். அப்போது அவர்கள்இ "ஓர் அன்சாரித் தோழரே (இப்போது) என்னிடம் வருவார் (என்றே நான் எதிர்பார்த்தேன்)'' என்றார்கள்.

(மற்றொரு அறிவிப்பில் "அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்காக அன்சாரிகளைச் சப்தமிட்டு அழைப்பீராக! என்றார்கள். உடனே அன்சாரிகள் வந்து குழுமினர்'' என இடம்பெற்றுள்ளது.)

(எதிரிகளான) குறைஷியர் தம்முடைய பல்வேறு குலத்தாரையும் ஆதரவாளர்களையும் ஒன்றுகூட்டி "இவர்களை நாம் (முதலில் போருக்கு) அனுப்பி வைப்போம். இவர்களுக்கு (வெற்றி) ஏதேனும் கிடைத்தால் (குறைஷியரான) நாமும் இவர்களுடன் சேர்ந்து கொள்வோம். இவர்களுக்குத் தோல்வி ஏற்பட்டால் நம்மிடம் (முஸ்லிம்களால்) கோரப்படுவதை நாம் வழங்கி விடுவோம்'' என்று கூறினர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீங்கள் (ஒற்றுமையாக உள்ள) குறைஷியரின் பல்வேறு குலத்தாரையும் ஆதரவாளர்களையும் காண்கிறீர்கள் (அல்லவா?)'' என்று கூறிவிட்டுஇ தம்முடைய ஒரு கையின் மீது மற்றொரு கையை வைத்து (அவர்களது ஒற்றுமையை) சைகை செய்து காட்டினார்கள்.

பிறகு "நீங்கள் (வெற்றி அடைந்த பின்) என்னை "ஸஃபா' மலைக்கருகில் வந்து சந்தியுங்கள்'' என்று கூறி(விட்டுப் போ)னார்கள்.

அவ்வாறே நாங்கள் நடந்து சென்றோம். எங்களில் ஒருவர் எதிரிகளில் ஒருவரைத் தாக்கி வீழ்த்த நினைத்தால் (தடையின்றித்) தாக்கி வீழ்த்தினார். ஆனால் எதிரிகளில் யாரும் எங்களை நோக்கி எதையும் வீச இயலவில்லை.

 (முஸ்லிம் 3331)

அபூசுஃப்யானின் தோல்விப் பிரகடனம்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸஃபா மலை மீது ஏறினார்கள். அன்சாரிகள் வந்து ஸஃபா மலையைச் சுற்றி நின்று கொண்டனர். அப்போது அபூசுஃப்யான் (ரலி) அவர்கள் வந்து "அல்லாஹ்வின் தூதரே! குறைஷிக் கூட்டத்தார் முற்றாகத் துடைத்தெறியப்படுகின்றனர். இன்றைய தினத்திற்குப் பிறகு குறைஷியர் எவரும் இருக்க மாட்டார்கள்'' என்று கூறினார்கள்.

(முஸ்லிம் 3331)

(ஆம்! ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களின் பிடியில் சிக்காமல் தலை தப்பியவர் இந்த அபூசுஃப்யான் தான். பத்ரில் முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்து உஹதில் பின்னடைவு ஏற்பட்ட போது "வெற்றி தோல்வி என்பது போரில் சகஜம் இதை வைத்து நீங்கள் (முஸ்லிம்கள்) சத்தியத்தில் இருப்பதாக எண்ணிக் கொள்ளாதீர்கள்'' என்று ஜம்பம் பேசியவர். - பார்க்க: புகாரி 3039 4043)

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "யார் அபூசுஃப்யானின் இல்லத்தினுள் நுழைந்து கொள்கிறாரோஇ அவர் அபயம் பெற்றவராவார்'' என்று அறிவித்தார்கள். 

(முஸ்லிம் 3331)

அன்சாரிகளின் பேராசை.

அப்போது அன்சாரிகள் ஒருவருக்கொருவர் இந்த மனிதருக்கு (நபியவர்களுக்கு) தமது ஊர் மீது பற்றும் தம் குலத்தார் மீது பரிவும் ஏற்பட்டு விட்டது என்று பேசிக் கொண்டனர்.

அப்போது இறைவனிடமிருந்து செய்தி (வஹீ) வந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு "வஹீ' வந்தால் அது எங்களுக்குத் தெரியாமல் போகாது. அப்போது "வஹீ' முடிவடையும் வரை எங்களில் யாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிப் பார்வையைச் செலுத்த மாட்டர்.

அவ்வாறே "வஹீ' வந்து முடிந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அன்சாரி சமுதாயமே!' என்று அழைத்தார்கள். அம்மக்கள் "இதோ வந்தோம் அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறினர். "இம்மனிதருக்குத் தமது ஊர் மீது பற்று ஏற்பட்டு விட்டது என்று நீங்கள் சொன்னீர்கள் (தானே)? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் "ஆம்; அவ்வாறு கூறவே செய்தோம்'' என்று சொன்னார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்வாறன்று நான் அல்லாஹ்வின் அடிமையும் தூதரும் ஆவேன். நான் அல்லாஹ்வை நோக்கியும் உங்களிடமும் (நாடு துறந்து) ஹிஜ்ரத் வந்தேன். என் வாழ்வு உங்கள் வாழ்வோடு தான் என் இறப்பு உங்கள் இறப்போடு தான் என்று கூறினார்கள்.

அப்போது அன்சாரிகள் அழுது கொண்டே வந்து அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் கொண்ட பேராசையின் காரணத்தாலேயே அவ்வாறு நாங்கள் கூறினோம் என்று சொன்னார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களது சொல்லை உண்மை என ஏற்று நீங்கள் கூறிய காரணத்தையும் ஏற்கின்றனர்' என்று சொன்னார்கள்.

அப்போது மக்களில் சிலர் அபூசுஃப்யானின் வீட்டை நோக்கிச் சென்றனர். வேறு சிலர் தங்கள் (வீட்டுக்) கதவுகளைப் பூட்டிக் கொண்டனர். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஹஜருல் அஸ்வத்' எனும் கல் இருக்குமிடத்தை நோக்கி வந்து அதைத் தமது கையால் தொட்டு முத்தமிட்டார்கள். பிறகு இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வந்தார்கள்.

அப்போது இறையில்லம் கஅபாவுக்கு அருகிலிருந்த ஒரு சிலையை நோக்கி வந்தார்கள். அதை மக்கள் வழிபட்டு வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் வில்லொன்று இருந்தது. அவர்கள் அந்த வில்லின் வளைவுப் பகுதியை பிடித்திருந்தார்கள். அந்தச் சிலைக்கு அருகில் வந்ததும் அந்த வில்லால் அதன் கண்ணில் குத்திக் கொண்டே "உண்மை வந்துவிட்டது. பொய் அழிந்துவிட்டது'' என்று கூறலானார்கள்.

இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்ததும் "ஸஃபா' குன்றுக்கு வந்து அதன் மீது ஏறி இறையில்லம் கஅபாவைப் பார்த்தார்கள். அப்போது அல்லாஹ்வைப் போற்றிப் புகழவும் அவன் நாடிய சிலவற்றை வேண்டிப் பிரார்த்திக்கவும் ஆரம்பித்தார்கள்.    

(முஸ்லிம் 3331)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில் (ஒட்டகத்தின் மீதமர்ந்த படி) வந்து இறையில்லம் கஅபாவின் முற்றத்தில் இறங்கினார்கள். பிறகு (கஅபாவின் காவலராயிருந்த) உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களிடம் (அவர்களை அழைத்துவரும் படி) ஆளனுப்பினார்கள். உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்கள் சாவியுடன் வந்து கஅபாவின் கதவைத் திறந்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களும் பிலால் (ரலி) உசாமா பின் ஸைத் (ரலி) உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோரும் கஅபாவிற்குள் நுழைந்தார்கள். உள்ளே நுழைந்ததும் கதவைத் தாழிடும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட அவ்வாறே தாழிடப்பட்டது. பின்னர் அவர்கள் நீண்ட நேரம் அதனுள் தங்கியிருந்துவிட்டுப் பிறகு கதவைத் திறந்தார்கள்.

அறிவிப்பவர்:  இப்னு உமர் (ரலி) நூல்: முஸ்லிம் 2576

சிலைகளை உடைக்க உத்தரவு.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்த போது கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்து அவற்றை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச் சிலைகளில் (குறி பார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில் தாங்கியவாறு இருந்த (இறைத்தூதர்களான) இப்ராஹீம் (அலை) இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவங்களும் அகற்றப்பட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள் "அல்லாஹ் இ(தைச் செய்த)வர்களை தன் கருணையை விட்டு அப்பாற்படுத்துவானாக! அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவ்விரு வரும் அம்புகளின் மூலம் குறிபார்ப்பவர்களாக ஒரு போதும் இருந்ததில்லை என்பதை இ(தைச் செய்த)வர்கள் அறிந்தே வைத்திருக்கிறார்கள்'' என்று கூறினார்கள். பிறகு கஅபாவில் நுழைந்தார்கள். அதன் மூலைகளில் (நின்று) தக்பீர் கூறினார்கள் ஆனால் அதனுள் தொழாமல் வெளியேறி விட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 4288

முகங்குப்புற விழுந்த 360 சிலைகள்.

கஅபாவைச் சுற்றிலும் முந்நூற்று அறுபது சிலைகள் இருக்க நபி (ஸல்) அவர்கள் மக்கா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்கள் சத்தியம் வந்து விட்டது. அசத்தியம் அழிந்து விட்டது. சத்தியம் வந்துவிட்டது (இனி) அசத்தியம் மீண்டும் ஒரு முறை பிறக்காது'' என்று கூறிக் கொண்டே தம் கையிலிருந்த குச்சியால் அவற்றை (குத்தி) அடிக்கத் தொடங்கினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நூல்: புகாரி 4287

புனித நகரின் புனித மீட்புரை.

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு "அல்லாஹ்வே மக்காவிற்குப் புனிதத்தை வழங்கியவன். அதற்குப் புனிதத்தை வழங்கியவர்கள் மனிதர்கள் அல்லர். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய எவருக்கும் இங்கே இரத்தத்தைச் சிந்துவதோ இங்குள்ள மரத்தை வெட்டுவதோ அனுமதிக்கப்படவில்லை. அல்லாஹ்வின் தூதர் இங்கு போர் செய்ததனால் இதைப் பொது அனுமதி என்று யாரேனும் கருதினால் "அல்லாஹ் தன் தூதருக்குத் தான் அனுமதி வழங்கினான்; உங்களுக்கு அனுமதி வழங்கவில்லை'' என்று கூறிவிடுங்கள். எனக்குக் கூட பகலில் சிறிது நேரம் மட்டுமே (இங்கு போர் புரிய) அனுமதி அளிக்கப்பட்டது. இன்று அதன் புனிதத் தன்மை நேற்றைய அதன் புனிதத் தன்மையைப் போல் மீண்டு வந்து விட்டது. (இதை இங்கு) வந்திருப்போர் வராதவருக்குச் சொல்லி விடுங்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஷுரைஹ் அல் அத்வீ (ரலி) நூல்: புகாரி 4295

எல்லாம் வல்ல அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்கள் எழுப்பிய அந்த ஆலயத்தை அவர்களது இரத்தமான ஏகத்துவ சந்ததியான முஹம்மத் (ஸல்) அவர்களிடம் ஒப்படைத்தான்.

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பி தொழுகையை நிலை நாட்டி ஸகாத்தும் கொடுத்து அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாதிருப்போரே அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிக்க வேண்டும். அவர்களே நேர் வழி பெற்றோராக முடியும்.

அல்குர்ஆன் 9:17,18

இந்த வசனத்தில் கூறுவது போன்று இணை வைப்பாளர்களின் கையிலிருந்த ஆலயத்தின் நிர்வாகத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைத்தான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த ஆலயத்தை மட்டுமல்ல! அதில் நடைபெறும் ஹஜ் எனும் வணக்கத்தையும் தூய்மைப்படுத்தினார்கள்.

நிர்வாண தவாஃபுக்கு நிரந்தரத் தடை.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: விடைபெறும் ஹஜ்ஜுக்கு முந்தைய வருடம் நபி (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) தலைமையில் மக்களை ஹஜ்ஜுக்கு அனுப்பி வைத்தார்கள். துல்ஹஜ் பிறை பத்தாம் நாள் "எச்சரிக்கை! இந்த வருடத்திற்குப் பின்னர் இணை வைப்பவர்கள் யாரும் ஹஜ் செய்யக் கூடாது. கஅபாவை நிர்வாணமாகத் தவாஃப் செய்யக் கூடாது' என அறிவிக்கச் செய்தார்கள்.

நூல்: புகாரி 1622

கஅபாவின் நிர்வாகத்தைக் கையில் எடுத்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜைத் தவிர அனைத்து வணக்கங்களையும் நிறைவேற்றியிருந்தார்கள். இப்போது அவர்களுக்கு முன் எஞ்சியிருந்தது ஹஜ் என்ற வணக்கம் மட்டும் தான். அதை ஹிஜிரி 10ஆம் ஆண்டு நிறைவேற்றிக் காட்டினார்கள்.

கட்டட அமைப்பில் மாற்றம் இல்லை.

நபி (ஸல்) அவர்கள் கஅபாவைக் கைப்பற்றியதற்குப் பின்னால் கஅபாவின் கட்டட அமைப்பில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.

என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆயிஷா! உன் சமுதாயத்தார் இணைவைப்புக்கு நெருக்கமான காலத்தவர்கள் என்பது மட்டும் இல்லையாயின் கஅபாவை நான் இடித்துவிட்டு (உயர்ந்திருக்கும் அதன் தளத்தைத்) தரையோடு சேர்ந்தாற்போல் ஆக்கியிருப்பேன். மேலும் கிழக்கே ஒன்றும் மேற்கே ஒன்றுமாக அதற்கு இரு வாயில்களை அமைத்திருப்பேன். "ஹிஜ்ர்' பகுதியில் ஆறு முழங்களைக் கூடுதலாக்கியிருப்பேன். ஏனெனில் குறைஷியர் கஅபாவை(ப் புதுப்பித்து)க் கட்டிய போது அதைக் குறைத்து (சற்று உள்ளடக்கிக் கட்டி)விட்டனர்'' என்றார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 2588

நபிகளாரின் காலத்திற்குப் பின்...

யஸீத் பின் முஆவியா ஆட்சிக் காலத்தில் ஷாம்வாசிகள் (அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்களுக்கு எதிராக மக்காவை முற்றுகையிட்டு) போர் தொடுத்த போது இறையில்லம் கஅபா தீக்கிரையானது. அப்போது நடந்தவை நடந்து முடிந்தன. அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள்இ மக்கள் ஹஜ் பருவத்தில் ஒன்று கூடும் வரை இறையில்லத்தை அதே நிலையிலேயே விட்டு வைத்தார்கள். ஷாம்வாசிகளுக்கு எதிராக "மக்களுக்கு எழுச்சியூட்டு வதற்காகவே' அல்லது "அவர்களை ரோஷம் கொள்ளச் செய்வதற்காகவே' அவ்வாறு விட்டு வைத்தார்கள். 

(ஹஜ்ஜை முடித்து) மக்கள் புறப்பட்ட போது அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் "மக்களே! கஅபா விஷயத்தில் எனக்கு ஆலோசனை கூறுங்கள். அதை இடித்து விட்டுப் புதிதாகக் கட்டுவதா அல்லது அதில் பழுதடைந்த பகுதியை மட்டும் செப்பனிடுவதா?'' என்று கேட்டார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் "எனக்கு இது தொடர்பாக ஒரு யோசனை தோன்றுகிறது. அதில் பழுதடைந்த பகுதியை மட்டும் நீங்கள் செப்பனிடுங்கள். மக்கள் இஸ்லாத்தை ஏற்ற போதிருந்த அதே நிலையில் கஅபாவை விட்டு விடுங்கள் மக்கள் இஸ்லாத்தை ஏற்ற போதும் நபி (ஸல்) அவர்கள் இறைத் தூதராக நியமிக்கப் பெற்ற போதும் இருந்த நிலையில் அதன் கற்களையும் (விட்டுவிடுங்கள்)'' என்றார்கள்.

அதற்கு அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் "உங்களில் ஒருவரது இல்லம் தீக்கிரையானால் அதைப் புதுப்பிக்காத வரை அவரது மனம் திருப்தியடைவதில்லை. இந்நிலையில் இறையில்லத்தின் விஷயத்தில் மட்டும் எப்படி (நீங்கள் இவ்வாறு கூறுவீர்கள்)? நான் (கஅபாவை இடித்துப் புதுப்பிப்பதாஇ அல்லது பழுதடைந்ததைச் செப்பனிடுவதா எனும் விஷயத்தில்) என் இறைவனிடம் நன்முடிவு வேண்டி மூன்று முறை பிரார்த்திப்பேன். பிறகு ஒரு முடிவுக்கு வருவேன்'' என்றார்கள்.

நன்முடிவு வேண்டி மூன்று முறை பிரார்த்தித்தபோது இடித்துவிட்டுப் புதுப்பிக்கும் முடிவுக்கு வந்தார்கள். அப்போது மக்கள் முதலில் கஅபாவின் மீது ஏறும் மனிதர் மீது வானத்திலிருந்து ஏதேனும் வேதனை இறங்கி விடும் என அச்சம் தெரிவித்தனர். இறுதியாக ஒரு மனிதர் கஅபாவின் மீதேறி அதிலிருந்து ஒரு கல்லை கீழே தள்ளினார். அவருக்கு எதுவும் நேராததைக் கண்ட மக்கள் ஒவ்வொருவராக (இடிக்கும் பணியில்) ஈடுபட்டு அதைத் தரைமட்டமாக்கினர். பின்னர் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கட்டடப் பணி நிறைவடையும் வரை (இறையில்லத்திற்குத் தாற்காலிகத்) தூண்கள் அமைத்து அவற்றின் மீது திரையும் தொங்க விட்டார்கள்.

மேலும் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஆயிஷா (ரலி) அவர்கள் "என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உன்னுடைய சமுதாய) மக்கள் இறை மறுப்பிற்கு நெருக்கமான காலத்தவர்கள் (புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்கள்) என்றில்லையாயின் - என்னிடம் கஅபாவின் கட்டடத்தை வலுப்படுத்தக் கூடிய அளவு பொருளாதாரம் இல்லை என்பது (ஒரு புறம்) இருக்க - நான் "ஹிஜ்ர்' பகுதியில் ஐந்து முழங்களை கஅபாவுடன் சேர்த்து விட்டிருப்பேன். பின்னர் மக்கள் நுழைவதற்கு ஒரு வாயிலும் வெளியேறுவதற்கு ஒரு வாயிலுமாக (இரு வாயில்களை) அதற்கு அமைத்திருப்பேன்' என்று கூறியதை நான் கேட்டுள்ளேன். இன்று என்னிடம் பொருளாதாரம் இருப்பதைக் காண்கிறேன். மக்களை அஞ்சும் நிலையிலும் நான் இல்லை'' என்று கூறி(விட்டு கஅபாவைப் புதுப்பிக்கலா)னார்கள்.

பின்னர் கஅபாவில் ஹிஜ்ர் பகுதியில் ஐந்து முழங்களைக் கூடுதலாக்கினார்கள்; மக்கள் பார்த்துக் கொண்டிருக்கவே (ஹிஜ்ர் பகுதியை அகழ்ந்து) ஓர் அடித்தளத்தை வெளியாக்கினார்கள். அதன் மீதே கஅபாவை எழுப்பினார்கள். (முடிவில்) கஅபாவின் உயரம் பதினெட்டு முழங்களாக இருந்தது. அதன் உயரத்தை அதிகமாக்கிய பின்பும் அது குறைவாகவே பட்டது.

 எனவே மேலும் பத்து முழங்களை அதிகமாக்கினார்கள்; அத்துடன் உள்ளே நுழைவதற்கு ஒரு வாயில்; வெளியேறுவதற்கு ஒரு வாயில் என இறையில்லத்திற்கு இரு வாயில்களை அமைத்தார்கள்.

அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட போது ஹஜ்ஜாஜ் பின் யூசுஃப் இந்த விவரங்களைத் தெரிவித்து (கலீஃபா) அப்துல் மலிக் பின் மர்வானுக்கு ஒரு கடிதம் வரைந்தார். அதில் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் (ஹிஜ்ர் பகுதியை அகழ்ந்து அங்கிருந்த) ஓர் அடித் தளத்தின் மீது கஅபாவை எழுப்பியுள்ளார்; அதை மக்காவின் நியாயவான்கள் பலரும் பார்த்துள்ளனர்'' என்றும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு அப்துல் மலிக் பின் மர்வான் "நாம் இப்னுஸ் ஸுபைரை எந்த விஷயத்திலும் களங்கப்படுத்த விரும்பவில்லை எனவே அவர் உயர்த்திக் கட்டியதை அப்படியே விட்டு விடுவீராக! "ஹிஜ்ர்' பகுதியிலிருந்து அவர் அதிகப்படுத்தியதை (மட்டும்) பழையபடியே மாற்றி அமைப்பீராக! அவர் புதிதாகத் திறந்து விட்ட வாயிலை மூடிவிடுவீராக!'' என்று பதில் எழுதினார். எனவே ஹஜ்ஜாஜ் ("ஹிஜ்ர்' பகுதிச் சுவரை) இடித்து முன்பிருந்த அமைப்பிற்கே மாற்றி அமைத்தார்.

அறிவிப்பவர்: அதாஉ பின் அபீரபாஹ் நூல்: முஸ்லிம் 2589

இதன் பின்னர் கஅபாவெனும் இந்த இறை ஆலயம் வேறெந்த மாற்றத்திற்கும் உள்ளாகாமல் இன்று முஸ்லிம்கள் கையிலேயே குறிப்பாக ஏகத்துவவாதிகள் கையிலேயே இருந்து வருகின்றது.

தஜ்ஜாலால் நெருங்க முடியாது.

மக்காஇ மதீனா தவிர தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இராது! மதீனாவின் எந்தவொரு வாசலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து அதைக் காவல் புரிந்து கொண்டு இருப்பார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: புகாரி 1881

கஅபாவை நோக்கிப் படை.

ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள்; வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும் போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள்!'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள்; கடை வீதிகளும் இருக்குமே!'' என நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத் தான் செய்வார்கள்; எனினும் பின்னர் அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள்!'' என்றார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 2118

இறுதிக் காலத்தில் கஅபா இடிக்கப்படுதல்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அபிசீனியாவைச் சேர்ந்த மெலிந்த கால்களைக் கொண்ட மனிதர்கள் கஅபாவை இடித்துப் பாழ்படுத்துவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1596

(தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் ஏகத்துவம் மாத இதழில் அறிஞர் ஷம்சுல் லுஹா அவர்களினால் எழுதி வெளியிடப்பட்ட கட்டுரை காலத்தின் தேவை கருதி எந்த மாற்றமும் இன்றி வெளியிட்டுள்ளோம்.)

Post a Comment

0 Comments