அல்லாஹுவின் திருப்பெயரால் -அஸ்ஸலாமு அலைக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கீழக்கரை தெற்கு கிளையின் இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள் https://www.facebook.com/tntjssb


பாவத்தை கழுவும் தொழுகை!


கண்ணியத்துக்குரிய எல்லாம் வல்ல அல்லாஹ் தன்திருமறையில்: 

(முஹம்மதே)வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப் படுவதைக் கூறுவீராக!. தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான்.     (அல்குர்ஆன்: 29:45) 

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அது அவரது (உடலிலுள்ள) அழுக்குகளில் எதையும் தங்க விடுமா? என்று கேட்டார்கள். அவரது அழுக்குகளில் எதையும் தங்க விடாது என்று மக்கள் பதிலளித்தார்கள். இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூஹூரைரா(ரலி) புகாரி 528, முஸ்லீம் 1185)

உடலை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தும் ஆற்றுக்கு தொழுகையை நபி(ஸல்) அவர்கள் உதாரணம் காட்டியுள்ளார்கள். பாவப் பரிகாரத்திற்கு உடலை வருத்த வேண்டும்: நீண்ட தூரம் பயணம் செய்து பாவக் கடனைத் தீர்க்க வேண்டும் என்றெல்லாம் கூறாமல் வீட்டு வாசலில் ஓடுகின்ற நமக்கு எளிதில் கிடைக்கின்ற ஆற்று நீர் உடலை தூய்மைப்படுத்துவதைப் போல எந்த விலையும் கொடுக்காமல் மிகப் பெரும் சிரமும் இல்லாமல் நாம் தொழும் தொழுகை நாம் செய்யக் கூடிய பாவங்களைப் போக்கும் மருந்தாக உள்ளது என்று கூறியுள்ளார்கள்.

மேலும் மறுமை நாளில் வெற்றி பெற்று சொர்க்கத்திற்குச் செல்பவனைப் பற்றி அல்லாஹ் கூறும் போது...


தூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான். (அவன்) தனது இறைவனின் பெயரை நினைத்து தொழுதான் (அல்குர்ஆன்: 87: 14-15)

பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்தும் வழிமுறையாக தொழுகையை இந்த வசனத்தில் இறைவன் விளக்கியிருப்பது தொழுகையின் முக்கியத்துவத்தையும் பாவத்தை இல்லாமல் ஆக்கும் அழகிய வழிமுறையையும் எடுத்துக் காட்டுகிறது. 

மேலும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள்:

யார் எனது (இந்த) உளுவைப் போன்று உளுச் செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரக்அத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும். (உஸ்மான் (ரலி) புகாரி 160)
சாதாரணமாக இரண்டு ரக்அத்கள் தொழுதால் பாவமன்னிப்பு வழங்கப்படுகிறதென்றால் ஐவேளைத் தொழுகையையும் நிறைவேற்றினால் ஆற்றில் ஐந்து தடவை குளித்து உடலை தூய்மை செய்தவனைப் போல் பாவங்கள் அழியும் என்பது தெளிவாகிறது. 

பாவங்கள் என்றால் பெரும் பாவங்கள் உட்பட அனைத்துப் பாவங்களும் தொழுகையின் மூலமாக மன்னிக்கப்படும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. 

ஏனென்றால் நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஐவேளை தொழுகைகள், ஒரு ஜூமுஆவிலிருந்து மறு ஜூமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும். பெரிய பாவங்கள் செய்யாத வரை! (அபூஹூரைரா(ரலி) முஸ்லீம் 394) இவ்வாறு தொழுதால் மட்டும் தான் பாவங்கள் மன்னிக்கப்படுமா? தொழுகைக்குரிய அனைத்து முன்னேற் பாடுகளையும் செய்யும் போதும் பாவங்கள் மன்னிக்கப்படும்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், தவறுகளை மன்னித்து தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா? என்று கேட்டார்கள். மக்கள், ஆம்! அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், சிரமமான சூழ்நிலைகளிலும் உளுவை முழுமையாக செய்வதும் பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்து வைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்கு பின் அடுத்த தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவை தாம் கட்டுப்பாடுகளாகும் என்று கூறினார்கள். (அபூஹூரைரா(ரலி) முஸ்லீம் 421)

இவ்வாறு தொழுகைக்காக செய்யக்கூடியஅனைத்து முயற்சிகளும் நன்மையாக அமைகிறது. தொழுகை பாவப் பரிகாரமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சொர்க்கம் செல்வதற்குத் துணைச் சாதனமாகவும் உள்ளது.
நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு செயலை எனக்குக் கூறுங்கள் எனக் கேட்டார். அப்போது, நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும். அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது. தொழுகையை நிலை நாட்ட வேண்டும். ஸகாத் வழங்க வேண்டும்: உறவினர்களிடம் இணக்கமாக நடக்க வேண்டும் என்று கூறினார்கள். (அபுஅய்யூப் (ரலி) புகாரி 1396)

அல்லாஹ்வுக்கு நிகராக யாரையும் எதையும் ஆக்கக் கூடாது என்ற கட்டளைக்கு அடுத்தபடியாக சொர்க்கம் செல்வதற்கு தொழுகை என்ற வணக்கத்தைத் தான் நபியவர்கள் முன்னிறுத்துகிறார்கள். இது தொழுகையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது.

குர்ஆன் ஹதீஸை விளங்கிய தவ்ஹீதைப் பேசக் கூடிய மக்களிடத்திலும் இந்தக் குறைபாடுகளைக் காண்கிறோம். குர்ஆன் ஹதீஸை மட்டும் பேசக்கூடிய பள்ளிவாயில்களில் கூட சுப்ஹூ தொழுகையில் ஒரு சில நபர்கள் மட்டும் வருவதே இதற்கு சான்று! ஆனால் ஜூம்ஆ தினங்களில் கால் வைக்கக் கூட இடமிருக்காது. இது போன்று நடப்பவர்கள் நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையைக் கவனியுங்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபஜ்ர், இஷா ஆகிய தொழுகைகளை விட நயவஞ்சகர்களுக்கு மிகவும் சுமையான தொழுகை வேறெதுவும் இல்லை. அவ்விரு தொழுகைகளிலுமுள்ள சிறப்பை அவர்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு அவர்கள் வந்து சேர்ந்து விடுவார்கள். தொழுகை அறிவிப்பாளரிடம் இகாமத்; சொல்லுமாறு கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரிடம் மக்களுக்குதலைமை தாங்(கித் தொழுவிக்)குமாறு பணித்து விட்டு பிறகு தீப்பந்தத்தை எடுத்துக் கொண்டு இன்னும் தொழுகைக்குப் புறப்பட்டு வராமலிருப்பவனை எரித்து விட முடிவு செய்தேன். (அபூஹூரைரா(ரலி) புகாரி 657)

நபி(ஸல்) அவர்கள் சுப்ஹூ தொழுகையில் சோம்பல் காட்டுபவர்களை நயவஞ்சகர்களுக்கு ஒப்பிட்டுள்ளார்கள். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தொழுகையே மறுமை வெற்றிக்கும் அடிப்படையாக உள்ளது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியானிடத்தில் மறுமை நாளில் முதன் முதலாக அவனுடைய அமல்கள் சம்பந்தமாக விசாரிக்கப்படுவது தொழுகையைப் பற்றித் தான். அது சரியானால் அவன் வெற்றியடைந்து விடுவான். அது தவறினால் அவன் நஷ்டமடைந்து விடுவான். (அபூஹூரைரா(ரலி) திர்மிதி 378)

தொழுகை தான் ஒருவனுடைய மறுமை வெற்றியைத் தீர்மானிப்பதாக இந்த ஹதீஸ் கூறுகிறது.

மேலும் எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில்:

நம்பிக்கைக் கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள் (அல்குர்ஆன்: 23:1-2)

நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் நுழைந்தார்கள். அப்போது ஒரு மனிதர் நுழைந்து தொழலானார். பிறகு வந்து நபி(ஸல்) அவர்களுக்கு ஸலாம் கூறினார். அவரது ஸலாமுக்கு நபி(ஸல்)பதில் கூறிவிட்டு திரும்பவும் தொழுவீராக! ஏனெனில் நீர் தொழவே இல்லை என்றார்கள். அவர் திரும்ப சென்று முன்பு தொழுதது போலவே தொழுதார். பிறகு நபி(ஸல்) அவர்களிடம் வந்து ஸலாம் கூறினார். அவர்கள் பதில் கூறிவிட்டு திரும்பவும் தொழுவீராக! ஏனெனில் நீர் தொழவே இல்லை என்றனர். இவ்வாறு மூன்று தடவை அவர் செய்தார். முடிவில் அம்மனிதர், உங்களை உண்மையான மார்க்கத்துடன் அனுப்பி வைத்தவன் மேலாணையாக! இதைத் தவிர வேறு நான் அறிய மாட்டேன். எனவே எனக்குக் கற்றுத் தாருங்கள் என்றேன்.அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ தொழுகைக்குத் தயாரானதும் தக்பீர் கூறு! பிறகு உனக்குத் தெரிந்த குர்ஆன் வசனங்களில் எது உனக்கு வசதிப்படுமோ அதை ஓது! பிறகு நிறுத்தி நிதானமாக ரூகூவு செய். பிறகு நிறுத்தி நிதாமாக ஸஜ்தா செய்! பிறகு நிமிர்ந்து நிதாமாக உட்கார்.  இவ்வாறே உன் தொழுகை முழுவதும் செய்! என்றார்கள். ( அபூஹூரைரா(ரலி) புகாரி, முஸ்லிம்,திர்மிதி -279)

மேலும் எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில்:

தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! உங்களுக்காக முன் கூட்டி அனுப்பும் எந்த நன்மையையும் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன். (அல்குர்ஆன்: 2:110)

வணக்கத்துக்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை என மக்கள் (சான்று) கூறும் வரை அவர்களோடு போராட வேண்டுமென்று நான் ஏவப் பட்டுள்ளேன். (லாயிலாஹா இல்லல்லாஹூ என்ற) கலிமாவை அவர்களிடம் கூறி தமது தொழுகையைத் தொழுது நமது கிப்லாவை முன்னோக்கி நாம் அறுப்பது போல் அறுத்து வருவார்களானால் தக்க காரணமின்றி அவர்களுடைய உயிர், பொருளுக்கு சேதம் ஏற்படுத்துவது நமக்கு விலக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய விசாரணை அல்லாஹ்வின் நாட்டத்தைப் பொறுத்ததாகும். (அனஸ்(ரலி) புகாரி 3920

அறிந்தோ அறியாமலோ மனிதன் பாவங்களில் வீழ்ந்து விடுகிறான். அதிலிருந்து மீட்சியடையவும் மனிதன் விரும்புகிறான். தீய எண்ணங்களாலும், கெட்ட சகவாசங்களாலும் மனோஇச்சை அவனை ஆட்டி அலைக்கழிக்கிறது. அதன் கடுமையை வெற்றிக் கொள்ள மனிதனுக்கு வலிமையான ஆயுதம் அல்லது வழிமுறை அத்தியாவசியத் தேவையாக உள்ளது. அவனது அன்றாட வாழ்வைப் பாதுகாக்கும் தலைசிறந்த கேடயமும் மனிதனுக்கு மிகமிக அவசியம்.

அத்தகைய பாதுகாப்புத் தரும் ஆயுதமாக,கேடயமாக சரியான இலக்கை நோக்கி மனிதனை கொண்டு செல்லும் வழிமுறையாக தொழுகை அமைந்துள்ளது. குற்ற உணர்வுகளிலிருந்தும், செயல்களிலிருந்தும் பரிபூரணமாக தன்னை விடுவித்துக் கொள்ள மனிதன் முயலுகிறான். இருப்பினும் முடிவதில்லை. அந்தத் தீய காரியங்களிலிருந்து விடுபடுவதும் ஈடுபடுவதுமாக தடுமாறுகிறான். தன்னம்பிக்கை மாத்திரம் அவனுக்குப் போதுமானதாக இல்லை. திட சிந்தனையில் இடர்ப்பாடுகள் ஏற்பட்டு அவனை திணற வைக்கிறது. தனக்குத் தானே கேலிப் பொருளாகும் தாழ்வுணர்ச்சி அம்மனிதனுக்கு வியாபிக்கத் தொடங்கி கூனிகுறுகிப் போகும் அவலம் ஏற்;படுகிறது.

இந்த கேட்டிலிருந்து மனிதனை மீட்டெடுக்க ஒரு சர்வ வல்லமைமிக்க சக்தியும் அதனோடு ஐக்கியப்படும் கண்ணியமிக்க வழிமுறையும் மனிதர்க்குத் தேவை.

அல்லாஹ் தான் அந்த சர்வ வல்லமைமிக்க சக்தி. தொழுகைதான் அவனோடு ஐக்கியப்படும் கண்ணியமிக்க வழிமுறை.

இந்த தொழுகை இஸ்லாத்தின் அடிப்படையாக அஸ்திவாரமாக அமைந்துள்ளது. 

எவர் இதனை பேணிக் கொள்கிறாரோ அவர் இஸ்லாத்திற்கும் தன் இறை நம்பிக்கைக்கும் வலுவூட்டுகின்றார்.

எவர் இந்த கடமையை நிறைவேற்றுவதில் அலட்சியம் கொள்கிறாரோ அவர் சன்மார்க்க அஸ்திவாரத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார் என்று அர்த்தம்.

முஸ்லிம்களின் அடையாளமாக இருக்கிறது தொழுகை. பிற மக்களிடமிருந்து முஸ்லீமை வேறுபடுத்திக் காட்டும் அடையாளமே தொழுகை. அல்லாஹ்வுக்கான உரிமையாக இருக்கிறது தொழுகை. அவனுக்குள்ள உரிமையை, கடமையை செலுத்தாமல் கவனக்குறைவாலக இருப்பது நன்றி செலுத்தும் முறையா? என்பதை இறைநம்பிக்கைக் கொண்ட ஒவ்வொரு நெஞ்சமும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளது.

மேலும் எல்லாம் வல்ல அல்லாஹ் தன் திருமறையில்:

அவர்களுக்கு பூமியில் நாம் வாய்ப்பளித்தால் தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தும் கொடுப்பார்கள். நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். காரியங்களின் முடிவு அல்லாஹ்வுக்கே உரியது. (அர்குர்ஆன் 22: 41)

அரசியல் சமூக நிர்ப்பந்தங்கள் ஏதுமில்லாத சுதந்திர வாழ்வுதனை நாம் அனுபவித்து வருகிறோம். மனித உரிமைகள் பேசப்பட்டு அது பேணப்படும் இக்கால கட்டத்திலும் மார்க்க அடையாளமாக, மறுமை அடையாளமாக இருக்கும் தொழுகையை கைக்கொள்வதில் முஸ்லிம் சமுதாயத்துக்கு இன்னும் கூச்ச சுபாவமும் அர்த்தமில்லாத சுணக்கமும் எதனால் ஏற்படகிறது என்பது விளங்கவில்லை. தனக்கு நிலையான நன்மைகளைப் பெற்றுத் தரக்கூடிய காரியத்தை ,அருட்கொடையை யாரேனும் வேண்டாமென்று சொல்வார்களா? நன்மையை பெறவதில் அக்கறையின்றி இருப்பார்களா? எப்போது உன்னைப் பக்குவப்படுத்திக் கொள்வாய் இஸ்லாமிய சமுதாயமே!  

மறுமைபோன்ற உயரிய நோக்கமற்றவர்கள் தங்கள் கொள்கையில் உறுதியுடன் இருக்கின்றனர்.நீயோ அவர்களுக்கு இணக்கமாக எப்படி வாழ்வது என்பதைபற்றிய அக்கறைதான் உனக்கு இருக்கிறதே தவிர தனித்து விளங்கும் தன்னிகரற்ற இறை மார்;க்கத்திற்க்கு இணக்கமாக வாழ்வது பற்றி அக்கறை உனக்கு ஏன் இல்லை 

எனவே நாம் தொழுகையைப் பேணி பாவங்கள் மன்னிக்கப்பட்ட மக்களாக சொர்க்கம் செல்வோமாக!

0 comments :

Related Posts Plugin for WordPress, Blogger...